About Me

2021/04/14

கடும் புனல்

 





 
ஒளி உமிழ்கின்ற ஒற்றை வெண்ணிலாவும்
கொட்டிக் கிடக்கின்ற நட்சத்திரக் கலவைகளும்
தென்றலின் வருடல் விரல்களும் எனக்குள்ளே
தனிமையை விரட்ட சூழ ஆரம்பிக்கின்றன

நள்ளிரவு நிசப்தத்தை கரைக்கின்ற உணர்வினை
மெல்ல அவிழ்க்கின்றது மெல்லிருட்டுக் கரங்கள்.
எட்டிப் பார்க்கின்ற பத்திரப்படுத்தப்பட்ட பசியின்
திணிப்பில் தேகம் திணறிக் கொண்டிருக்கின்றது.

வெறுமையைத் துடைக்கும் கடிகாரத்தின் புறுபுறுப்போடு
தனிமை கொஞ்சம் முரண்பட ஆரம்பிக்கின்றது 
பூமியின் உறக்கத்தில் விழிக்கின்ற துடிப்பில் 
நீள்கின்ற காத்திருப்பின் அலறல் ஆன்மாவுக்குள்

காற்றில் தீயூற்றும் இம்சைக்குள் எதிர்பார்ப்புக்கள்
ஏக்கத்தில் பிசையப்பட்ட மனதோ கசங்குகின்றது
எதிர் சுவற்றில் துணையுடன் பிணைகின்ற
பல்லியின் மோக முணங்கல் நாடியுடைக்கின்றது

எங்கோ நாயின் ஊளைச் சப்தம்
நள்ளிரவின் ஓட்டம் நாடித் துடிப்பினுள்
 
கதவு தட்டப்படுகிறது எதிரே ஆன்மா
நறுமணக் குவியலின் வீரியப் பார்வையில்
நாணம் கசக்கப்படுவது புரிந்தும் ரசிக்கின்றேனதை

உள்ளே மெல்லிய காற்று நுழைந்து
மோகப் பூக்களை பஞ்சணைக்குள் நிறைகின்றது
பசியை அவிழ்ப்பதற்கான அழகிய தருணமிது
இதழோரங்களில் பத்திரப்படுத்தப்படுகின்றது இதமான ஈரம்
அன்பின் விரல்கள் பிசைகின்ற ஆசைகளை
பரிமாறுகின்ற மடியும் ஏந்துகின்றது ஏக்கத்தினை

இருள் தன்னை மறைப்பதாக இல்லை
எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றது இரகசியங்களை
இழுத்திப் போத்திக் கொண்டிருக்கின்ற ஆன்மாக்களை
இரசிக்கின்றது போலும் சிவக்கின்றது இராப்பசி
மயக்கத்தில் அப்பிக் கொண்ட காதல்
இன்னும் விடுவதாக இல்லை அணைக்கின்றது

விழிக்குள் துயிலினை ஊற்றாமல் துரத்தும்
ஏதோவொன்று என்னைப் பிழிந்தெடுக்க விழுகின்றது
பார்வையும் நிதர்சனத்தில்.....ஓ.......பிரமை

பற்றிக் கொள்கின்ற பனியின் விரல்களை
வேகமாக உதறுகின்றேன் மூச்சுக்குள் அனல்
வெளியே நிலாக்கீற்றின் பிரகாச வளையங்கள்
தவிப்புக்களின் பிழம்புகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன

ஆழ்மனதைப் புரட்டுகின்ற மலையின் ஓசை
இடிக்கின்றது உணர்வுகளை துடிக்கின்றது வலி

ஓவ்வொரு இரவும் விட்டுச் செல்கின்ற
எதிர்பார்ப்பின் வேட்கையில் மனம் தினமும்
புதிதாகவே உயிர்க்கின்றது விடியல் காணாது

மௌனமாக வடிந்தோடுகிறது இரவுத் துளிகள்
எண்ணுவதற்குள் ஒளிப்பிழம்பு தட்டியெழுப்பி
உளத்தில் ஊறும் தணல்பொறியினைச் சீண்டுகின்றது

ஜன்ஸி கபூர் - 17.10.2020'

 

