About Me

2021/04/15

பசுமை காப்போம்

 


பரந்து விரிந்து காணப்படுகின்ற ஆகாயக் கூரைக்குள் தன்னை அடக்கிக் காணப்படுகின்ற அழகிய பூமிக்கு இறைவனால் வழங்கப்பட்ட அற்புதமான  வளங்களே பசுமை மரங்களாகும். பச்சைப் பசேலென கண்ணுக்கு இதமளிக்கின்ற இயற்கைக் கொடையினை காக்க வேண்டிய பொறுப்பு நமது கரங்களில் தங்கியுள்ளது. 

சுயநலம் எனும் குறுகிய சிந்தனையால் மனிதர்கள் தமது தேவைகளுக்காக பசுமையைத் தாக்குகின்ற விசக் கிருமிகளாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள். 

இயற்கைச் சமநிலை பேணப்படக் கூடிய விதத்தில் தாவரங்களுக்கும் விலங்குகளுக்குமிடையில் காணப்படுகின்ற பிணைப்பு இப்பசுமை அழிப்பினால் அறுந்து போவதனால் புவியின் உயிர்ப்பான கட்டமைப்பும் செயற்பாடுகளும் அழிவடைகின்றன.பசுமைக்குள் நாம் அழிவினை ஏற்படுத்தும்போது ஓசோன் படை சிதைவடைகின்றது. அத்துடன் தட்ப, வெப்ப சூழ்நிலை மாற்றம், அனல் காற்று, நிலத்தடி நீர் வற்றிப் போதல், பருவ மழை பொய்த்தல், சூழல் மாசடைதல் போன்ற இயற்கை நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்படுவதுடன்இ சுவாசப் பாதிப்புக்கள் உள்ளிட்ட நமது தேக ஆரோக்கியமும் பாதிப்படைகின்றன. 

நாம் இயற்கை எனும் சொத்துக்கு ஏற்படுத்துகின்ற சேதத்தால் நமக்கு நாமே அழிவினை ஏற்படுத்துகின்றோம். நமது வாழ்வின் வனப்பினையும் அழிக்கின்றோம். நாகரிக வளர்ச்சி எனும் மாயைக்குள் நாம் ஏற்படுத்தும் அழிவு உலகத்தையே ஆபத்தின் விளிம்புக்குள் தள்ளுகின்றது. பூமியை உயிர்ப்புடன் அசைத்துக் கொண்டிருக்கின்ற சுவாச மையமான இந்த பூமியைக் காக்க வேண்டுமானால் மரங்களை வெட்டுவதைத் தவிர்தது புது மரங்களை நட்டுதல் வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வுகள் மூலமாக பசுமையைக் காத்து இயற்கை இன்பத்தை நாமும் அனுபவிக்கலாம்.

ஜன்ஸி கபூர் - 01.10.2020


பெண்மையைப் போற்றுவோம்

 

மென்மை எனும் போர்வைக்குள் தன்னைப் போர்த்திக் கொண்டிருக்கும் பெண்மை இவ்வுலகின் வெளிச்சத்திற்கான கண்கள். பண்டைய காலந்தொட்டு இற்றைவரை பெண்மைக்குள் பொதிந்திருக்கும் நாற்குணங்களால்  ஈர்க்கப்படாதோருண்டோ?   நல்லறத்தின் வடிவமாகவும் பண்பாட்டின் மகுடமாகவும் வாழ்க்கைக்கான தவமாகவும் சக்திமிக்க தாய்மையாகவும் திகழும் பெண்ணானவள் ஒவ்வொரு ஆணின் இயக்கத்திற்குமான சக்தியாகவே பரிணமிக்கின்றாள். இவ்வுலக நிலவுகைக்குள்ளும் அவளின் பண்புகள் நினைவூட்டப்படுகின்றன.  இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் அவளின்; மாண்புகள்  பிரகாசித்துக் கொண்டேயிருக்கின்றது.  

பெண்ணின் சிறப்பினை உலகப் பேராசான் வள்ளுவனும் தனது குறளில் தனி அதிகாரமிட்டு சிறப்பித்துக் கூறியுள்ளார். தாயின் காலடியில் சுவர்க்கம் இருப்பதாக திருக்குர் ஆன் கூறுகிறது. ஓவ்வொரு மதமும் பெண்மையைக் கண்ணியப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு பெண்மைக்குள்ளும் குடும்பத்தைப் பரிபாலிக்கின்ற சிறந்த நிர்வாகத் திறன் காணப்படுகின்றது.  

