இரு மனம் இணைந்திட்ட திருமணத்தில்/
விருப்போடு இணைந்தவன் நிழல் போலானேன்/
திரு வுயிருக்குள் எனையே இணைத்தவன்/
வருவானே நீண்டிடும் வாழ்நாளில் என்றிருந்தேனே/
ஊர் நீங்கிச் செல்கையில் துளைத்ததுவே/
போரும் துணை யவன் உயிரினையும்/
சிந்தையில் காதலை சிந்தியே காத்திட்டவன்/
வெந்திட்டானே மரணத்துள் எனையும் நீங்கி/
சந்தனக் கட்டையவன் விளையும் பூமிக்குள்/
எந்தன் உடலும் இணைந்திடல் வேண்டுமே/
என்ற துடிப்பினில் அலைகின்றதே விழிகளும்/
மண்ணையும் உயிர்க்கும் குயவனைத் தேடி/
கண்டேனே குயவனையும் கண்ணீரில் கரைந்தேனே/
விண்ணேவிய கணவனுக்கு வேண்டுமே தாழியும்/
வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப்/
பற்றிக்கொண்டு வந்த வெண்பல்லியைப் போல/
ஒத்திசைந்து வாழ்ந்தேனே இல்லறமும் இனித்திட/
ஒன்றாய் வாழ்ந்தவன் இன்றில்லை என்னோடு/
அவனின்றி வாழ்ந்திடாதே எந்தன் உயிரும்/
அவனிக்குள் தனித்திராதே இனித்திட்ட வாழ்வும்/
அவனுடன் நானும் உறைந்திட வேண்டும்/
அகலமான தாழியினை அமைக்கவே உதவிடு/
உடன்கட்டை ஏறிடும் ஒழுக்கத்தினில் வாழ்ந்திட/
உடன்படுமே எந்தன் மாங்கல்ய வரமும்/
ஜன்ஸி கபூர்
பின்னூட்டம்
Kesavadhas
ஜன்ஸி கபூர் இயல்பான தென்றலென வருடும் நடை சோகச்செய்தியையும் கம்பீரமாகச் சொல்கிறது!
ஆன்றனி இறந்து கிடக்கிறான்;
சீசர் பார்க்கிறான்;
உறைந்து கிடக்கும் இவனது மரணத்திலும் ஒரு பேரொழுங்கு உள்ளது என்பான்(High order of great solemnity in his death)
அதைப் போன்ற ஒரு சூழலை கவிதாயினி யின் எழுத்து காட்டுகிறது!
திருவுயிருக்குள் எனையே இணைத்தவர்
சிந்தையில் காதலைச் சிந்தியவன் வெந்திட்டான்
மண்ணையும் உயிர்க்கும் குயவன்..
என்ன ஒரு வார்த்தை மண்ணுக்கே உயிர் கொடுக்கிறான்!
அருமை!
விண்ணேவிய கணவனுக்கு வேண்டுமே தாழியும்
அவலச் சுவைக்கே அங்கீகாரம் அளிக்கும் கவிதை!
மிகவும் அழகு!
வாழ்த்துகள் கவிஞரே!
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!