About Me

2021/05/14

திரு ஸ்மித்தின் புதிய மூக்கு (Mr. Smith's new nose)

 

கிறீஸ் ரோஸ் என்பவர் எழுதிய திரு ஸ்மித்தின் புதிய மூக்கு  எனும் ஆங்கில சிறுகதையின் தமிழாக்கம் என் பார்வையில்

இது பிரிட்டிஸ் கவுன்சில் பாட நூலில் உள்ள சிறுகதைதான் ஆனாலும் கதையின் போக்கு நம்மை சிந்திக்க வைக்கின்றது.  

----------------------------------------------------------------------------------

22 ஆம் நூற்றாண்டு காலத்தில் மக்கள் தமது உடல்களை தாம் விரும்பியவாறு புதிய தொழில்நுட்பங்கள் மூலம், வடிவமைத்தால் எவ்வாறு அது அமையும் என்பதை இச்சிறுகதை சுவைபட முன்வைக்கின்றது.

இதோ...கதையின் நகர்வு. சுவையுங்கள். என்னுடன் சேர்ந்து கதை வரிகளை இரசியுங்கள்.

நாகரீக மோகத்தில் நமது சுயத்தை நாம் இழந்து படுகின்ற அவஸ்தையை இக்கதையின் ஒவ்வொரு வரிகளிலும் உணரலாம்

திரு ஸ்மித் எனும் நமது ஹீரோ தனது பெரிய மூக்கினை மாற்றி, அழகான மூக்கு ஒன்றினைக் கொள்வனவு செய்ய கடைக்குப் போகின்றார். கடை உதவியாளரின் இரசனையுடன் சேர்ந்து மிகவும் நாகரீகமானதும், தனக்குப் பொருத்தமானதுமான சிறிய மூக்கினைக் கொள்வனவு செய்கின்றார்.

தனது மனைவியிடம் அதனை தொலைபேசி வீடியோ கால் மூலமாகக் காட்டி "பிடிக்கின்றதா" என சம்மதமும் பெறுகின்றார்.

"நூறு ஆண்டுகளுக்கு முன்பு,  உடலை மாற்றுவது சாத்தியமில்லை. பழைய கால 'பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை' இருந்தது. ஆனால் அது விலை உயர்ந்தது. வேதனையானது மற்றும் ஆபத்தானது. அச்சச்சோ! இப்போது  எங்கள் 22 ஆம் நூற்றாண்டின் மரபணு பொறியியலுக்கு நன்றி. நாம் விரும்பும் போது நம் உடலை மாற்றலாம்!"

என கண்ணாடியில் இருந்த தனது புதிய சிறிய மூக்கைப் பார்த்து, எவ்வளவு நாகரீகமாக இருக்கிறார் என்று யோசித்தார். 

அவர் தனது புதிய மூக்கில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். 

ஆனால் இப்போது ஒரு பிரச்சனை ?

மூக்கிற்குப் பொருத்தமான தலைமுடி வேண்டுமே.!

இணையத்தில் அதனைத் தேடிக் கிடைக்காததால் நேரடியாக கொள்வனவு செய்வதற்காக குறித்த கடைக்குச் செல்கின்றார். 

அவரது பழைய சாம்பல் நிறமான முடியை நீக்கி, இளமையாகக் காட்சியளிக்க வைக்கின்ற, குறுகிய, செந்நிற, சுருண்ட முடிகளை விரும்பி கொள்வனவு செய்தபோது, கடை உதவியாளர்கள் புதிய காதுகளைப் பற்றிச் சொன்னார்.

ஆசை யாரைத் தான் விட்டது. தனது மூக்கு, தலைமுடிக்குப் பொருத்தமான காதுகளைத் தெரிவு செய்ய விரும்பினார். கடை உதவியாளரின் உதவியுடன் இரண்டு காதுகளையும் கொள்வனவு செய்து வெளியேறினார்.

பின்னர் அவரது ஆசைகளின் பட்டியல் நீண்டது. அவரது புதிய உடலில்   ஆர்வம் வளரத் தொடங்கியது.

