கிறீஸ் ரோஸ் என்பவர் எழுதிய திரு ஸ்மித்தின் புதிய மூக்கு எனும் ஆங்கில சிறுகதையின் தமிழாக்கம் என் பார்வையில்
இது பிரிட்டிஸ் கவுன்சில் பாட நூலில் உள்ள சிறுகதைதான் ஆனாலும் கதையின் போக்கு நம்மை சிந்திக்க வைக்கின்றது.
----------------------------------------------------------------------------------
22 ஆம் நூற்றாண்டு காலத்தில் மக்கள் தமது உடல்களை தாம் விரும்பியவாறு புதிய தொழில்நுட்பங்கள் மூலம், வடிவமைத்தால் எவ்வாறு அது அமையும் என்பதை இச்சிறுகதை சுவைபட முன்வைக்கின்றது.
இதோ...கதையின் நகர்வு. சுவையுங்கள். என்னுடன் சேர்ந்து கதை வரிகளை இரசியுங்கள்.
நாகரீக மோகத்தில் நமது சுயத்தை நாம் இழந்து படுகின்ற அவஸ்தையை இக்கதையின் ஒவ்வொரு வரிகளிலும் உணரலாம்
திரு ஸ்மித் எனும் நமது ஹீரோ தனது பெரிய மூக்கினை மாற்றி, அழகான மூக்கு ஒன்றினைக் கொள்வனவு செய்ய கடைக்குப் போகின்றார். கடை உதவியாளரின் இரசனையுடன் சேர்ந்து மிகவும் நாகரீகமானதும், தனக்குப் பொருத்தமானதுமான சிறிய மூக்கினைக் கொள்வனவு செய்கின்றார்.
தனது மனைவியிடம் அதனை தொலைபேசி வீடியோ கால் மூலமாகக் காட்டி "பிடிக்கின்றதா" என சம்மதமும் பெறுகின்றார்.
"நூறு ஆண்டுகளுக்கு முன்பு, உடலை மாற்றுவது சாத்தியமில்லை. பழைய கால 'பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை' இருந்தது. ஆனால் அது விலை உயர்ந்தது. வேதனையானது மற்றும் ஆபத்தானது. அச்சச்சோ! இப்போது எங்கள் 22 ஆம் நூற்றாண்டின் மரபணு பொறியியலுக்கு நன்றி. நாம் விரும்பும் போது நம் உடலை மாற்றலாம்!"
என கண்ணாடியில் இருந்த தனது புதிய சிறிய மூக்கைப் பார்த்து, எவ்வளவு நாகரீகமாக இருக்கிறார் என்று யோசித்தார்.
அவர் தனது புதிய மூக்கில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
ஆனால் இப்போது ஒரு பிரச்சனை ?
மூக்கிற்குப் பொருத்தமான தலைமுடி வேண்டுமே.!
இணையத்தில் அதனைத் தேடிக் கிடைக்காததால் நேரடியாக கொள்வனவு செய்வதற்காக குறித்த கடைக்குச் செல்கின்றார்.
அவரது பழைய சாம்பல் நிறமான முடியை நீக்கி, இளமையாகக் காட்சியளிக்க வைக்கின்ற, குறுகிய, செந்நிற, சுருண்ட முடிகளை விரும்பி கொள்வனவு செய்தபோது, கடை உதவியாளர்கள் புதிய காதுகளைப் பற்றிச் சொன்னார்.
ஆசை யாரைத் தான் விட்டது. தனது மூக்கு, தலைமுடிக்குப் பொருத்தமான காதுகளைத் தெரிவு செய்ய விரும்பினார். கடை உதவியாளரின் உதவியுடன் இரண்டு காதுகளையும் கொள்வனவு செய்து வெளியேறினார்.
பின்னர் அவரது ஆசைகளின் பட்டியல் நீண்டது. அவரது புதிய உடலில் ஆர்வம் வளரத் தொடங்கியது.
அவர் புதிய நாகரீகமான, பச்சை கண்கள், புதிய கைகள், புதிய முழங்கால்கள் மற்றும் புதிய கால்களை வாங்கினார்.
