கீச் கீச்.......
நிசப்தத்தை கலைத்தவாறே அணிலொன்று வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. அது தன் வாயில் தும்புகளைக் கௌவியவாறு தான் அமைத்து வைத்திருக்கின்ற கூட்டினை நோக்கி ஓடியது.
மறுபுறமோ வெளிப்புற தென்னை மரத்தின் ஓலைக் குச்சிகளை தன் வாயால் இழுத்துக் கிழித்துக் கொண்டிருந்தது காகமொன்று....
அக்காட்சியைக் கண்ணுற்ற சின்னவள் சஹ்ரிஸ் அவசரமாக என்னை அழைத்து அதனைக் காட்டினாள். அவளின் விழிகளில் பிரமிப்பு பூத்திருந்தது. இன்றுதான் அதனைப் பார்த்திருக்கிறாள் போலும். காகம் கூடு கட்டும் கதையையும் குயில் அதனுள் முட்டையிடும் இரகஸியத்தையும் நான் கூறி முடித்ததும், அவளது குழந்தை அறிவுக்கு அவ்விடயங்கள் பிரமாண்ட அடையாளங்கள்தான் போலும்...அதிசயித்தாள்.
சுவரில் ஓடிக்கொண்டிருந்த குட்டி எலியொன்றைத் துரத்திப் பிடித்த பூனையொன்று அதனை தன் வாயில் கௌவியவாறே வீட்டுச் சுவரில் நடந்தது. அதன் பிடியிலிருந்து எலியை விடுவிக்க நான் முயன்றும் தோற்றுப் போனேன். அதன் பின்னால் அதன் குட்டிகளும் ஓடின.
சிறிது தூரம் சென்றதும் பூனை நின்றது. அதன் வாயில் கௌவியவாறு இருந்த எலிக்குட்டியும் கீழே விழ குட்டிப் பூனைகள் பாய்ந்து அதனை தமது வாயில் கௌவிக் கொண்டு ஓடின. தாய்ப் பூனையோ தான் பிடித்த எலியைத் தன் குட்டிகளுக்கு கொடுத்த திருப்தியில் தரையில் கால்களை நீட்டி மெதுவாக உறங்க ஆரம்பித்தது.
ஐந்தறிவு ஜீவன்களின் பாச உணர்வுகளின் விம்பங்கள் என் பார்வையில்பட்டுத் தெறித்தபோது அந்த அன்பின் ஆழப் பெறுமானம் கண்முன்னால் மலையளவு உயர ஆரம்பித்தது. தாய்மையின் அன்புக்கு ஐந்தறிவும் விதிவிலக்கல்ல...........
ஜன்ஸி கபூர் - 8.4.2021
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!