அவர் புதிய நாகரீகமான, பச்சை  கண்கள்,   புதிய கைகள்,  புதிய முழங்கால்கள் மற்றும் புதிய கால்களை வாங்கினார். 

திரு ஸ்மித்தின் புதிய கால்கள் அவரது பழைய கால்களைப் போல மோசமாக இல்லை. என திருமதி ஸ்மித்  மகிழ்ச்சி  அடைந்தார்.

திரு ஸ்மித் புது வடிவம் பெற்று நாகரீக மனிதன் ஆனார். அது அவருக்குப் பெருமையாக இருந்தது.

ஆனால் மறுநாள் காலை விடிந்ததும் ஸ்மித்தின் மூக்கு இயங்கவில்லை. மனைவியிடம் அவர் இதுபற்றிக் கூறியபோது அவர்;

'ஒருவேளை உங்களுக்கு சளி வந்திருக்கலாம்' என்று   பரிந்துரைத்தார்.

'அது சாத்தியமில்லை! இது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பாடிகோ மூக்கு! சளி வராது! ' என ஸ்மித் கூறினார். 

ஸ்மித்தால் எதனையும் மணக்க முடியவில்லை. எனவே அதே கடையில் இயங்கக்கூடிய இன்னுமொரு மூக்கினை கொள்வனவு செய்ய மீண்டும் அதே கடைக்குச் சென்றார்.

ஆனால் கடை உதவியாளர், நாகரீகமான சிறிய மூக்குகளை ஏற்கனவே வாங்கி விட்டீர்களே எனக் கூறினான். 

 'எனக்கு ஒரு புதிய மூக்கு வேண்டும். ஏனெனில் இது வேலை செய்யாது!'

'அது சாத்தியமற்றது' என்று கடை உதவியாளர் கூறினார். 

'உங்களிடம் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பாடிகோ மூக்கு உள்ளது. அது தவறாக போக முடியாது! '

'ஆனால் அது தவறாகிவிட்டது' என்று திரு ஸ்மித் பதிலளித்தார். 

' என்னால் எதையும் மணக்க முடியாது.' என்றார்.

'மிஸ்டர் ஸ்மித் என்ன செய்ய உங்கள் மூக்கைப் பயன்படுத்தினீர்கள்?' 

கடை உதவியாளர் கேட்டபோது சுவாசிக்கவும், வாசனைக்கும் பயன்படுத்தியதாகக் கூறினார். 

'மிஸ்டர் ஸ்மித், நீங்கள் உங்கள் மூக்கை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால், அது சரியாக இயங்காது.' எனக் கடைக்காரர் கூறியபோது,

'அது அபத்தமானது!' என திரு. ஸ்மித் கத்தினார். 

'எனக்கு என் பணம் திரும்ப வேண்டும்! எனக்கு பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்! ' என்றார். 

ஆனால் கடைக்காரரோ ...............................

'திரு ஸ்மித், நாங்கள் பணத்தைத் திரும்ப  வழங்க மாட்டோம்  என்றார்.   

திரு ஸ்மித் மிகவும் கோபமடைந்தார். அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் கடையிலிருந்து வெளியேறினார். எதுவும் பேசவில்லை.

ஆனால் இப்போது அவருக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டது. 

பயனற்ற மூக்கு. 

நாகரீகம் என நினைத்தது பயனற்றுப் போனது.  

துரதிர்ஷ்டவசமாக, அவரது பிரச்சினைகள் வளர ஆரம்பித்தன. மறுநாள் காலையில் அவர் எழுந்தபோது அவருக்கு எதுவும் கேட்க முடியவில்லை. பின்னர் அவரது புதிய இளஞ்சிவப்பு முடி நரைத்தது. புதிய முழங்கால்கள் நகரவில்லை. அவரது அசாதாரண பச்சைக் கண்களால் ஒரு விஷயத்தைப் பார்க்க முடியவில்லை. விரல்கள் ஒவ்வொன்றாக விழுந்தன. நடக்கவும் முடியவில்லை.

