About Me

2021/06/02

யாழ்ப்பாண நூலகம்

 



அறிவினைத் தேடுகின்ற சமூகமே கலாசார பண்பாட்டு ரீதியிலான சிறந்த விழுமியக் கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. அறிவின் தளம் புத்தகங்கள். புத்தகங்கள் அணைந்திருக்கின்ற களம் நூலகம். சிந்தனை விருத்திக்குரிய பல தரப்பட்டுள்ள நூல்களை தன்னகத்தே தேக்கி வைத்திருக்கின்ற நூலகங்களை பாதுகாப்பது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கொப்பானது. ஏனெனில் மனிதர்களின் சிந்தனையை வளர்த்தெடுக்கின்ற கூடமாக அதுவே உள்ளது. 


தெற்காசியாவின் சிறந்த நூலகமாகவும் பண்பாடு, கலாசாரம், கல்வி என்பவற்றை பறைசாட்டி நிமிர்ந்து நின்ற அறிவின் அடையாளமுமான  யாழ்ப்பாண நூலகத்தின்பால் எனது பார்வையினைச்   செலுத்துகின்றேன். 

ஒவ்வொரு தனி மனித  முயற்சி, சிந்தனைகள் பிற்காலத்தில் உலகம் பேசுகின்ற அடையாளங்களாகின்றன என்பதை மெய்ப்பிப்பதைப் போல் யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த கனகசபை .முதலித்தம்பி செல்லப்பா எனும் ஆர்வலரே நமது யாழ்ப்பாண நூல் நிலைய தோற்றத்திற்கு வித்திட்டார். 1933.11.11 ஆம் ஆண்டில் தனது வீட்டில் காணப்பட்ட சில நூல்களைக் கொண்டு நூல்நிலையமொன்றை  நிறுவினார்.


 பின்னர் அச்சிந்தனை வலுப்பெற்றதால், 1934.06.09 ஆம் திகதி யாழ்ப்பாண மத்திய கல்லூரி மண்டபத்தில் ஐசக் தம்பையா அவர்களின் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் பொது நூலகமொன்று அமைக்க வேண்டிய தேவை உணரப்பட்டு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

க.மு. செல்லப்பா அவர்களால் திரட்டப்பட்ட 184 ரூபா 22 சதம் மூலதனமாக முன்வைக்கப்பட்டது. பல மக்களின் ஒத்துழைப்பினால் 1934.08.01 ஆம் திகதி யாழ்ப்பாண ஆஸ்பத்திரி வீதி வாடகை அறையொன்றில் சிறிய நூலகம் அமைக்கப்பட்டது. வாசகர்களுக்காக 844 நூல்களும்,  34 பருவ இதழ்களும் பயன்பாட்டிலிருந்தன.

1936 ஆம் ஆண்டின் பின்னர் நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கருகே புதிதாக கட்டப்பட்ட நகர மண்டபத்திற்கு அண்மையில் அது இடமாற்றம் செய்யப்பட்டது.

யாழ் நூலகத்தை நவீனப்படுத்தும் தீர்மானத்திற்கேற்ப பலரது   ஒத்துழைப்பினால், 1953 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. சென்னை அரசின் கட்டிடக்கலை நிபுணர் கே.நரசிம்மன் அவர்களின் வரைபட
 


வடிவமைப்பிற்கேற்ப திராவிட கட்டிடக்கலைப் பாணியைத் தழுவிய இரண்டு தளங்களைக் கொண்ட அழகிய கட்டிடமாக 1959 ஆம் ஆண்டில் நூலகத்தின் பெரும் பகுதிகள் உருப்பெற்றன. எனினும் கட்டிட வேலைகள் முற்றாக முடிய முன்னர், அன்றைய யாழ்ப்பாண மேஜர் அல்பிரட் துரையப்பா அவர்களினால்

 1959.10.11 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. நூலகர் உட்பட 33 பேர் அதில் கடமையாற்றினார்கள். 

 பின்னாளில் எனக்கு நன்கு நினைவிருக்கின்றது. நானும் அதில் அங்கத்தவராக இருந்திருக்கின்றேன். எனது அங்கத்துவ இல 1967. அன்றைய காலகட்டத்தில் நூலக கட்டிடத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றியிருக்கின்றேன். அம்புலிமாமா, நட்சத்திரமாமா கதைப்புத்தகங்கள் உள்ளிட்ட பல நூல்கள் என் கண்களுக்கு விருந்தாகின.

