About Me

2021/04/13

மின்னலே

 


வெட்டுகின்றது மின்னல் கொட்டுகின்றது மழையும்/
வெட்கத்தில் சிவக்குதே கரைந்தோடும் நீரும்/
வெட்டவெளிக்குள் வீசுகின்ற தங்கக் கயிற்றால்/
வெளிச்சத்தைக் கட்டிப் போடுதே அண்டமும்/

கார்மேகம் வரைகின்ற ரேகைக் கோடுகள்/
பாரினில் பிணைக்கின்றதே சக்தி மேடுகள்/
வேரும் துளைக்குதோ வெஞ்சினம் வானுக்குள்/
நாராகித் தொடுக்கிறதே மழைப் பூக்களை/

ஆகாயம் உதிர்க்கின்ற ஆனந்த முழக்கத்திற்கே/
ஆரத்தழுவுதே விண் படைகளின் கரங்களே/
ஆபரணம் அணிந்தே நாணுகின்றதோ வானும்/
ஆச்சரியத்தில் விரிகின்றனவே கவி விழிகள்/

விழுகின்ற நீர்ப் பூக்களும் உருகுகின்றனவோ/
தழுவுகின்றதே பசுமையையும் ஆரத் தழுவியே/
கழுவப்படும் பூமியை படமெடுக்குதே மின்னலும்/
நழுவுகின்றதே தென்றலும் நனைந்திட மறுத்தே/

இயற்கைத் தூரிகைகள் உதிர்க்கின்ற பொன்னும்/
இணைத்திடுமோ பூமியை விண்ணுக்குள் அழகாக/
இடியும் மின்னலும் ஒன்றாகி வெடிக்கையில்/
இதயமும் உறைகின்றதே அச்சத்துக்குள் ஒளிந்தே/

தென்றலைப் போர்த்துகின்ற வெண் றாவணிக்குள்/
கண்ணைப் பறித்திடும் ஒளியினை ஒளித்தானோ/
எண்ணத்தில் வாழ்ந்தே வழிநடாத்தும் இறைவனும்/
மண்ணும் உடைந்திடுமோ ஒளிப்பூவின் மோதுகைபட்டே/

ஜன்ஸி கபூர் - 21.10.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!