இறுதியில்  திருமதி ஸ்மித் அவரை அவர்களின் ஏர்காரில் வைத்து அவற்றைக் கொள்வனவு செய்த கடைக்குப் போனார்.  

'குட் மார்னிங், மிஸ்டர் ஸ்மித்"  கடை உதவியாளர் கூறினார்.

 'இன்று நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும்? 

என்றபோது அவரது மனைவியோ "இன்று அவர் எதையும் புதிதாக விரும்ப மாட்டார். ஆனாலும் அவர் தனது பழைய உடலை மீளப் பெற விரும்புகின்றார்" எனப் பதிலளித்தார். 

'திருமதி ஸ்மித், நாங்கள் பணத்தை  திரும்ப வழங்க மாட்டோம்" எனக் கடைக்காரர் கூற,   

'நான் பணத்தைத் திரும்பப் பெற விரும்பவில்லை' 

என்று திருமதி ஸ்மித் விளக்கினார்.

 'என் கணவரின் அசல் உடலை மீண்டும் விரும்புகிறேன்! இந்த புதியதை விட எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது! ' என்றபோது,

 கடை உதவியாளரோ,

  'நாங்கள் சுற்றுச்சூழல் நட்பு நிறுவனம். எங்கள் பழைய உடல்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. ' என்றார்

ஆனால் திருமதி ஸ்மித்தோ தனது கணவருக்காக கடை உதவியாளரிடம் மீண்டும் வாதாடினார்

'ஆனால் நீங்கள் விற்ற புதிய உடல் பாகங்கள் வேலை செய்யாது! அவர் இப்போது என்ன செய்ய முடியும்? ' என்றபோது, 

கடை உரிமையாளரோ, 

'அவர் மறுசீரமைக்கப்பட்ட உடலை வாங்க முடியும்.' என்றார்.

''மறுசீரமைக்கப்பட்ட' உடல் என்றால் என்ன?' என அவர் மனைவி மீளக் கேட்டபோது, 

கடை உதவியாளர் கணனி உதவியுடன் மறுசீரமைக்கப்பட்ட ஸ்மித்தின் உடலைக் காட்டினார்.

  "அது மிகவும் பழக்கமான உடல். பெரிய மூக்கு மற்றும் நரை முடி"

திருமதி ஸ்மித்    "அது என் கணவர்!" எனக்  கத்தினார். '

அதுதான் அசல் மிஸ்டர் ஸ்மித்!' கடை உரிமையாளரும் அதனை அங்கீகரித்தார்.

'தயவுசெய்து அவர் தனது பழைய உடலை மீண்டும் வைத்திருக்க முடியுமா?' என திருமதி ஸ்மித் கேட்க அது 100,000 யூரோ எனப் பதிலளித்தார்.

ஆனால் திருமதி ஸ்மித் விலை அதிகமாக இருக்கின்றது என முணுமுணுத்தாலும் மீண்டும்,  அதனை வாங்கினார்.  

 திரு ஸ்மித் தனது சொந்த உடலைத் திரும்பப் பெற்றார். 

திருமதி ஸ்மித் அவரை விமானக் காரில் வீட்டிற்கு பறக்கவிட்டார்.

'நான் மீண்டும் நானே!'   ஸ்மித் கத்த,  

  திருமதி ஸ்மிதோ 'நீங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளீர்கள்.' என்றாள். ஏனெனில் உங்களிடம் தற்போது பயனுள்ள புதிய மூளை வந்துள்ளது என்றாள்.

ஸ்மித்தும் புன்னகையுடன் 'நானும் அப்படித்தான் நினைக்கிறேன், அன்பே,'  என்றார்

கிறிஸ் ரோஸ் எழுதிய இக்கதையை வாசித்தபோது, இதென்ன மூக்கு பற்றிய வித்தியாசமான தலைப்பாக இருக்கின்றதே என யோசித்தேன். ஆனாலும் கதையை முழுமையாக உள்வாங்கிய பின்னர், அதில் இழைக்கப்பட்டிருக்கின்ற படிப்பினை பெரிதாக இருக்கின்றது.