மன உணர்வுகளுள் முரண்பாடுகள் எழுகையில் அங்கு பலவிதமான மோதல்களும்,  சமூக குரோதங்களும் முளைவிடுகின்றன. 1981 ஆம் ஆண்டில் மோதி வெடித்த தமிழ் விரோத இனக் கலவரங்களின் வெடிப்பின் பிம்பமாக யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அறிவுக் கோபுரம் இரவோடு இரவாக தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. 


அந்நாள் 1981.05.31 ஆம் திகதி யாழ்ப்பாண வரலாற்றுச் சுவடுகளில் கறைபடிந்த நாள். 


அக்கினிச் சங்கமத்தில் 1800 ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட விலைமதிக்க முடியாத 97000 நூல்கள் சாம்பராகின. 

இலக்கியம், மொழி, சமயம், தத்துவம் உள்ளிட்ட 6000 பண்டைய யாழ்ப்பாணம் முத்துத்தம்பியின் அபிதான கோசம் மற்றும் அபிதான சிந்தாமணி, சித்த வைத்திய ஓலைச்சுவடிகள் போன்ற  பல அரிதான பொக்கிசங்களை தீ நாக்குகள் விழுங்கின.


அச்சாம்பர் முகடுக்குள் மனித உணர்வுகளின் ஓலங்கள் புதைக்கப்பட்டன. கல்வியை நேசித்தவர்களின் கதறல் ஒலியானது, யாழ்நகரைச் சூழ்ந்த அந்தக் கரும்புகைக்குள் கரைந்துதான் போயின.  அறிவுக்கண்களில் இரத்தக் கண்ணீர் வழிந்தோடின. ஓர் இனவழிப்பின் உச்சக் கட்ட அகோரத்தின் அரங்கேற்றம் மறக்கப்படாத நிகழ்வாக மனதினுள் உறைந்துதான் கிடக்கின்றது.

உருச்சிதைந்து கிடந்த யாழ்ப்பாண நூலகத்தை மீள புனரமைக்கும் சிந்தனைகள் 1984 ஆம் ஆண்டின் பின்னர் தோற்றம் பெறலாயிற்று. 


எனினும் 1997 ஆம் ஆண்டில் அரசியல் பிரமுகர் மங்கள சமரவீர அவர்களின் வெள்ளைத் தாமரை அமைப்பின் Book & Brick  வேலைத்திட்டத்தின்கீழ்  லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களின் ஒத்துழைப்புடன், முன்னர் கட்டிடம் இருந்த அதே இடத்தில் மீளக் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. 2001 இல் மீள மறுசீரமைக்கப்பட்டு தற்போதை தோற்றத்துடன் விளங்குகின்றது. 


தீயில் எரிந்த புத்தகங்களை இங்கு சேகரிக்க முடியாமல் போனாலும் புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது.நவீன தொழில்நுட்ப அறிவினைப் பயன்படுத்தி புத்தக விபரங்கள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய டிஜிட்டல் உலகில் புத்தகங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவது ஒரு ஆறுதல். 

 வாசிப்புப் பகுதி, இரவல் கொடுக்கும் பகுதி போன்ற பல பகுதிகள் தனித்துவம் பெற்றுள்ளன. நூலகத்தின் உட்கட்டமைப்பில் புத்தக விபரங்கள் நேர்த்தியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  


.இழப்பின் வலி அனுபவித்தவர்களுக்கே புரியும் என்பார்கள். சாம்பருக்குள் மூழ்கிய அரிய புத்தக பொக்கிசங்கள் மீளக் கிடைக்குமோ? அன்று நெருப்பில் வெந்த 97000 ஏடுகளும் இன்றிருந்தால் ஒரு பிரதேசத்தின் அறிவின் எழுச்சி சூரியோதயமாக மின்னிக் கொண்டிருக்கும். காகிதங்களுடாக எரியூட்டப்பட்ட சமூகங்களின் உணர்வின் திரட்சி, முழு உலகின் பார்வைக்குள் வீழ்ந்திருக்கும். 

நல்ல நூல்களுடனான நமது நேசிப்பை வளர்ப்பதுடன், நூலகங்களையும் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் தார்மீக பொறுப்பென்றால் மிகையில்லை.

ஜன்ஸி கபூர் - 02.06.2021 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!