திரு ஸ்மித்தின் புதிய கால்கள் அவரது பழைய கால்களைப் போல மோசமாக இல்லை. என திருமதி ஸ்மித் மகிழ்ச்சி அடைந்தார்.
திரு ஸ்மித் புது வடிவம் பெற்று நாகரீக மனிதன் ஆனார். அது அவருக்குப் பெருமையாக இருந்தது.
ஆனால் மறுநாள் காலை விடிந்ததும் ஸ்மித்தின் மூக்கு இயங்கவில்லை. மனைவியிடம் அவர் இதுபற்றிக் கூறியபோது அவர்;
'ஒருவேளை உங்களுக்கு சளி வந்திருக்கலாம்' என்று பரிந்துரைத்தார்.
'அது சாத்தியமில்லை! இது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பாடிகோ மூக்கு! சளி வராது! ' என ஸ்மித் கூறினார்.
ஸ்மித்தால் எதனையும் மணக்க முடியவில்லை. எனவே அதே கடையில் இயங்கக்கூடிய இன்னுமொரு மூக்கினை கொள்வனவு செய்ய மீண்டும் அதே கடைக்குச் சென்றார்.
ஆனால் கடை உதவியாளர், நாகரீகமான சிறிய மூக்குகளை ஏற்கனவே வாங்கி விட்டீர்களே எனக் கூறினான்.
'எனக்கு ஒரு புதிய மூக்கு வேண்டும். ஏனெனில் இது வேலை செய்யாது!'
'அது சாத்தியமற்றது' என்று கடை உதவியாளர் கூறினார்.
'உங்களிடம் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பாடிகோ மூக்கு உள்ளது. அது தவறாக போக முடியாது! '
'ஆனால் அது தவறாகிவிட்டது' என்று திரு ஸ்மித் பதிலளித்தார்.
' என்னால் எதையும் மணக்க முடியாது.' என்றார்.
'மிஸ்டர் ஸ்மித் என்ன செய்ய உங்கள் மூக்கைப் பயன்படுத்தினீர்கள்?'
கடை உதவியாளர் கேட்டபோது சுவாசிக்கவும், வாசனைக்கும் பயன்படுத்தியதாகக் கூறினார்.
'மிஸ்டர் ஸ்மித், நீங்கள் உங்கள் மூக்கை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால், அது சரியாக இயங்காது.' எனக் கடைக்காரர் கூறியபோது,
'அது அபத்தமானது!' என திரு. ஸ்மித் கத்தினார்.
'எனக்கு என் பணம் திரும்ப வேண்டும்! எனக்கு பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்! ' என்றார்.
ஆனால் கடைக்காரரோ ...............................
'திரு ஸ்மித், நாங்கள் பணத்தைத் திரும்ப வழங்க மாட்டோம் என்றார்.
திரு ஸ்மித் மிகவும் கோபமடைந்தார். அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் கடையிலிருந்து வெளியேறினார். எதுவும் பேசவில்லை.
ஆனால் இப்போது அவருக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டது.
பயனற்ற மூக்கு.
நாகரீகம் என நினைத்தது பயனற்றுப் போனது.
துரதிர்ஷ்டவசமாக, அவரது பிரச்சினைகள் வளர ஆரம்பித்தன. மறுநாள் காலையில் அவர் எழுந்தபோது அவருக்கு எதுவும் கேட்க முடியவில்லை. பின்னர் அவரது புதிய இளஞ்சிவப்பு முடி நரைத்தது. புதிய முழங்கால்கள் நகரவில்லை. அவரது அசாதாரண பச்சைக் கண்களால் ஒரு விஷயத்தைப் பார்க்க முடியவில்லை. விரல்கள் ஒவ்வொன்றாக விழுந்தன. நடக்கவும் முடியவில்லை.
இறுதியில் திருமதி ஸ்மித் அவரை அவர்களின் ஏர்காரில் வைத்து அவற்றைக் கொள்வனவு செய்த கடைக்குப் போனார்.
