About Me

2021/04/14

கூடலிற் தோன்றிய உப்பு

விழியின் மொழியோ விளைந்திடும் காதல்/
வீழ்த்திடும் அன்பும் மொழிந்திடும் காமம்/ 
விடிந்திடா இரவுகள் நீள்கின்றதே இன்பத்தில்/
விளைகின்ற வியர்வையும் பிணைகின்றதே நுதலில்/

அணைக்கும் கரங்கள் மீட்டுகின்ற தேகங்கள்/
அடங்கிடுமோ காதலும் மொழிகின்ற சுகத்தில்/
புலவியின் பயனாய் பொங்கும் கலவி/
புளாங்கிதமே மேனிக்கு புத்துணர்ச்சியும் உணர்வுகளுக்கே/

செய்யாத தவற்றின் தவிப்பும் படரும்/
செல்ல ஊடலோ கூடலின் வழியோ/
பிரியத் தலைவனும் மொழிகின்றான் பிரிவிற்கே/
பிரிந்திடாக் காதலில் இணங்கி வாழ்வதற்கே/ 

உப்பும் விளைந்திட பூக்கட்டும் வியர்வை/
உச்ச இன்பமும் சுவைத்திடலாம் ஊடலில்/
உன் னுறவுக்குள் ஊறலைத் தூவடி அன்பே/
ஊட்டம் பெறுவோம் அன்புநிலையும் உயிர்த்திட/

ஜன்ஸி கபூர் - 29.10.2020



வீடு அடையா வெளி

 


மனதின் வலியும் வரைகின்ற கோடுகள்
வரைபடமாகித் தாங்கி நிற்கின்றதே மனையை
எனக்குள்ளும் இனிய கனவுத் தேடல்
நீண்டு தொடுகின்றது இன்னும் முடிவிலியில்

யுத்தம் சிதைக்கின்ற வீட்டின் எச்சங்கள்
துரத்திக் கொண்டிருக்கின்றன வேறொரு இருப்பிடத்திற்கு
ஓவ்வொரு ஆண்டுகளும் ஒவ்வொரு வீடாய்
அவலங்களையும் இடமாற்றிப் பழகிக் கொண்டிருக்கின்றேன்

இருந்தும் சொந்த வீட்டிற்கான ஏக்கம்
இன்னும் புகைக்கின்றது அடங்காப் பெருமூச்சுக்களை
இந்த வருடத்திற்குள் வாழ்வதற்கான வீடொன்றென்ற
ஆசைகளின் உதிர்ப்பில் கருகுகின்றதே எதிர்பார்ப்பும்

வறுமையின் உச்சம் வழிகாட்ட மறுக்கின்றதே
இருந்தும் முயல்கின்றேன் சிதைவுகளை மீள்வுருவேற்ற
வீடு அமைத்திடத் துடிக்கின்ற கனவுகளை
மீள உருத்துலக்கிப் புனரமைக்கின்றேன் மெல்ல
சேமிப்பு என்னவோ நிறைக்கின்றது பெருமூச்சுக்களைத்தானே

அவலங்களின் உழைப்பால் சிந்தியவை கொஞ்சம்
மஞ்சாடிப் பவுண்களால் கைகளில் கிடைத்தவை
கெஞ்சி வாங்கிய கடன்களின் கருணை
பணத்திற்கான வடிகால்களாகின என் தேடலில்

அவிழ்க்கின்றேன் கனவினை எழுகின்றது அடித்தளம்
ஆசைகளைத் தெளித்து கற்களை அடுக்குகின்றேன்
உணர்வுகளின் துடிப்பினைச் சுமந்தவாறே நிமிர்கின்றது
அரை குறைகளுடன் கட்டிடச் சுவர்கள்
வெற்றுக் கைகள் முடிவுறுத்துகின்றனவோ கனவினை

முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற தூண்கள்
முகவரிகளாகி முணுமுணுக்கின்றன சதைகளற்ற எலும்புக்கூடுகளாகி
கற்பனைகளுடன் பிசைகின்ற கனவு வீடு
வெறும் சொற்களாகிச் சிரிக்கின்றதே வரைபடத்தில்

வெயிற் பூக்களும் வெண்மதியும் நிறைவாக
மலர்கின்ற எழில் சுற்றுக்கட்டுத் தாழ்வாரமும்
காற்றின் விரல்களை இதமாகத் தடவுகின்ற
சாளரங்களையும் அமைத்திட ஆசைதனைக் கொண்டேன்

இயற்கைச் சுகத்தினை அறுத்திடாத ஆர்வம்
இறுக்கிப் பிடிக்கின்றது கூரைத் தெரிவில்
வெற்றாசைகள் தாங்குமோ காசின் எடைக்கே

கூரைக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாமலே இருக்கின்றன
கட்டியெழுப்பப்பட்ட பாதிச் சுவர்களைத் தாங்கியவாறு
குட்டித் தூண்கள் குற்றுயிர்களாகிக் கிடக்கின்றன
கட்டி முடிக்கப்படாத வீடும் அழுகின்றதே

கொட்டும் மழையும் நனைக்கின்ற போதெல்லாம்
வெட்டி விட முளைக்கின்ற பற்றைகள்
தொட்டுக் காட்டுகின்றதே பூச்சில்லாத தரையினை

உரிய பரிமாணச் செதுக்கல்களைத் தாங்கியவாறு
உருவாக்கப்பட்ட பெரிய அறைகள் இரண்டும்
பளிங்குகள் பதிக்கப்பட்ட விசாலத் தரையும்
அடக்கமான அழகிய குட்டிச் சமையலறை