பெண்மையைச் சுற்றிக் காணப்படுகின்ற பல்வேறு யதார்த்தங்களின் நெருக்கடிகள் அவளது போராட்டத்திற்கான தடங்களை உருவாக்குகின்றன. பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு குடும்ப அடக்குமுறைகள் பொருளாதார நெருக்கடிகள் போன்ற இடர்களில்   சிக்குப்படுகின்ற   நிலை இன்றைய முன்னேற்றமான உலக வாழ்வியலிலும் அரங்கேற்றப்படுகின்றது என்பதே கசப்பான உண்மையாகும். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு எனக் கோஷமிட்ட அன்றைய நாட்கள் தொடக்கம் ஆணுக்குச் சரிசமனாக உரிமைகளை அனுபவித்து வாழ்கின்ற  இன்றைய காலகட்டம் வரையில் காணப்பட்ட பெண்ணின் வளர்ச்சிப்படி நிலையில் பல்வேறு போராட்டங்கள் ஒளிந்து கொண்டுள்ளன.

 பெண்ணின் முன்னேற்றத்திற்குத் தடையாகக் காணப்படும் அனைத்துக் காரணிகளையும் இனங்கண்டு தகர்த்துவதன் மூலம் பெண்ணின் மேன்மையைப் பாதுகாக்கலாம்.

எனவே பெண்ணுக்கான மதிப்பும் மரியாதையும் எள்ளளவும் குறையாது   அவளைப் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொருவரின்   கடமையாகின்றது.

ஜன்ஸி கபூர் - 12.10.2020

2021/04/14

வல்வரவு வாழ்வார்க்கு உரை

 

 

செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை (1151)

இன்பநலன் நுகர்ந்திடும் காதல் மணத்தில்/

இதமற்ற பிரிவும் பெருந் துன்பமே/

இன்னுயிர் வருத்திடும் பிரிவின் வலிதனை/

உணர்த்துதே பிரிவாற்றாமை அதிகாரச் சுவை/


இல்லறச் செழுமையில் வருங்காலம் வனப்புற/

தலைவனின் சிந்தைக்குள் உயிர்க்கின்றதே பொருளீட்டல்/

தேடல்ச் சிந்தனை தோழியூடாக உரைத்தால்/

தெரிந்திடுவாளே தலைவியுமதை தாக்கமில்லாச் செய்தியாய்/


வாழ்விற்கே காப்பாம் வளமான துணையே/

நிழலென நீண்டிட வேண்டுமே எதிர்காலத்தினில்/

உணர்வுகளைப் பொருத்திய உடல்கள் பிரிதல்/

உத்தம கற்பின் நியதியோ இவ்வையகத்தில்/


அறிந்திட்டாள் தலைவியும் அணைத்தாள் அக்கினியை/

பிரிந்திடேன் என்றவரே துன்பத்துள் தள்ளுகின்றார்/

பிரியமே நீங்கிடாதே நானும் இறக்கும்வரை/

பிரிந்துப் போகாமை உண்டென்றால் சொல்/


மாறாக விரைந்து வருவேன் என்றுரைத்தால்/

உரைத்திடு அடுத்தாரிடம் உன் வருகையை/

நானோ அறியேன் உன் வாசனையை/

உறைந்திருப்பேன் மரணத்துள் என்னுயிரும் மெலிந்திருக்கும்/


ஜன்ஸி கபூர் - 15.10.2020


 
 
  


 

தாலாட்டு


 

அம்மாவெனும் உணர்வினை எனக்குள் உருத்துலக்குகின்றேன்
உயர்ந்து கொண்டே செல்கின்றது பாசத்தினளவு
உருவத்தினுள் அடங்காத உணர்வுகளின் பிம்பமவர்
 
உணர்வுகளை மெல்ல வருடுகின்ற அம்மாவின் தாலாட்டில்
ஏதோ வசீகரம் வீசுவதை உணர்கின்றேன்
கன்னம் வருடி காதோரம் கிசுகிசுப்பாகத்
தன் அன்பினை அள்ளிப் பிசைகையில்
மனம் எங்கோ சிறகடிக்கின்றது அடிக்கடி

வயது என்பது வெறும் எண்பெறுமானம்தானே
ஆழ்மனதினைத் தொட்டு இதப்படுத்தும் பக்குவம்
அம்மாவுக்கு கைவந்த கலையோவென நினைக்கின்றேன்
அதனால்தானோ எல்லோரையும் தூங்கவைக்க முடிகின்றது

