About Me

2020/08/25

நீ வருவாயென

மனதின் வலியும் உதைக்கிறதே மலையாகி/

கனவின் வனப்பும் சுற்றுகின்றதே அனலோடு/

நினைவின் ஈர்ப்பும் நீளுகின்றதே உன்னோடு/

வனப்பான வாழ்வும் கிழிகின்றதே சோகங்களாய்/


எட்டுத் திசைகளும் விரித்தனவே சிறகினை/

ஏக்கத் துடிப்பினில் அலைகின்றேன் தினமதில்/

பூத்திருந்த விழிகளும் வியர்க்கின்றனவே கண்ணீரில்/

பார்த்திருக்கும் பாதைக்குள்ளே காணவில்லையே உனையே/


சொத்தாய் கொண்டேனே உனையே உயிருக்குள்/

காத்திருக்கிறதே நெஞ்சும் நீ வருவாயென/


ஜன்ஸி கபூர் 

2020/08/24

தீராத சோகங்கள்

தீராத சோகங்கள் ஆறாத வடுக்கள்/

தீயாய் பொசுக்குமே நிம்மதியையும் விரட்டி/

தீர்ந்திடுமே குறைகளும் துணிவுடன் முயன்றால்/

தீட்டிடும் இலக்கினில் உறுதியும் உயர்வானால்/

ஈட்டிடுமே வெற்றியும் ஓடிடுமே சோர்வும்/

ஈகைக் கரங்களும் சிவந்திடும் அழகாய்/


ஜன்ஸி கபூர் - 24.08.2020


அன்பே சிறப்பு

உருவம் பார்த்தே மதித்திடும் பண்பு/

மாறிட வேண்டும் மாந்தரின் சிந்தையினில்/

அறிந்திடாரோ அகத்தின் அன்பே உயர்ந்ததென்று/

புரிந்திட்டோர் வாழ்வுக்குள் புளாங்கிதம் கோடி/


ஜன்ஸி கபூர் - 24.08.2020

யாழ்ப்பாணம்


அகலிது ஆக வனைமோ

இரு மனம் இணைந்திட்ட திருமணத்தில்/ 

விருப்போடு இணைந்தவன் நிழல் போலானேன்/

திரு வுயிருக்குள் எனையே இணைத்தவன்/

வருவானே நீண்டிடும் வாழ்நாளில் என்றிருந்தேனே/


ஊர் நீங்கிச் செல்கையில் துளைத்ததுவே/

போரும் துணை யவன் உயிரினையும்/

சிந்தையில் காதலை சிந்தியே காத்திட்டவன்/

வெந்திட்டானே மரணத்துள் எனையும் நீங்கி/


சந்தனக் கட்டையவன் விளையும் பூமிக்குள்/

எந்தன் உடலும் இணைந்திடல் வேண்டுமே/

என்ற துடிப்பினில் அலைகின்றதே விழிகளும்/

மண்ணையும் உயிர்க்கும் குயவனைத் தேடி/


கண்டேனே குயவனையும் கண்ணீரில் கரைந்தேனே/

விண்ணேவிய கணவனுக்கு வேண்டுமே தாழியும்/

வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப்/

பற்றிக்கொண்டு வந்த வெண்பல்லியைப் போல/


ஒத்திசைந்து வாழ்ந்தேனே இல்லறமும் இனித்திட/

ஒன்றாய் வாழ்ந்தவன் இன்றில்லை என்னோடு/

அவனின்றி வாழ்ந்திடாதே எந்தன் உயிரும்/

அவனிக்குள் தனித்திராதே இனித்திட்ட வாழ்வும்/


அவனுடன் நானும் உறைந்திட வேண்டும்/

அகலமான தாழியினை அமைக்கவே உதவிடு/

உடன்கட்டை ஏறிடும் ஒழுக்கத்தினில் வாழ்ந்திட/

உடன்படுமே எந்தன் மாங்கல்ய வரமும்/


ஜன்ஸி கபூர்  

பின்னூட்டம்

Kesavadhas

ஜன்ஸி கபூர் இயல்பான தென்றலென வருடும் நடை சோகச்செய்தியையும் கம்பீரமாகச் சொல்கிறது!

ஆன்றனி இறந்து கிடக்கிறான்;

சீசர் பார்க்கிறான்;

உறைந்து கிடக்கும் இவனது மரணத்திலும் ஒரு பேரொழுங்கு உள்ளது என்பான்(High order of great solemnity in his death)

அதைப் போன்ற ஒரு சூழலை கவிதாயினி யின் எழுத்து காட்டுகிறது!

திருவுயிருக்குள் எனையே இணைத்தவர்

சிந்தையில் காதலைச் சிந்தியவன் வெந்திட்டான்

மண்ணையும் உயிர்க்கும் குயவன்..

என்ன ஒரு வார்த்தை மண்ணுக்கே உயிர் கொடுக்கிறான்!

அருமை!

விண்ணேவிய கணவனுக்கு வேண்டுமே தாழியும்

அவலச் சுவைக்கே அங்கீகாரம் அளிக்கும் கவிதை!

மிகவும் அழகு!

வாழ்த்துகள் கவிஞரே!