About Me

2021/04/22

இடைவிடா அடைமழை

 


படர்கின்ற வெயிற் பூக்களை யறுத்திடவே/

இடர் மழையோ யிங்கு வெள்ளமாக/


வீழ்கின்ற துளிகளில் உதிர்ந்தோடும் மலர்களும்/

அவிழ்கின்ற மண் முடிச்சுக்களின் துளைகளும்/

வலியுடன் போராடி கரைந்தோடுகின்றன வலிமையுடன்/


சதைகளைத் துளைக்கும் ஈர வீரியமும்/

விதைக்கின்றதே குளிரினை உணர்வும் சிலிர்க்கின்றதே/


சாலையோரம் நனைந்தே வீசுகின்ற காற்றும்/

சொல்லிடுமோ கலைந்தோடும் கார்மேக இரகசியத்தினை/  

மனசுக்குள் சாரலடிக்கும் மேகவூற்றும் பேரின்பமே/


ஜன்ஸி கபூர்  

சித்திரவதைப் பார்வை



பெண்மைக்குள் தீயூற்றும் கலிகாலம் அணைப்பினிலே/

தாய்மையும் சூடுகின்றதே முட்கிரீடம் உயிரினிலே/

பருவங்கள் கடந்திடாத போதும் கரையேற்றும்/

பாதகங்கள் பாரினிலே அரங்கேற்றும் அவலத்தினை/


படிப்பேற்றாது அடுப்பூதும் அநுபவமதைக் கற்றிடவே/

பாதையினை வகுத்திடுவார் ஏழ்மைக்கும் கருணையில்லை/

இருமனமும் கலக்கின்ற திருமண பந்தத்திலே/

விரும்பிடுவார் சீதனத்தை சிதைந்திடுமே இல்லறமும்/


கொந்தளிக்கின்ற காமத்தினால் வல்லுறுக்கள் வட்டமிட்டே/

கொன்றொழிக்கும் உணர்வினையே வன்புணர்வும் சித்திரவதைக்குள்/

மங்கையராகப் பிறந்தோர் மாதவம் செய்தோரென/

முழங்கிடுவோரும் அறுக்கின்றார் அணங்கின் அடையாளங்களை/


வலிமைக்குள் வலி திணிக்குமிந்த வாழ்க்கை/

வேண்டாமே பாவைக்குள்ளோ சித்திரவதைப் பார்வை/

சிதறுகின்ற கனவுகளைப் பொறுக்குகின்ற விதியது/

அழியட்டும் அன்புக்குள் அவளுலகம் ஆளட்டும்/


ஜன்ஸி கபூர்  

ஆவாரை


ஆவாரையைப் பயன்படுத்துவோர் சாவாரோ நோயினில் 
ஆரோக்கிய வாழ்வினால் நாளெல்லாம் இதமே 

தாவரப் பகுதியெல்லாம் தந்திடுமே மருத்துவத்தை 
ஆதாரமே நமக்கும் பொன்மேனி அழகிற்கு 

நோய்க் கிருமிகள் பாய்ந்தோடும் விரைவாய் 
நோவினைத் தரும் புற்றும் நீங்குமே 

ஆவாரைப் பட்டையில் கெட்டியாகுமே பற்களும் 
ஆஸ்துமாவும் தீர்ந்து போகுமே தேகத்தில் 

மண்ணீரல் பலத்தில் மிரண்டோடும் காய்ச்சல் 
கண் எரிச்சலும் காணாமல் போகுமே 

ஆவாரப் பஞ்சாங்கம் ஆளைப் பலப்படுத்தும் 
ஆவாரப் பூவால் இரத்தமும் சீராகும் 

எக்ஸீமாவும் தாக்காது எழிலுக்கும் குறையிருக்காது 
எல்லோர் தேகத்திலும் கரும்புள்ளிகள் கரையுமே 

வாயுத் துன்பம் தேயும் இலைச்சாறில் 
நோயும் நீங்கி சிறுநீரகமும் சிறப்பாகுமே 

ஆவாரையின் உறுப்பெல்லாம் தேடித்தரும் இதத்தை 
அனுபவிப்போம் நாமும் வீட்டில் பயிரிட்டே 

இலை தண்டு வேர் பூவெல்லாம் 
இரணம் களையும் மூலிகையாய் முகங்காட்டுமே 

நாளின் புத்துயிணர்ச்சியை நயம்படத் தந்திடுமே 
தோலின் வறட்சியை விரட்டியே செழிப்பாக்குமே.

வெம்மையை உறிஞ்சி நிழல் விரித்திடும் 
வெற்றி வாழ்வைப் பற்றும் மருந்திதுவே 

 
ஜன்ஸி கபூர் 

மணிமுடி


 
புரட்டுகின்ற நூலும் 
        புதையலே சிந்தைக்கு/
புத்துணர்ச்சி தரும் 
        எண்ணங்களும் எழுதுகோல்களே/


புத்தாக்கச் சிந்தனையும் 
        செதுக்குமே வெற்றிகளை/
புது வழியைக் 
       காட்டிடுமே கல்வியும்/


சிரசேந்தும் அறிவில் 
       ஒழியுமே அறியாமையும்/
சிந்தையின் செயல்களில் 
      அனுபவமும் விரியுமே/

உனதான உரிமைகள் 
      உனைச் சேர்கையில்
உணர்வுக்குள் சுதந்திரமும் 
     உனை ஆளுமே

துணிச்சலின் முகவரியில் 
      முயற்சிகள் சேர
துணிந்த செயலினில்
       வலிமையும் கோர்க்க/ 

உறவுதனை அணைத்து 
      அன்பினை மொழிந்து/
கரும்பாய் இனித்திடும் 
      நடத்தையால் ஆளு/

கற்ற கல்வியால் 
      பெற்றிடுக மதிப்பும்/
சுற்றமும் போற்ற 
      ஏற்றமே எதிர்காலமாக/

மனிதம் சூட்டிடும் 
     மணிமுடி உன்னிலே/
இனிய வாழ்வும் 
      வளமான எதிர்காலமும்/

ஜன்ஸி கபூர்  


 பின்னூட்டம்

கவி பா.மா சேகர்
 
ஜன்ஸி கபூர் ஒவ்வோர் வரியிலும் ஓர் உன்னத நம்பிக்கையின் இழையோட்டம் மிளிர்வது படைப்புத் திறனுக்கான முதல் முத்திரை!
நேர்த்தியான சிந்தனைகளும் 
தெள்ளிய நீரோட்டம் போன்ற துல்லிய சொற்கோர்வைகளும் தங்கள் ஆளுமைக்கான சிறப்பம்சமாய்த் திகழ்கிறது!
மேன்மேலும் இவ்வாறான செறிவான கருத்துக்கள் அடங்கிய படைப்புகளை வழங்கித் தன்னிகரற்ற படைப்பாளராய்த் தமிழ்தொண்டில் சிறந்திட நல்வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே!!