About Me

2021/05/14

மன(ரத்)தின் வலி

 

இந்த மரத்திற்குள்ளும் வலி இருக்கின்றது. அந்த வலியினை என் உணர்வுகளால் உள்வாங்கியதால் அதனை இங்கு பகிர்கின்றேன்.

அன்று...........வைகாசி............முதல் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை

வீட்டின் கொல்லைப்புற நுழைவாயிலில், இந்த ஐந்து வருட தென்னை மரம் வரவேற்பாளர்போல காற்றில் அசைந்து கொண்டிருக்கும். திடீரென ஒரு நாள் அந்த மரத்தின் அருகில் குளவிக் கூடொன்று தொங்குவதைக் கண்டேன். அது சற்று பெருத்துக் காணப்பட்டதால், அம்மரத்தைக் கடக்கும்போதெல்லாம் குளவி பற்றிய கிலி பற்றிப் பிடித்துக் கொள்ளும்.

இப்போதுள்ள பிரச்சினை அக்குளவிக் கூட்டைக் கலைப்பது எப்படி?

ஒருவாறு இப்பிரச்சினைக்கான தீர்வாக பக்கத்து வீட்டு ஐயாவைத் தெரிவு செய்தோம். அவர்தான் எங்கள் வீட்டு சிறு சிறு தோட்ட வேலைகள் செய்து தருவார்.  அதற்கேற்ற கூலியைக் கொடுப்போம். 

ஐந்து வருடங்களுக்கு முன்னர் எங்க வாப்பா அவர் மூலமாகத்தான் அந்தத் தென்னை மரத்தை அவ்விடத்தில் நட்டியிருந்தார். 

அந்த ஐயா குடிகாரர் என்பதால் வேலைக்கு அவராக வரும்வரை  காத்திருப்போம்.

ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் அந்த ஐயா குளவிக்கூடு உடைப்பதாக அன்றுதான் வந்திருந்தார்.  குளவிக்கூடெல்லாம் மாலையில்தான் கலைக்க வேண்டும் என்ற தோரணையில் ஆறு மணிக்கு பந்தத்துடன் ஆயத்தமாக வந்திருந்தார்.  

ஆனாலும் அவரிடம் சாராய நொடி வீசவே வேண்டாம் என்றோம்.

ஆனாலும் அவர் வலுக்கட்டாயமாக குளவிக் கூட்டை கலைக்கின்ற வேலையில் இறங்கினார்.

உயரமான தென்னை மரத்திலுள்ள குளவிக்கூடினை விரட்ட சிறு தடியினுள் தனது புது சேர்ட்டை சுற்றிக் கட்டியிருந்தார்.

"ஐயோ.........ஐயா.! இது உங்க புது சேர்ட் போல இருக்கு. கழற்றுங்கோ. உங்க மனுசி கண்டா எங்களைத்தான் ஏசுவா"

என்றவாறு பழைய துணி கொடுத்தோம். அதனைக் கழற்றி விட்டு நாங்கள் கொடுத்த தடியில் புதுத் துணியைச் சுற்றிக்கட்டி எரியூற்றினார்.

மெது மெதுவாக மரத்தை நோக்கி தீப்பந்தம் ஏற்றிய அவர் கைகள் உயர்ந்தபோது, 

குளவியும் கலையும் எனும் பீதியில் நாங்கள் மறைந்து கொண்டோம்.

சில நிமிடங்கள் சென்றன. ஆனால் குளவிகள் வெளியே பறப்பதாகக் தெரியவில்லை.

குளவிக்கூடு தொங்கிக் கொண்டிருக்கின்ற மரத்தை அண்ணார்ந்து பார்த்தேன்.

காற்றில் குளவிக்கூடு இன்னும் அசைந்து கொண்டுதான் இருந்தது. 

ஆனாலும் தென்னை மரத்தின் உச்சிப் பகுதியில் வேகமாக தீப்பந்தம் பரவிக் கொண்டிருந்தது.

"ஐயோ தென்னை மரம் எரியுதே ஐயா"     கத்தினேன்

சிரித்தார். 

"இல்ல ரீச்சர். அந்த நெருப்பில குளவி கலைஞ்சிடும்"

 என்றார் பொறுமையாக.

எனக்குள் ஆத்திரம் தலைக்கேறியது 

"தென்னை மரம் பற்றி எரியுது. உங்களுக்கு தெரியவில்லையா. முதலில் தண்ணீரை ஊற்றி அணையுங்கோ." 

எனது சப்தம் கேட்டு மச்சானும் அந்த இடத்திற்கு வரவே,

பெரிய போராட்டத்தின் பின்னர் நீர் ஊற்றி மரத்தின் தீயை அணைத்தோம். தீயில் தென்னை மரம் உஷ்ணமேறிய அந்த அரை மணித்தியாலம் எனக்குள் உயிர் பறிபோன உணர்வு.

இழப்புக்கள்தானே இருப்பின் அருமையை உணர்த்துகின்றன.

இன்னும் முதல் காயே அறுவடை செய்யப்படாத அந்த தென்னை மரம், தீப்பற்றி எரிகையில் நானே எரிவதைப் போன்ற உணர்வு. மனது முழுதும் வலி நிரம்பிக் காணப்பட்டது. தீக்காயங்களுடன் கீழே விழுந்த குறும்பைகளைக் கண்டதும் ஏதோ ஒரு வலி. வேதனையுடன் பொறுக்கிக் கொண்டேன்.

நல்லவேளை மரம் பெரியளவில் சேதப்படவில்லை. ஆனாலும் அதனின் தாக்கம் எதிர்காலத்தில்தான் வெளிப்படும்.

தீயுடன் தென்னை மரம் போராடிய அந்தக் கணங்கள் இன்னும் என்னுள் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

ஜன்ஸி கபூர் - 14.05.2021


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!