வித விதமான வண்ணங்களைத் தாங்கியவாறு
உயிர்க்கின்ற எனக்கான இருப்பிட இல்லம்
வாய்த்துவிடக் கூடியதுதானோ வீடடையும் பேறு
இன்னும் முற்றுப்பெறாத வாழிடக் கூட்டினை
முழுமையாக நிறைக்கின்றன பெருமூச்சுக்களும் வறுமையும்

ஜன்ஸி கபூர் - 22.10.2020

கன்னமிரண்டும் கிள்ளாதே


விழிகள் நான்கும் பேசுகின்ற அன்பிலே/
விழுகின்றேனே நானும் உன்றன் மனதுள்/ 
விரல்கள் பேசிடும் மொழியில் மெல்ல/
விரிகின்றதே நாணமும் நனைகிறேன் நானுமே/
 
சொருகுகின்றாய் காந்தப் புன்னகையை நெஞ்சில்/
சொக்கி நிற்கின்றேனே நினைவுகளை வருடியே/
செதுக்குகிறேன் சொந்தமாக உன்னையே என்னில்/
சோகத்தை உதிர்க்கின்ற சுகமும் நீதானே/

கன்னமிரண்டும் கிள்ளாதே சிலிர்க்குதே உயிருமே/
கன்னியென்னை மூடுகின்றாய் உன்றன் நிழலாலே/
 
 ஜன்ஸி கபூர் - 25.10.2020

கடும் புனல்

 





 
ஒளி உமிழ்கின்ற ஒற்றை வெண்ணிலாவும்
கொட்டிக் கிடக்கின்ற நட்சத்திரக் கலவைகளும்
தென்றலின் வருடல் விரல்களும் எனக்குள்ளே
தனிமையை விரட்ட சூழ ஆரம்பிக்கின்றன

நள்ளிரவு நிசப்தத்தை கரைக்கின்ற உணர்வினை
மெல்ல அவிழ்க்கின்றது மெல்லிருட்டுக் கரங்கள்.
எட்டிப் பார்க்கின்ற பத்திரப்படுத்தப்பட்ட பசியின்
திணிப்பில் தேகம் திணறிக் கொண்டிருக்கின்றது.

வெறுமையைத் துடைக்கும் கடிகாரத்தின் புறுபுறுப்போடு
தனிமை கொஞ்சம் முரண்பட ஆரம்பிக்கின்றது 
பூமியின் உறக்கத்தில் விழிக்கின்ற துடிப்பில் 
நீள்கின்ற காத்திருப்பின் அலறல் ஆன்மாவுக்குள்

காற்றில் தீயூற்றும் இம்சைக்குள் எதிர்பார்ப்புக்கள்
ஏக்கத்தில் பிசையப்பட்ட மனதோ கசங்குகின்றது
எதிர் சுவற்றில் துணையுடன் பிணைகின்ற
பல்லியின் மோக முணங்கல் நாடியுடைக்கின்றது

எங்கோ நாயின் ஊளைச் சப்தம்
நள்ளிரவின் ஓட்டம் நாடித் துடிப்பினுள்
 
கதவு தட்டப்படுகிறது எதிரே ஆன்மா
நறுமணக் குவியலின் வீரியப் பார்வையில்
நாணம் கசக்கப்படுவது புரிந்தும் ரசிக்கின்றேனதை

உள்ளே மெல்லிய காற்று நுழைந்து
மோகப் பூக்களை பஞ்சணைக்குள் நிறைகின்றது
பசியை அவிழ்ப்பதற்கான அழகிய தருணமிது
இதழோரங்களில் பத்திரப்படுத்தப்படுகின்றது இதமான ஈரம்
அன்பின் விரல்கள் பிசைகின்ற ஆசைகளை
பரிமாறுகின்ற மடியும் ஏந்துகின்றது ஏக்கத்தினை

இருள் தன்னை மறைப்பதாக இல்லை
எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றது இரகசியங்களை
இழுத்திப் போத்திக் கொண்டிருக்கின்ற ஆன்மாக்களை
இரசிக்கின்றது போலும் சிவக்கின்றது இராப்பசி
மயக்கத்தில் அப்பிக் கொண்ட காதல்
இன்னும் விடுவதாக இல்லை அணைக்கின்றது

விழிக்குள் துயிலினை ஊற்றாமல் துரத்தும்
ஏதோவொன்று என்னைப் பிழிந்தெடுக்க விழுகின்றது
பார்வையும் நிதர்சனத்தில்.....ஓ.......பிரமை

பற்றிக் கொள்கின்ற பனியின் விரல்களை
வேகமாக உதறுகின்றேன் மூச்சுக்குள் அனல்
வெளியே நிலாக்கீற்றின் பிரகாச வளையங்கள்
தவிப்புக்களின் பிழம்புகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன

ஆழ்மனதைப் புரட்டுகின்ற மலையின் ஓசை
இடிக்கின்றது உணர்வுகளை துடிக்கின்றது வலி

ஓவ்வொரு இரவும் விட்டுச் செல்கின்ற
எதிர்பார்ப்பின் வேட்கையில் மனம் தினமும்
புதிதாகவே உயிர்க்கின்றது விடியல் காணாது

மௌனமாக வடிந்தோடுகிறது இரவுத் துளிகள்
எண்ணுவதற்குள் ஒளிப்பிழம்பு தட்டியெழுப்பி
உளத்தில் ஊறும் தணல்பொறியினைச் சீண்டுகின்றது

ஜன்ஸி கபூர் - 17.10.2020'