அலங்காரமின்றி எளிமையாக நகரும் இக்கதை எனக்குப் பிடித்திருக்கின்றது. உங்களுக்கு. ...............?

ஜன்ஸி கபூர் -14.05.2021


 

மன(ரத்)தின் வலி

 

இந்த மரத்திற்குள்ளும் வலி இருக்கின்றது. அந்த வலியினை என் உணர்வுகளால் உள்வாங்கியதால் அதனை இங்கு பகிர்கின்றேன்.

அன்று...........வைகாசி............முதல் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை

வீட்டின் கொல்லைப்புற நுழைவாயிலில், இந்த ஐந்து வருட தென்னை மரம் வரவேற்பாளர்போல காற்றில் அசைந்து கொண்டிருக்கும். திடீரென ஒரு நாள் அந்த மரத்தின் அருகில் குளவிக் கூடொன்று தொங்குவதைக் கண்டேன். அது சற்று பெருத்துக் காணப்பட்டதால், அம்மரத்தைக் கடக்கும்போதெல்லாம் குளவி பற்றிய கிலி பற்றிப் பிடித்துக் கொள்ளும்.

இப்போதுள்ள பிரச்சினை அக்குளவிக் கூட்டைக் கலைப்பது எப்படி?

ஒருவாறு இப்பிரச்சினைக்கான தீர்வாக பக்கத்து வீட்டு ஐயாவைத் தெரிவு செய்தோம். அவர்தான் எங்கள் வீட்டு சிறு சிறு தோட்ட வேலைகள் செய்து தருவார்.  அதற்கேற்ற கூலியைக் கொடுப்போம். 

ஐந்து வருடங்களுக்கு முன்னர் எங்க வாப்பா அவர் மூலமாகத்தான் அந்தத் தென்னை மரத்தை அவ்விடத்தில் நட்டியிருந்தார். 

அந்த ஐயா குடிகாரர் என்பதால் வேலைக்கு அவராக வரும்வரை  காத்திருப்போம்.

ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் அந்த ஐயா குளவிக்கூடு உடைப்பதாக அன்றுதான் வந்திருந்தார்.  குளவிக்கூடெல்லாம் மாலையில்தான் கலைக்க வேண்டும் என்ற தோரணையில் ஆறு மணிக்கு பந்தத்துடன் ஆயத்தமாக வந்திருந்தார்.  

ஆனாலும் அவரிடம் சாராய நொடி வீசவே வேண்டாம் என்றோம்.

ஆனாலும் அவர் வலுக்கட்டாயமாக குளவிக் கூட்டை கலைக்கின்ற வேலையில் இறங்கினார்.

உயரமான தென்னை மரத்திலுள்ள குளவிக்கூடினை விரட்ட சிறு தடியினுள் தனது புது சேர்ட்டை சுற்றிக் கட்டியிருந்தார்.

"ஐயோ.........ஐயா.! இது உங்க புது சேர்ட் போல இருக்கு. கழற்றுங்கோ. உங்க மனுசி கண்டா எங்களைத்தான் ஏசுவா"

என்றவாறு பழைய துணி கொடுத்தோம். அதனைக் கழற்றி விட்டு நாங்கள் கொடுத்த தடியில் புதுத் துணியைச் சுற்றிக்கட்டி எரியூற்றினார்.

மெது மெதுவாக மரத்தை நோக்கி தீப்பந்தம் ஏற்றிய அவர் கைகள் உயர்ந்தபோது, 

குளவியும் கலையும் எனும் பீதியில் நாங்கள் மறைந்து கொண்டோம்.

சில நிமிடங்கள் சென்றன. ஆனால் குளவிகள் வெளியே பறப்பதாகக் தெரியவில்லை.

குளவிக்கூடு தொங்கிக் கொண்டிருக்கின்ற மரத்தை அண்ணார்ந்து பார்த்தேன்.

