About Me

2021/04/14

நெல்லியும் உதிரும் கனிகளும்

யுத்தம் துப்பிய உதிரத்தின் சாயலில்

செம்மண் பரப்பிய கொல்லைப் புறம்

அங்கே காற்றை விரட்டிக் கொண்டிருந்தது

அகன்ற கிளைகளைக் கொண்ட வேம்பு

அசையும் இலைகள் குவிக்கின்ற நிழலுக்குள்

ஒடுங்கி நிற்கின்றது ஒற்றை நெல்லி


எல்லைச் சுவரை முட்டும் கொப்புக்களில்

உராய்வுக் கீறல்கள் எம் இரணங்களாய்

கொப்புக்களை உதைக்கின்ற கொத்துப் பூக்களும்

கொழுத்த குண்டுப் பழங்களின் அழகும்


கண்களை ஈர்த்து கைகளை உயர்த்துகின்றன

பழங்களின் சுவையில் நாவும் இனிக்கின்றதே

பழச்சுமையில் பாதி சாய்ந்து இருக்கின்ற

மரத்தினை தினமும் பார்க்கின்றேன் விருப்போடு


கனி உதிர்க்குமந்த சிறு நெல்லியில்

உப்பும் ஊற்றி காயைச் சுவைக்கையில்

அருகில் இருப்போர் உமிழ்நீர் சுரக்கின்றனர்.

சில பழங்கள் சீனிப் பாகினுள்

நாவுக்குள் தேனும் ஊறுகின்றது சுவையுடன்


தெருவோரம் எட்டிப் பார்க்கும் கொப்பெல்லாம்

கல்லெறிக் காயத்தினால் சிவந்திருக்கின்றன

ஒவ்வொன்றாய் பொறுக்கி பாதுகாக்கின்றேன் எனக்குள்

உதிரும் வலிக்குள் எனையே பொருத்துகின்றேன்


யுத்தத்தின் சத்தம் செவியைக் கிழிக்கின்றது

அந்நேரம் கொப்பும் தகரத்தில் உரசுகின்றது

எழுகின்ற சப்தத்தில் கலக்கின்றது அவலம்

வருந்தும் மனதின் பிம்பமாக நெல்லியும்

தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கின்றது பதற்றத்தில்


நெல்லியின் நீளமான நிழலில் பதிக்கும்

என் தடங்களுக்குள் கொட்டுகின்றேன் துன்பத்தை

மரணத்தைப் பற்றியதான பேசுபொருள் அது

அணைத்த உறவுகளின் சிதைவுப் பிழம்புகள்

என் விழிநீராலும் அணைக்காத சுவாலையாய்

எரிந்து கொண்டிருக்கின்றது வெயிலின் இம்சைபோல்


விண்ணை உடைக்கின்றதோ இயந்திரப் பறவை

இரும்புச் சிறகுகளின் உரப்பான அதிர்வில்

தேகம் மட்டுமல்ல நெல்லியும் உதிர்க்கின்றன

முதுமைக்குள் போராடும் சில இலைகளை

தரைக்குள் மொய்க்கின்ற சருகுகளின் ஆக்கிரமிப்பும்

விமானத்தின் உறுமலில் சிதறி ஓடுகின்றன


விண்ணையும் மண்ணையும் பொசுக்குகின்ற தீப்பிழம்பும்

என்னில் அச்சத்தை விதைக்கவில்லை மாறாக

இறப்பையும் புறந்தள்ளி சுவைக்கின்றேன் கனியை

உறவாகித் தழுவுகின்றது வேப்பக் காற்றும்

துரத்துகின்றேன் வெயிலையும் எனைப் போர்த்தாமல்


வட்டமிடுகின்ற இயந்திரத் தும்பியும் பொம்பரும்

சகடையும் உரசுகின்றன ஒலியை உமிழ்ந்து

செவிப்பறையின் கிழிசலில் உயிரும் அலறுகின்றதே

அக்கணத்தில் தொலைத்த நிம்மதியைத் தேடுகின்றேன்


ஆன்மாவின் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் நிரம்புகின்ற

வலி இறுக்கிப் பிடிக்கின்றதே மேனியை

தசாப்தங்களைக் காலங்கள் புரட்டுகின்றன விரைவாக

அடையாளப்படுத்துகின்றன அடுத்த ஊர்கள் அகதிகளென

கழிகின்ற ஒவ்வொரு விநாடியும் கலியே

களிப்பினைத் தொலைக்கின்ற அந்தக் கணங்கள்

ஆயுள் வரை நீட்டுகின்றதே அக்கினியை


மின்சாரமும் மறந்து விட்டதே ஒளியூட்ட

குப்பி விளக்கின் தொடுகையிலும் சிரிக்கின்றதே

பவளமாக மின்னும் கற்றைக் கனிகளும்

காற்றை நனைக்கும் வேம்பின் இலைகளும்


தினமும் நெல்லிக்கனியில் தினக்குறிப்பு எழுதுகின்ற

என்னுள் விரக்தி நலம் விசாரிக்கின்றது

மூச்சேந்தும் ஒவ்வொரு நொடியும் தெளிக்கப்படுகின்ற

மரண அவஸ்தையினை நுகர்ந்தவாறே வாழ்கின்றேன்


என் சுவாசப் பாதையை நிரப்புகின்றது

நெல்லியின் சுவைக்குள் நனைந்த காற்று

அவ்வையும் சுவைத்த நெல்லி யன்றோ

என்றன் உயிரையும் சேதமின்றிக் காக்கின்றது

இன்றுவரை உணர்வுக்குள் விருட்சமாகின்றது அழிவின்றி

ஜன்ஸி கபூர்  09.10.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!