அந்த நீளமான வீதி வாகன இரைச்சலை விழுங்கிக் கொண்டிருந்தது. வெயிலை உறிஞ்சி வியர்த்துக் கொண்டிருந்த மரங்களை மெதுவாக தன் சிறகுகளால் வருடிக் கொண்டிருந்தது காற்று. இயற்கையின் மானசீக ஸ்பரிசங்களை நான் உள்வாங்கிக் கொண்டவளாக இல்லை.
என் எதிர்பார்ப்பில், "இன்று எப்படியாவது மின்சாரக் கட்டணத்தை செலுத்த வேண்டும்" எனும் எண்ணமே நிறைந்திருந்தது.
உரிய இடத்தினை கண்டுபிடித்து பணத்தை செலுத்துவதற்காக கவுண்டரை நோக்கி நகர்கின்றேன்.
கையிலோ காற்றையும் உரசிக் கொண்டிருந்தன பண நோட்டுகள்......
'அக்கா'
பின்னால் வந்த இளைஞனின் குரல் எனது வேகத்தை சற்று மந்தப்படுத்தியது.
நான் அவனைப் பார்க்கையில் அவனது கைகள் சைகை பாஷையில் எனக்கு எதனையோ உணர்த்திக் கொண்டிருந்தன.
அவன் சுட்டிய திசையில் எனது பார்வையும் மொய்த்தது.
மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்காக கைகளிலிருந்த ஆயிரம் ரூபா நோட்டுக்கள் அங்கே விழுந்து கிடந்தன.
எனது நன்றியெனும் வார்த்தைகளை கூட எதிர்பார்க்காதவாறு அந்த இளைஞன் தனது வழியில் நகர்ந்து கொண்டிருந்தான்.
வறுமைக்குள்ளும் ஒளிந்திருந்த அந்த மனிதாபிமானத்தின் உயர் பெறுமானத்திற்கு பெறுமதிதான் ஏது?
ஜன்ஸி கபூர் - 06.04.2021
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!