காற்றில் குளவிக்கூடு இன்னும் அசைந்து கொண்டுதான் இருந்தது. 

ஆனாலும் தென்னை மரத்தின் உச்சிப் பகுதியில் வேகமாக தீப்பந்தம் பரவிக் கொண்டிருந்தது.

"ஐயோ தென்னை மரம் எரியுதே ஐயா"     கத்தினேன்

சிரித்தார். 

"இல்ல ரீச்சர். அந்த நெருப்பில குளவி கலைஞ்சிடும்"

 என்றார் பொறுமையாக.

எனக்குள் ஆத்திரம் தலைக்கேறியது 

"தென்னை மரம் பற்றி எரியுது. உங்களுக்கு தெரியவில்லையா. முதலில் தண்ணீரை ஊற்றி அணையுங்கோ." 

எனது சப்தம் கேட்டு மச்சானும் அந்த இடத்திற்கு வரவே,

பெரிய போராட்டத்தின் பின்னர் நீர் ஊற்றி மரத்தின் தீயை அணைத்தோம். தீயில் தென்னை மரம் உஷ்ணமேறிய அந்த அரை மணித்தியாலம் எனக்குள் உயிர் பறிபோன உணர்வு.

இழப்புக்கள்தானே இருப்பின் அருமையை உணர்த்துகின்றன.

இன்னும் முதல் காயே அறுவடை செய்யப்படாத அந்த தென்னை மரம், தீப்பற்றி எரிகையில் நானே எரிவதைப் போன்ற உணர்வு. மனது முழுதும் வலி நிரம்பிக் காணப்பட்டது. தீக்காயங்களுடன் கீழே விழுந்த குறும்பைகளைக் கண்டதும் ஏதோ ஒரு வலி. வேதனையுடன் பொறுக்கிக் கொண்டேன்.

நல்லவேளை மரம் பெரியளவில் சேதப்படவில்லை. ஆனாலும் அதனின் தாக்கம் எதிர்காலத்தில்தான் வெளிப்படும்.

தீயுடன் தென்னை மரம் போராடிய அந்தக் கணங்கள் இன்னும் என்னுள் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

ஜன்ஸி கபூர் - 14.05.2021


இணைந்த கரங்கள்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பார்கள். 

உண்மையில் ஒவ்வொரு ஆசானும் தான் உருவாக்குகின்ற மாணவர்களின் உயர்வான முன்னேற்றம் கண்டு தனக்குள் பெருமை கொள்கின்ற தாய்மைக் குணத்தை தமது  உணர்வுக்குள் தேக்கி வைத்திருக்கின்றார்கள்   என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இச்சம்பவம் முகநூல் வாயிலாக அறியக் கிடைத்த விடயம். இச்சம்பவக் கருவினை எனது பார்வையில் பதிவிட்டுள்ளேன்.  

அது......

கேரளா மல்லாபுரம் புகையிரத நிலையம்.

பரபரப்பு மிக்க அந்த பொழுதொன்றில் அவளும் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றாள். எதிரே வயதானவர் ஒருவர் அவள் கவனத்தை சற்றுக் கலைக்க நிதானித்து நிற்கின்றாள்.

'அம்மா...தாயீ...ஏதாவது ...தாம்மா...பசிக்குது'

அந்தக் குரல் எங்கோ........எப்போதோ கேட்ட குரல்...

யோசித்தாள். தனது கணித ஆசிரியையின் சாயல். தனது கணித ஆசிரியர் இரயில் நிலையத்தின் அருகே பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை அவளால் நம்ப முடியவில்லை.

அவரா....

இருக்காது. அந்த அன்பும் நொடிப் பொழுதில் தோன்றி மறைந்தது.

அந்தக் குழப்பம் வீடுவரை தொடர்ந்தது.

வீட்டுக்குச் சென்றதும் தனது பாடசாலைப் பருவ புகைப்படங்களை ஆராய்ந்தாள். அதே முகம்தான்.. இப்போது வறுமையும் முதுமையும் முழுமையாக நிரம்பியிருந்தன.

