About Me

2021/04/15

பெண்மையைப் போற்றுவோம்

 

மென்மை எனும் போர்வைக்குள் தன்னைப் போர்த்திக் கொண்டிருக்கும் பெண்மை இவ்வுலகின் வெளிச்சத்திற்கான கண்கள். பண்டைய காலந்தொட்டு இற்றைவரை பெண்மைக்குள் பொதிந்திருக்கும் நாற்குணங்களால்  ஈர்க்கப்படாதோருண்டோ?   நல்லறத்தின் வடிவமாகவும் பண்பாட்டின் மகுடமாகவும் வாழ்க்கைக்கான தவமாகவும் சக்திமிக்க தாய்மையாகவும் திகழும் பெண்ணானவள் ஒவ்வொரு ஆணின் இயக்கத்திற்குமான சக்தியாகவே பரிணமிக்கின்றாள். இவ்வுலக நிலவுகைக்குள்ளும் அவளின் பண்புகள் நினைவூட்டப்படுகின்றன.  இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் அவளின்; மாண்புகள்  பிரகாசித்துக் கொண்டேயிருக்கின்றது.  

பெண்ணின் சிறப்பினை உலகப் பேராசான் வள்ளுவனும் தனது குறளில் தனி அதிகாரமிட்டு சிறப்பித்துக் கூறியுள்ளார். தாயின் காலடியில் சுவர்க்கம் இருப்பதாக திருக்குர் ஆன் கூறுகிறது. ஓவ்வொரு மதமும் பெண்மையைக் கண்ணியப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு பெண்மைக்குள்ளும் குடும்பத்தைப் பரிபாலிக்கின்ற சிறந்த நிர்வாகத் திறன் காணப்படுகின்றது.  

பெண்மையைச் சுற்றிக் காணப்படுகின்ற பல்வேறு யதார்த்தங்களின் நெருக்கடிகள் அவளது போராட்டத்திற்கான தடங்களை உருவாக்குகின்றன. பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு குடும்ப அடக்குமுறைகள் பொருளாதார நெருக்கடிகள் போன்ற இடர்களில்   சிக்குப்படுகின்ற   நிலை இன்றைய முன்னேற்றமான உலக வாழ்வியலிலும் அரங்கேற்றப்படுகின்றது என்பதே கசப்பான உண்மையாகும். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு எனக் கோஷமிட்ட அன்றைய நாட்கள் தொடக்கம் ஆணுக்குச் சரிசமனாக உரிமைகளை அனுபவித்து வாழ்கின்ற  இன்றைய காலகட்டம் வரையில் காணப்பட்ட பெண்ணின் வளர்ச்சிப்படி நிலையில் பல்வேறு போராட்டங்கள் ஒளிந்து கொண்டுள்ளன.

 பெண்ணின் முன்னேற்றத்திற்குத் தடையாகக் காணப்படும் அனைத்துக் காரணிகளையும் இனங்கண்டு தகர்த்துவதன் மூலம் பெண்ணின் மேன்மையைப் பாதுகாக்கலாம்.

எனவே பெண்ணுக்கான மதிப்பும் மரியாதையும் எள்ளளவும் குறையாது   அவளைப் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொருவரின்   கடமையாகின்றது.

ஜன்ஸி கபூர் - 12.10.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!