About Me

2021/04/14

வீடு அடையா வெளி

 


மனதின் வலியும் வரைகின்ற கோடுகள்
வரைபடமாகித் தாங்கி நிற்கின்றதே மனையை
எனக்குள்ளும் இனிய கனவுத் தேடல்
நீண்டு தொடுகின்றது இன்னும் முடிவிலியில்

யுத்தம் சிதைக்கின்ற வீட்டின் எச்சங்கள்
துரத்திக் கொண்டிருக்கின்றன வேறொரு இருப்பிடத்திற்கு
ஓவ்வொரு ஆண்டுகளும் ஒவ்வொரு வீடாய்
அவலங்களையும் இடமாற்றிப் பழகிக் கொண்டிருக்கின்றேன்

இருந்தும் சொந்த வீட்டிற்கான ஏக்கம்
இன்னும் புகைக்கின்றது அடங்காப் பெருமூச்சுக்களை
இந்த வருடத்திற்குள் வாழ்வதற்கான வீடொன்றென்ற
ஆசைகளின் உதிர்ப்பில் கருகுகின்றதே எதிர்பார்ப்பும்

வறுமையின் உச்சம் வழிகாட்ட மறுக்கின்றதே
இருந்தும் முயல்கின்றேன் சிதைவுகளை மீள்வுருவேற்ற
வீடு அமைத்திடத் துடிக்கின்ற கனவுகளை
மீள உருத்துலக்கிப் புனரமைக்கின்றேன் மெல்ல
சேமிப்பு என்னவோ நிறைக்கின்றது பெருமூச்சுக்களைத்தானே

அவலங்களின் உழைப்பால் சிந்தியவை கொஞ்சம்
மஞ்சாடிப் பவுண்களால் கைகளில் கிடைத்தவை
கெஞ்சி வாங்கிய கடன்களின் கருணை
பணத்திற்கான வடிகால்களாகின என் தேடலில்

அவிழ்க்கின்றேன் கனவினை எழுகின்றது அடித்தளம்
ஆசைகளைத் தெளித்து கற்களை அடுக்குகின்றேன்
உணர்வுகளின் துடிப்பினைச் சுமந்தவாறே நிமிர்கின்றது
அரை குறைகளுடன் கட்டிடச் சுவர்கள்
வெற்றுக் கைகள் முடிவுறுத்துகின்றனவோ கனவினை

முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற தூண்கள்
முகவரிகளாகி முணுமுணுக்கின்றன சதைகளற்ற எலும்புக்கூடுகளாகி
கற்பனைகளுடன் பிசைகின்ற கனவு வீடு
வெறும் சொற்களாகிச் சிரிக்கின்றதே வரைபடத்தில்

வெயிற் பூக்களும் வெண்மதியும் நிறைவாக
மலர்கின்ற எழில் சுற்றுக்கட்டுத் தாழ்வாரமும்
காற்றின் விரல்களை இதமாகத் தடவுகின்ற
சாளரங்களையும் அமைத்திட ஆசைதனைக் கொண்டேன்

இயற்கைச் சுகத்தினை அறுத்திடாத ஆர்வம்
இறுக்கிப் பிடிக்கின்றது கூரைத் தெரிவில்
வெற்றாசைகள் தாங்குமோ காசின் எடைக்கே

கூரைக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாமலே இருக்கின்றன
கட்டியெழுப்பப்பட்ட பாதிச் சுவர்களைத் தாங்கியவாறு
குட்டித் தூண்கள் குற்றுயிர்களாகிக் கிடக்கின்றன
கட்டி முடிக்கப்படாத வீடும் அழுகின்றதே

கொட்டும் மழையும் நனைக்கின்ற போதெல்லாம்
வெட்டி விட முளைக்கின்ற பற்றைகள்
தொட்டுக் காட்டுகின்றதே பூச்சில்லாத தரையினை

உரிய பரிமாணச் செதுக்கல்களைத் தாங்கியவாறு
உருவாக்கப்பட்ட பெரிய அறைகள் இரண்டும்
பளிங்குகள் பதிக்கப்பட்ட விசாலத் தரையும்
அடக்கமான அழகிய குட்டிச் சமையலறை

வித விதமான வண்ணங்களைத் தாங்கியவாறு
உயிர்க்கின்ற எனக்கான இருப்பிட இல்லம்
வாய்த்துவிடக் கூடியதுதானோ வீடடையும் பேறு
இன்னும் முற்றுப்பெறாத வாழிடக் கூட்டினை
முழுமையாக நிறைக்கின்றன பெருமூச்சுக்களும் வறுமையும்

ஜன்ஸி கபூர் - 22.10.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!