About Me

2021/04/14

தாலாட்டு


 

அம்மாவெனும் உணர்வினை எனக்குள் உருத்துலக்குகின்றேன்
உயர்ந்து கொண்டே செல்கின்றது பாசத்தினளவு
உருவத்தினுள் அடங்காத உணர்வுகளின் பிம்பமவர்
 
உணர்வுகளை மெல்ல வருடுகின்ற அம்மாவின் தாலாட்டில்
ஏதோ வசீகரம் வீசுவதை உணர்கின்றேன்
கன்னம் வருடி காதோரம் கிசுகிசுப்பாகத்
தன் அன்பினை அள்ளிப் பிசைகையில்
மனம் எங்கோ சிறகடிக்கின்றது அடிக்கடி

வயது என்பது வெறும் எண்பெறுமானம்தானே
ஆழ்மனதினைத் தொட்டு இதப்படுத்தும் பக்குவம்
அம்மாவுக்கு கைவந்த கலையோவென நினைக்கின்றேன்
அதனால்தானோ எல்லோரையும் தூங்கவைக்க முடிகின்றது

அப்பா எனக்குள் ஒரு பிரமை
நிதர்சனத் தரிசிப்புக்களில் காணாமல் போனவர்
அப்பாவும் இவ்வாறான தாலாட்டில்தான் உறங்கினாரோ
எங்கோ அவர் உருவமற்ற ஆத்மாவாக
எனைச் சுற்றியும் இருந்திடக் கூடும்
அம்மா செய்ததெல்லாம் சரியெனும் நினைப்பில்
அம்மாமீதான நம்பிக்கை எனக்குள் விரிகின்றது  

தாலாட்டு உறக்கத்தையும் மரணத்தையும் தொடர்புபடுத்துகின்றதோ
இரண்டினதும் ஆழ்மன அமைதி தொடர்பிலிருக்கின்றதே
விழிகள் மூடிய மௌனநிலை நீள்கையில்
விண்ணேவுகின்றது நம் ஆத்மாவும் மீளாது
இருதயத்துடிப்பின் ஓய்வு நிலையுடன் அஸ்தமிக்கின்றதோ
இவ்வுலக வாழ்வின் தேடல் வேட்கை 

உறக்கத்தின்போது மெதுவாக நகருகின்ற ஆழ்மனம்
மரணம் காண்கையில் மிகையாகச் சுழல்கின்றதே
ஈற்றில் மீளா இருளுக்குள் மூழ்கி
மீளாத் திசையின் சிதைவுகளுக்குள் அடங்கி 
மண்ணுக்குள் தன்னைப் பிணைத்தும் விடுகின்றது

அம்மாவும் உறவுகளின் வலிகளைத் தனக்குள்
அனுபவித்தே துடிப்புடன் மரணம் தொட்டிருக்கின்றாள் 
குழந்தையினதும் முதுமையினதும் மரண அலைவுகளால் 
தனது வலியினைப் புதுப்பித்தும் இருக்கின்றாள்

சடத்துவமான இப்புவியின் ஒவ்வோர் அணுவுக்குள்ளும்
தன்னைப் பிணைத்திருக்கின்றதோ உயிரின் ஆத்மா 
உடல் உடைகையில் ஆன்மாவும் அவாக்கொள்கின்றது
எல்லாப் பரும்பொருளையும் போலவே தன்னையடக்காது
சுதந்திரமாகச் சிறகினை விரித்திடத் துடிக்கின்றது. 

எங்கோ வெகுதொலைவில் அம்மாவின் தாலாட்டு
எனை அழைக்கின்ற பிரமைக்குள் வீழ்கின்றேன் 
அத்தாய்மைக்குள் தவழ்ந்திட மனமும் துடிக்கின்றதே
இருந்தும் வாழ்வியல்நெறிகளின் தடைகளுக்குள் நான்

தொலைவில்  மேக நிழல்களின் அலைவுகளுக்கிடையில்
அணுக்களாக உதிர்ந்து கிடக்கின்ற தங்கையினை
தன்கரங்களிலேந்தி அம்மாவும் புன்னகைத்துக் கொண்டிருக்கின்றார்

எனைப் பார்த்தே கரமசைக்கும் தாய்மையை
ரசித்தவாறே காத்திருக்கின்றேன் நானும் அம்மாவுக்காக

ஜன்ஸி கபூர் - 31.10.2020

 
Kesavadhas
 --------------
ஜன்ஸி கபூர் ஆழ்கடல் முத்தெடுப்பில் அவதானிக்கிறது இந்த கவிதை!
அம்மா என்பது உணர்வு பிம்பம்
உருவத்துள் அடங்காத பாசத்தின் கொள்ளுரு
இது தாய்மை!
கன்னம் வருடி காதோரம் கிசுகிசுக்கும் தாலாட்டில் ஏதோ வசீகரம் வீசுகிறது மலரின் மருவாக!
வயது என்பது ஓர் அளவலகே! பக்குவம் என்பது மனநிலை!
அது தாய்மையின் உயிர்க்கலை!
நிதர்சன தரிசிப்புகளில் காணாமல் போன தந்தையை அன்னையின் தாலாட்டில் ஆசுவாசப் படுத்துகிறது கவிதை!
உறக்கம் விழிப்பு பிறப்பு இறப்பு
ஆன்மா மண்தொடும் ஆகம் என ஆன்மிக வெளியில் சஞ்சரிக்கிறது கவிதை!
வெளி விரிகிறது.. முடிவில்லையே!
அணுவின் அணுவாய் திகழும் ஆன்மாவின் தரிசனமும் தடைபடுகிறது வாழ்வியல் நெறிகளின் தடைகளுக்குள்!
எல்லாமே நாம் விரித்தது தாம்!
இது ஆன்ம வெளிப் பயணம்... தொடரும்...
வாழ்த்துக்கள் கவிஞரே!
 ·

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!