'குட் மார்னிங், மிஸ்டர் ஸ்மித்" கடை உதவியாளர் கூறினார்.
'இன்று நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும்?
என்றபோது அவரது மனைவியோ "இன்று அவர் எதையும் புதிதாக விரும்ப மாட்டார். ஆனாலும் அவர் தனது பழைய உடலை மீளப் பெற விரும்புகின்றார்" எனப் பதிலளித்தார்.
'திருமதி ஸ்மித், நாங்கள் பணத்தை திரும்ப வழங்க மாட்டோம்" எனக் கடைக்காரர் கூற,
'நான் பணத்தைத் திரும்பப் பெற விரும்பவில்லை'
என்று திருமதி ஸ்மித் விளக்கினார்.
'என் கணவரின் அசல் உடலை மீண்டும் விரும்புகிறேன்! இந்த புதியதை விட எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது! ' என்றபோது,
கடை உதவியாளரோ,
'நாங்கள் சுற்றுச்சூழல் நட்பு நிறுவனம். எங்கள் பழைய உடல்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. ' என்றார்
ஆனால் திருமதி ஸ்மித்தோ தனது கணவருக்காக கடை உதவியாளரிடம் மீண்டும் வாதாடினார்
'ஆனால் நீங்கள் விற்ற புதிய உடல் பாகங்கள் வேலை செய்யாது! அவர் இப்போது என்ன செய்ய முடியும்? ' என்றபோது,
கடை உரிமையாளரோ,
'அவர் மறுசீரமைக்கப்பட்ட உடலை வாங்க முடியும்.' என்றார்.
''மறுசீரமைக்கப்பட்ட' உடல் என்றால் என்ன?' என அவர் மனைவி மீளக் கேட்டபோது,
கடை உதவியாளர் கணனி உதவியுடன் மறுசீரமைக்கப்பட்ட ஸ்மித்தின் உடலைக் காட்டினார்.
"அது மிகவும் பழக்கமான உடல். பெரிய மூக்கு மற்றும் நரை முடி"
திருமதி ஸ்மித் "அது என் கணவர்!" எனக் கத்தினார். '
அதுதான் அசல் மிஸ்டர் ஸ்மித்!' கடை உரிமையாளரும் அதனை அங்கீகரித்தார்.
'தயவுசெய்து அவர் தனது பழைய உடலை மீண்டும் வைத்திருக்க முடியுமா?' என திருமதி ஸ்மித் கேட்க அது 100,000 யூரோ எனப் பதிலளித்தார்.
ஆனால் திருமதி ஸ்மித் விலை அதிகமாக இருக்கின்றது என முணுமுணுத்தாலும் மீண்டும், அதனை வாங்கினார்.
திரு ஸ்மித் தனது சொந்த உடலைத் திரும்பப் பெற்றார்.
திருமதி ஸ்மித் அவரை விமானக் காரில் வீட்டிற்கு பறக்கவிட்டார்.
'நான் மீண்டும் நானே!' ஸ்மித் கத்த,
திருமதி ஸ்மிதோ 'நீங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளீர்கள்.' என்றாள். ஏனெனில் உங்களிடம் தற்போது பயனுள்ள புதிய மூளை வந்துள்ளது என்றாள்.
ஸ்மித்தும் புன்னகையுடன் 'நானும் அப்படித்தான் நினைக்கிறேன், அன்பே,' என்றார்
கிறிஸ் ரோஸ் எழுதிய இக்கதையை வாசித்தபோது, இதென்ன மூக்கு பற்றிய வித்தியாசமான தலைப்பாக இருக்கின்றதே என யோசித்தேன். ஆனாலும் கதையை முழுமையாக உள்வாங்கிய பின்னர், அதில் இழைக்கப்பட்டிருக்கின்ற படிப்பினை பெரிதாக இருக்கின்றது.
அலங்காரமின்றி எளிமையாக நகரும் இக்கதை எனக்குப் பிடித்திருக்கின்றது. உங்களுக்கு. ...............?
ஜன்ஸி கபூர் -14.05.2021
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!