நெல்லியும் உதிரும் கனிகளும்

யுத்தம் துப்பிய உதிரத்தின் சாயலில்

செம்மண் பரப்பிய கொல்லைப் புறம்

அங்கே காற்றை விரட்டிக் கொண்டிருந்தது

அகன்ற கிளைகளைக் கொண்ட வேம்பு

அசையும் இலைகள் குவிக்கின்ற நிழலுக்குள்

ஒடுங்கி நிற்கின்றது ஒற்றை நெல்லி


எல்லைச் சுவரை முட்டும் கொப்புக்களில்

உராய்வுக் கீறல்கள் எம் இரணங்களாய்

கொப்புக்களை உதைக்கின்ற கொத்துப் பூக்களும்

கொழுத்த குண்டுப் பழங்களின் அழகும்


கண்களை ஈர்த்து கைகளை உயர்த்துகின்றன

பழங்களின் சுவையில் நாவும் இனிக்கின்றதே

பழச்சுமையில் பாதி சாய்ந்து இருக்கின்ற

மரத்தினை தினமும் பார்க்கின்றேன் விருப்போடு


கனி உதிர்க்குமந்த சிறு நெல்லியில்

உப்பும் ஊற்றி காயைச் சுவைக்கையில்

அருகில் இருப்போர் உமிழ்நீர் சுரக்கின்றனர்.

