About Me

2021/04/13

நிலவு தூங்கும் நேரம்

 

இரவுப் பூக்கள் சிதறுகின்றன அமைதிக்குள்/

தனிமையை வரைந்து கொண்டிருந்தது காரிருள்/

மெல்லத் தழுவியவாறு உலாவியது தென்றல்/

உள்ளமோ இன்பத்துக்குள் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது/


சந்தனத்தை கரைத்தூற்றும் நிலாவின் கிழிசல்களோ/

பூமிக்குள் விழுந்து கிடக்கின்ற வெளிச்சம்/

மௌனத்துள் உறைந்து கிடக்கின்ற வானுள்/

மெல்ல விழித்துக் கொண்டன நட்சத்திரங்கள்/


நிசப்த வெளியினில் சுவாசத்துள் நிறைகின்றன/

கொத்துக்களாகக் குலுங்கும் மல்லிகைகளின் வாசம்/

இதமாக விழிகளை வருடுகின்றது இயற்கை/

உள்ளத்தின் களைப்பினைத் தாலாட்டும் நேரமிது/


விரிந்த கிளைத் தொட்டில்களில் உறங்கிடும்/

விண் பறவைகளின் குறட்டை ஓசைக்குள்/

கண் விழித்துத் தடுமாறுகின்றதே மலர்கள்/

காரிருள் மொய்க்கின்ற விழிகள் மெல்லக்/


கண்ணயர்கின்றன தமக்குள் துயிலைப் போர்த்தியவாறு/

அங்கோ மேகப் பஞ்சணைக்குள் புதைந்து/

அழகு நிலவு தூங்கும் நேரம்/

அமைதியினை இரசித்தவாறு சுழல்கின்றது பூமியும்/


ஆனால் மனதோ இனித்திடும் நினைவுகளுடன்/

உற்சாகமாகத் தன்னைக் கலக்க ஆரம்பிக்கின்றது/

நிலவூட்டும் காதலின் மோகனப் புன்னகை/

வசீகரித்தே தொட்டுச் செல்கின்றது உயிரினை/


ஜன்ஸி கபூர் - 17.10.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!