About Me

2021/04/13

குழந்தை தொழிலாளர்கள்

 
கற்கும் வயதில் கற்கள் உடைத்தே/
கரைகின்றனர் தினமும் கண்ணீரைச் சேமித்தே/
பாட நூலினைப் பார்க்கவில்லை விழிகள்/
படர்கின்றனவே கரங்கள் நூலிழை நெய்திடவே/
 
ஜன்ஸி கபூர் - 24.10.2020
 

முதியோர் இல்லம்

 


உதிரத்தால் செதுக்கி உணர்வால் போர்வையிட்டு/
உன்னதமாகக் காத்த உறவின்று உதறியதோ/
உதிர்ந்தேனே சருகாகி உணர்கின்றேன் விரக்தியை/
உவகையின்றி மீதிக் காலம் கரைகின்றதே/

அன்பால் ரசித்து அறிவால் உயர்த்தி/ 
அனைவருமே மதித்திட அணைத்தே வளர்த்த/
அன்னையும் இன்று அனாதையாகி தனிமைக்குள்/
அவலத்தில் உறைந்தே அந்தரிக்கின்றேன் நானே/

தள்ளாடும் தேகம் சுருங்கும் சுவாசம்/
தவிக்கின்றதே பாசத்தில் தஞ்சமாக வலிதானே/
தவப்புதல்வன் அருகிருக்க தனியாக வாழ்கின்றேன்/
தங்கும் நிழலிந்த முதியோர் இல்லம்/

பேத்திகளுடன் கொஞ்சிடவே பேராசை கொண்டேன்/
பேணிடாப் பிள்ளையால் பேதலிக்குதே மனமும்/
பேசாத வார்த்தைகள் போக்குதோ மகிழ்வை/
பேரிடி சூளும் பொல்லாத விதியிது/

ஜன்ஸி கபூர் - 28.310.2020


நிலவு தூங்கும் நேரம்

 

இரவுப் பூக்கள் சிதறுகின்றன அமைதிக்குள்/

தனிமையை வரைந்து கொண்டிருந்தது காரிருள்/

மெல்லத் தழுவியவாறு உலாவியது தென்றல்/

உள்ளமோ இன்பத்துக்குள் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது/


சந்தனத்தை கரைத்தூற்றும் நிலாவின் கிழிசல்களோ/

பூமிக்குள் விழுந்து கிடக்கின்ற வெளிச்சம்/

மௌனத்துள் உறைந்து கிடக்கின்ற வானுள்/

மெல்ல விழித்துக் கொண்டன நட்சத்திரங்கள்/


நிசப்த வெளியினில் சுவாசத்துள் நிறைகின்றன/

கொத்துக்களாகக் குலுங்கும் மல்லிகைகளின் வாசம்/

இதமாக விழிகளை வருடுகின்றது இயற்கை/

உள்ளத்தின் களைப்பினைத் தாலாட்டும் நேரமிது/


விரிந்த கிளைத் தொட்டில்களில் உறங்கிடும்/

விண் பறவைகளின் குறட்டை ஓசைக்குள்/

கண் விழித்துத் தடுமாறுகின்றதே மலர்கள்/

காரிருள் மொய்க்கின்ற விழிகள் மெல்லக்/


கண்ணயர்கின்றன தமக்குள் துயிலைப் போர்த்தியவாறு/

அங்கோ மேகப் பஞ்சணைக்குள் புதைந்து/

அழகு நிலவு தூங்கும் நேரம்/

அமைதியினை இரசித்தவாறு சுழல்கின்றது பூமியும்/


ஆனால் மனதோ இனித்திடும் நினைவுகளுடன்/

உற்சாகமாகத் தன்னைக் கலக்க ஆரம்பிக்கின்றது/

நிலவூட்டும் காதலின் மோகனப் புன்னகை/

வசீகரித்தே தொட்டுச் செல்கின்றது உயிரினை/


ஜன்ஸி கபூர் - 17.10.2020

மின்னலே

 


வெட்டுகின்றது மின்னல் கொட்டுகின்றது மழையும்/
வெட்கத்தில் சிவக்குதே கரைந்தோடும் நீரும்/
வெட்டவெளிக்குள் வீசுகின்ற தங்கக் கயிற்றால்/
வெளிச்சத்தைக் கட்டிப் போடுதே அண்டமும்/

கார்மேகம் வரைகின்ற ரேகைக் கோடுகள்/
பாரினில் பிணைக்கின்றதே சக்தி மேடுகள்/
வேரும் துளைக்குதோ வெஞ்சினம் வானுக்குள்/
நாராகித் தொடுக்கிறதே மழைப் பூக்களை/

ஆகாயம் உதிர்க்கின்ற ஆனந்த முழக்கத்திற்கே/
ஆரத்தழுவுதே விண் படைகளின் கரங்களே/
ஆபரணம் அணிந்தே நாணுகின்றதோ வானும்/
ஆச்சரியத்தில் விரிகின்றனவே கவி விழிகள்/

விழுகின்ற நீர்ப் பூக்களும் உருகுகின்றனவோ/
தழுவுகின்றதே பசுமையையும் ஆரத் தழுவியே/
கழுவப்படும் பூமியை படமெடுக்குதே மின்னலும்/
நழுவுகின்றதே தென்றலும் நனைந்திட மறுத்தே/

இயற்கைத் தூரிகைகள் உதிர்க்கின்ற பொன்னும்/
இணைத்திடுமோ பூமியை விண்ணுக்குள் அழகாக/
இடியும் மின்னலும் ஒன்றாகி வெடிக்கையில்/
இதயமும் உறைகின்றதே அச்சத்துக்குள் ஒளிந்தே/

தென்றலைப் போர்த்துகின்ற வெண் றாவணிக்குள்/
கண்ணைப் பறித்திடும் ஒளியினை ஒளித்தானோ/
எண்ணத்தில் வாழ்ந்தே வழிநடாத்தும் இறைவனும்/
மண்ணும் உடைந்திடுமோ ஒளிப்பூவின் மோதுகைபட்டே/

ஜன்ஸி கபூர் - 21.10.2020