அப்பா எனக்குள் ஒரு பிரமை
நிதர்சனத் தரிசிப்புக்களில் காணாமல் போனவர்
அப்பாவும் இவ்வாறான தாலாட்டில்தான் உறங்கினாரோ
எங்கோ அவர் உருவமற்ற ஆத்மாவாக
எனைச் சுற்றியும் இருந்திடக் கூடும்
அம்மா செய்ததெல்லாம் சரியெனும் நினைப்பில்
அம்மாமீதான நம்பிக்கை எனக்குள் விரிகின்றது  

தாலாட்டு உறக்கத்தையும் மரணத்தையும் தொடர்புபடுத்துகின்றதோ
இரண்டினதும் ஆழ்மன அமைதி தொடர்பிலிருக்கின்றதே
விழிகள் மூடிய மௌனநிலை நீள்கையில்
விண்ணேவுகின்றது நம் ஆத்மாவும் மீளாது
இருதயத்துடிப்பின் ஓய்வு நிலையுடன் அஸ்தமிக்கின்றதோ
இவ்வுலக வாழ்வின் தேடல் வேட்கை 

உறக்கத்தின்போது மெதுவாக நகருகின்ற ஆழ்மனம்
மரணம் காண்கையில் மிகையாகச் சுழல்கின்றதே
ஈற்றில் மீளா இருளுக்குள் மூழ்கி
மீளாத் திசையின் சிதைவுகளுக்குள் அடங்கி 
மண்ணுக்குள் தன்னைப் பிணைத்தும் விடுகின்றது

அம்மாவும் உறவுகளின் வலிகளைத் தனக்குள்
அனுபவித்தே துடிப்புடன் மரணம் தொட்டிருக்கின்றாள் 
குழந்தையினதும் முதுமையினதும் மரண அலைவுகளால் 
தனது வலியினைப் புதுப்பித்தும் இருக்கின்றாள்

சடத்துவமான இப்புவியின் ஒவ்வோர் அணுவுக்குள்ளும்
தன்னைப் பிணைத்திருக்கின்றதோ உயிரின் ஆத்மா 
உடல் உடைகையில் ஆன்மாவும் அவாக்கொள்கின்றது
எல்லாப் பரும்பொருளையும் போலவே தன்னையடக்காது
சுதந்திரமாகச் சிறகினை விரித்திடத் துடிக்கின்றது. 

எங்கோ வெகுதொலைவில் அம்மாவின் தாலாட்டு
எனை அழைக்கின்ற பிரமைக்குள் வீழ்கின்றேன் 
அத்தாய்மைக்குள் தவழ்ந்திட மனமும் துடிக்கின்றதே
இருந்தும் வாழ்வியல்நெறிகளின் தடைகளுக்குள் நான்

தொலைவில்  மேக நிழல்களின் அலைவுகளுக்கிடையில்
அணுக்களாக உதிர்ந்து கிடக்கின்ற தங்கையினை
தன்கரங்களிலேந்தி அம்மாவும் புன்னகைத்துக் கொண்டிருக்கின்றார்

எனைப் பார்த்தே கரமசைக்கும் தாய்மையை
ரசித்தவாறே காத்திருக்கின்றேன் நானும் அம்மாவுக்காக

ஜன்ஸி கபூர் - 31.10.2020

 
Kesavadhas
 --------------
ஜன்ஸி கபூர் ஆழ்கடல் முத்தெடுப்பில் அவதானிக்கிறது இந்த கவிதை!
அம்மா என்பது உணர்வு பிம்பம்
உருவத்துள் அடங்காத பாசத்தின் கொள்ளுரு
இது தாய்மை!
கன்னம் வருடி காதோரம் கிசுகிசுக்கும் தாலாட்டில் ஏதோ வசீகரம் வீசுகிறது மலரின் மருவாக!
வயது என்பது ஓர் அளவலகே! பக்குவம் என்பது மனநிலை!
அது தாய்மையின் உயிர்க்கலை!
நிதர்சன தரிசிப்புகளில் காணாமல் போன தந்தையை அன்னையின் தாலாட்டில் ஆசுவாசப் படுத்துகிறது கவிதை!
உறக்கம் விழிப்பு பிறப்பு இறப்பு
ஆன்மா மண்தொடும் ஆகம் என ஆன்மிக வெளியில் சஞ்சரிக்கிறது கவிதை!
வெளி விரிகிறது.. முடிவில்லையே!
அணுவின் அணுவாய் திகழும் ஆன்மாவின் தரிசனமும் தடைபடுகிறது வாழ்வியல் நெறிகளின் தடைகளுக்குள்!
எல்லாமே நாம் விரித்தது தாம்!
இது ஆன்ம வெளிப் பயணம்... தொடரும்...
வாழ்த்துக்கள் கவிஞரே!
 ·