மறுநாள் அவரைத் தேடி அதே புகைவண்டி நிலையம் சென்றாள் மாணவி.

ஆனால் அந்தப் பெண்ணால் மாணவியை அடையாளம் காணமுடியவில்லை. இருந்தும் தன்னைப் பற்றிய விபரங்களை மாணவியிடம் பகிர்ந்து கொண்டார்.

 "நான் ஓய்வு பெற்ற பிறகு எனது குழந்தைகள் என்னை  விட்டு விலகி  போய் விட்டாங்க. அவர்கள் எனது வாழ்வாதாரத்தைப் பற்றி எந்த வகையிலும் கவலைப்படவில்லை.   அதனாலேயே  நான் இந்த முடிவுக்கு வந்தேன்" என்றார்.

அதனைக் கேட்டதும் அம்மாணவியின் மனம் வருந்தியது. பின்னர் ஆசிரியரின் எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிடுவதற்காக தான் படித்த மற்ற எல்லா நண்பர்களையும் தொடர்பு கொண்டார். மேலும் அன்பான ஆசிரியருக்கு சுதந்திரமாக வாழ ஒரு சிறந்த இடத்தையும் தயார் செய்து, ஆசிரியரை தனது சொந்த தாய் போலவே நடத்தினார்.   

பெற்ற  பிள்ளைகள் கைவிட்டாலும்கூட கற்பித்த குழந்தைகள் அவர்களை விடவில்லை. 

இது ஆசிரியர்- மாணவர் தலைமுறையின் சிறப்பின் பிரதிபலிப்பாகும்.

தேவைப்படுகின்றபோது செய்கின்ற சின்னச் சின்ன உதவிகளுக்கான பிரார்த்தனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சிறு புள்ளிகள்தானே கோலங்களாகின்றன. அவ்வாறே பல தனிக் கரங்கள் ஒன்று சேர்கையில் வலுவான நம்பிக்கையை உருவாக்கக்கூடிய எதிர்காலங்கள் உருவாகின்றன.

ஜன்ஸி கபூர் - 14.05.2021


2021/05/11

உம்மா

 

தாயே

எனது கைவிரல்கள் தொட்டு நீங்கள் பழக்கிய வாழ்க்கைக் கோலச் சுவடுகளைப் பார்த்து இவ்வுலகம் பிரமித்து நிற்கின்றது.

பிறர் அறியாது என்னுள் முகிழ்த்த வலிகளை நீங்கள் இரகஸியமாக உங்கள் கண்ணீரால் பொறுக்கியெடுக்கையில், என் தாயின் சுவர்க்க நிழலின் அருகாமை என் வேதனைகளைக் குறைத்திருப்பதை நீங்கள் அறிவீர்களா?

என் ஏற்றத்தின் ஏணியான உங்கள் தாய்மையின் மானசீக ஆசிர்வாதமும் படைத்த வல்லோனின் அருளும் என் பயணப் பாதையை எவ்வித இடையூறுகளுக்கு மத்தியிலும் தொய்வின்றிக் கொண்டு செல்கின்றது.

தாயே....

உங்கள் அருகாமையுடன் நான் வாழ்கின்ற பிரமாண்டமான உலகம் அழகாக இருக்கின்றது. ஆறுதலாகவும் இருக்கின்றது.

நான் தோள் சாய்கின்ற உங்கள் மடியின் மானசீக விசாலம் யாருக்குப் புரியும்?

உங்கள் அன்பின் மொழியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

என் சாதனைகளின் ஒவ்வொரு வெற்றிகளுக்கும் நீங்கள்தான் தன்னம்பிக்கையின் ஊற்று.

அன்னையர் தின வாழ்த்துக்களை என் அன்பின் மொழி கொண்டு வரைகின்றேன். இனித் தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு நாட்களும் உங்கள் ஆரோக்கியப் பேணுதலுடன் தொடரட்டும்.

அன்னையர் தின வாழ்த்துக்கள் உம்மா....

ஜன்ஸி கபூர் -09.05.2021