சில பழங்கள் சீனிப் பாகினுள்

நாவுக்குள் தேனும் ஊறுகின்றது சுவையுடன்


தெருவோரம் எட்டிப் பார்க்கும் கொப்பெல்லாம்

கல்லெறிக் காயத்தினால் சிவந்திருக்கின்றன

ஒவ்வொன்றாய் பொறுக்கி பாதுகாக்கின்றேன் எனக்குள்

உதிரும் வலிக்குள் எனையே பொருத்துகின்றேன்


யுத்தத்தின் சத்தம் செவியைக் கிழிக்கின்றது

அந்நேரம் கொப்பும் தகரத்தில் உரசுகின்றது

எழுகின்ற சப்தத்தில் கலக்கின்றது அவலம்

வருந்தும் மனதின் பிம்பமாக நெல்லியும்

தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கின்றது பதற்றத்தில்


நெல்லியின் நீளமான நிழலில் பதிக்கும்

என் தடங்களுக்குள் கொட்டுகின்றேன் துன்பத்தை

மரணத்தைப் பற்றியதான பேசுபொருள் அது

அணைத்த உறவுகளின் சிதைவுப் பிழம்புகள்

என் விழிநீராலும் அணைக்காத சுவாலையாய்

எரிந்து கொண்டிருக்கின்றது வெயிலின் இம்சைபோல்


விண்ணை உடைக்கின்றதோ இயந்திரப் பறவை

இரும்புச் சிறகுகளின் உரப்பான அதிர்வில்

தேகம் மட்டுமல்ல நெல்லியும் உதிர்க்கின்றன

முதுமைக்குள் போராடும் சில இலைகளை

தரைக்குள் மொய்க்கின்ற சருகுகளின் ஆக்கிரமிப்பும்

விமானத்தின் உறுமலில் சிதறி ஓடுகின்றன


விண்ணையும் மண்ணையும் பொசுக்குகின்ற தீப்பிழம்பும்

என்னில் அச்சத்தை விதைக்கவில்லை மாறாக

இறப்பையும் புறந்தள்ளி சுவைக்கின்றேன் கனியை

உறவாகித் தழுவுகின்றது வேப்பக் காற்றும்

துரத்துகின்றேன் வெயிலையும் எனைப் போர்த்தாமல்


வட்டமிடுகின்ற இயந்திரத் தும்பியும் பொம்பரும்

சகடையும் உரசுகின்றன ஒலியை உமிழ்ந்து

செவிப்பறையின் கிழிசலில் உயிரும் அலறுகின்றதே

அக்கணத்தில் தொலைத்த நிம்மதியைத் தேடுகின்றேன்


ஆன்மாவின் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் நிரம்புகின்ற

வலி இறுக்கிப் பிடிக்கின்றதே மேனியை

தசாப்தங்களைக் காலங்கள் புரட்டுகின்றன விரைவாக

அடையாளப்படுத்துகின்றன அடுத்த ஊர்கள் அகதிகளென

கழிகின்ற ஒவ்வொரு விநாடியும் கலியே

களிப்பினைத் தொலைக்கின்ற அந்தக் கணங்கள்

ஆயுள் வரை நீட்டுகின்றதே அக்கினியை


மின்சாரமும் மறந்து விட்டதே ஒளியூட்ட

குப்பி விளக்கின் தொடுகையிலும் சிரிக்கின்றதே

பவளமாக மின்னும் கற்றைக் கனிகளும்

காற்றை நனைக்கும் வேம்பின் இலைகளும்


தினமும் நெல்லிக்கனியில் தினக்குறிப்பு எழுதுகின்ற

என்னுள் விரக்தி நலம் விசாரிக்கின்றது

மூச்சேந்தும் ஒவ்வொரு நொடியும் தெளிக்கப்படுகின்ற

மரண அவஸ்தையினை நுகர்ந்தவாறே வாழ்கின்றேன்


என் சுவாசப் பாதையை நிரப்புகின்றது

நெல்லியின் சுவைக்குள் நனைந்த காற்று

அவ்வையும் சுவைத்த நெல்லி யன்றோ

என்றன் உயிரையும் சேதமின்றிக் காக்கின்றது

இன்றுவரை உணர்வுக்குள் விருட்சமாகின்றது அழிவின்றி

ஜன்ஸி கபூர்  09.10.2020

தூங்காதே தம்பி தூங்காதே

 

தூங்காதே தம்பி தூங்காதே நீயும்/
சோர்வினில் துன்பம் வாங்காதே வீணாய்/
சரித்திரத்தில் பதிவாகும் உன் பெயரெல்லாம்/
தரித்திரமாக மாறிப் போகுமடா தம்பி/

உன் குறட்டையால் அருகிருப்போர் உறக்கமிழப்பார்/
உறங்காத விழிகளின் சாபத்திலே நீயும்/
சுகமிழப்பாய் வீழ்த்திடுவாரே உன்னையும் கேலிக்குள்ளே/ 
சும்மா நீயும் தூங்காதே தம்பி/

வேலைத் தளத்திலே நீயும் உறங்கும்போது/
தொழிலை இழப்பாய் வறுமையும் தழுவும்/
போரினில் தூங்கினாலோ தேசம் பறிபோகும்/
பள்ளியிலே தூங்கினாலோ புள்ளிகள் இழப்பாய்/
 
விற்பனையில் தூங்கியவன் சொத்து இழந்தான்/
மேடையினில் உறங்கியவன் பேச்சும் இழந்தான்/
கடமையில் தூங்கியவன் தொழிலும் துறந்தான்/
தூக்கத்தை நேசிப்பவன் துக்கத்தில் விழுந்தான்/

உன்தன் தூக்கத்தால் பலமிழப்பாய் தினமும்/
நீண்ட உறக்கத்தில் கண்டிடுவாய் நோய்தனை/
கண்ட கண்ட நேரத் தூக்கத்தினாலே/
உன்றன் புகழும் பறிபோகுமே கண்முன்னாலே/

நீ விரும்பும் இந்தத் தூக்கத்தினால்/
உனைச் சாரந்தோரெல்லாம் பாவம் அப்பா/
தூங்காதே தம்பி இனித் தூங்காதே/
தூங்கிய பின்னர் தேம்பி அழாதே/

ஜன்ஸி கபூர்  - 11.10.2020



நெஞ்சு அலையுதடி

 

நெஞ்சுக்குள்ள அலையுதடி உன்னோட நினைப்புத்தான்/
கரும்பும் ஒளிக்குதடி உதட்டின் மொழிக்குள்ள/
கடலும் சுருளுதடி சின்ன விழிகளுக்குள்ள/
மனசும் துடிக்குதடி உன்னோட வாழந்திடவே/

காற்றிலே கரைக்கிறே வாசத்தை தினமும்/
காதலை ஊத்துறீயே தவிக்கிற உணர்வுக்குள்ளே/
மோதுறீயே விழியாலே வீழ்கிறேன்டி வலியின்றி/
தங்கச் சிற்பமே தழுவடி உயிர்ப்பேனடி/

கொட்டுற மழைக்குள்ள நனைகிறேன்டி நானும்/
வெட்டுற மின்னலாப் பூக்குறே அருகாக/
என்னைத் தொட்டுக்கொள்ளடி விரலும் வெட்கப்பட/
பனியைத் தூவுறீயே இரவும் குளிருதடி/

உன்னோட பாசம் மிதக்குதடி நிழலா/
விண்ணுக்கும் கேட்குதடி உன்பெயர் நிலவா/
ஆசைகளைப் பேசுகின்ற கனவுக்கும் தூக்கமில்லை/
அனலுக்குள்ள எரிகிறேன்டி தழுவடி பூந்தென்றலே/ 

ஜன்ஸி கபூர் - 9.11.2020