About Me

Showing posts with label தீன் வழி. Show all posts
Showing posts with label தீன் வழி. Show all posts

2012/08/03

இறைவனிடம் கையேந்துவோம்


புகழ் அனைத்தும் அவன் ஒருவனுக்கே!

மனித இனத்தை அற்புதமாகப் படைத்து அருள் பரிபாலிப்பவன் இறைவன் ஒருவனே. எமக்குரிய அழகிய வாழ்க்கையை , வாழ்வின் ஒழுக்க நெறிகளை அழகாக கற்றுத் தந்தவனும், கற்றுத் தருபவனும் அவனே!

நம்மைப் படைத்து நமது செயல்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் அவனே, நம் எண்ணங்களை அளந்தும், அடையாளமிட்டும் அதற்கேற்ற கூலியைத் தருபவனாக இருக்கின்றான்.

இம்மை, மறுமையின் விளைநிலம். எனவே நாம் செய்கின்ற செயல்கள் இவ்வுலகத்துடன் முற்றுப் பெறாமல், மறுமைக்கான நிகழ்வுகளின் அடித்தளமாகவும் இருக்கின்றது. மறுமை நமது நிம்மதி கூடமாக இருக்க வேண்டுமானால் இம்மையில் நாம் செய்யும் நமது செயல்கள் யாவும் இறைவனின் அருளைப் பெற்றுத் தருபவையாக இருக்க வேண்டும். அந்த வகையில் இறைவனுடன் நாம் நேரடியாகப் பேசவும், அருளையும், இறை மன்னிப்பையும் பெற்றுத் தரக்கூடியதுமான  மாதமாக ரமழான் மாதமிருக்கின்றது.

இம் மாதத்தில் ஒருவர் நோன்பிருப்பது இறைவனுக்காகவே. அந்த நோன்பினூடாகவே இறைவன் தன் அடியார்களுடன் நெருக்கமாகின்றான் .நமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக இறைவன் நோன்பை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளான்.

அல்லாஹ் முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக நபி (ஸல்) அவர்கள் அடையாளம் காட்டியுள்ளார்கள்.

"ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையாகவும், நடுப்பத்து நாட்கள்  மக்ஃ  பிரத் எனும் பாவ மன்னிப்புக்குரியதாகவும், கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை அளிக்கக்க;டியதாகவும் உள்ளது "

என நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக  நூல் இப்னு குஜைமா வை ஆதாரப்படுத்தி ஸஹ்ல் ரளியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நாம் நமது வாழ்வில் பல நல்ல செயல்களைச் செய்யவே முயற்சிக்கின்றோம். ஊக்கப்படுத்தப்படுகின்றோம்.  எனினும் நமது தேவைகளை நிறைவேற்ற நாம் முற்படும் போது நம்மையுமறியாமல் பலஹீன நுழைவாயினுள் தள்ளப்படுகின்றோம். சுயநலம் என்பதும் ஓர் பலஹீனமான உணர்வே. ஏனெனில் சுயநலத்தின் பொருட்டு நமது உளம் உறுதியற்று தளம்பலடைந்து பிறருடன் முரண்படக்கூடிய, பாவம் தரக்கூடிய செயல்களிலும் ஈடுபட்டு விடுகின்றது. நாம் ஒருபுறம் இறையருளை நாடி நற்செயல்களிலீடுபட்டுக் கொண்டிருக்க மறுபுறம் நம்மையமறியாமல் சில பாவங்களையும் தொட்டு விடுகின்றோம். பொய் பேசுதல், புறங் கூறுதல், விரோதம் கொள்ளுதல், பொறாமைப்படல், களவெடுத்தல் போன்ற உணர்வுகள் கூட பாவத்திற்கான சமிக்ஞ ஆகும்.

எனவே எம்மை நாம் உணர்ந்து, எமது செயல்களை அடையாளப்படுத்தி அவற்றில் அதிகமதிகமான நன்மைகளைச் சேர்க்கவும்,  அறியாமற் செய்த தவறுகளை மானசீகமான உணர்ந்து, இறையோனிடத்தில் மன்றாடி பாவ மன்னிப்புக் கோரவும்  நமது சிந்தனையை வழிப்படுத்த வேண்டும். எனவே இந்த மாதம் அல்லாஹ்வுடன் நம்மை அதிகம் நெருங்க வைப்பதால் நமது சிந்தனையை அவன் பால் பொருத்தி அதிக சிரத்தையுடன் நம்மை வழிப்படுத்த முயலவேண்டும்.

றமழான் மாதத்தில் அதிகமாக "லாஇலாஹா இல்லல்லாஹ் "என்ற திருக்கலீமா ஓதுவதும், குர் ஆனுடன் அதிக தொடர்பு கொள்வதும், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்பதும், அல்லாஹ்விடம் சொர்க்கம் தரும்படி கேட்பதும், நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவதும் நாம் இம் மாதத்தில் செய்ய வேண்டிய முக்கிய விடயங்களாக உள்ளது. இவை அல்லாஹ்வுடனான நெருக்கத்தை மேலும் பலப்படுத்தும். இந்த மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக நாம் செய்கின்ற எந்த நன்மைகளும் பர்ளுக்கான அந்தஸ்தைப் பெற்று விடுகின்றது என்பது அண்ணல் நபிகளாரின் வாக்காகும்.

எனவே முதல் பத்து நோன்பிருந்து அல்லாஹ்வின் அருளையும், கருணையையும் பெற்றுக் கொண்ட நாம், தற்போது அடுத்த பத்திற்குள் உள்ளடங்கும் நோன்பிலிருக்கின்றோம். இரண்டாவது பத்து நோன்பு நமக்கு பாவமன்னிப்பு பெற்றுத் தருகின்ற நாட்களாகும். எனவே இந் நாட்களில் நாம் இறைஞ்சுகின்ற பாவமன்னிப்புக்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக எம் பெருமானார் (ஸல் ) அவர்கள் கூறுகின்றார்கள்.

"நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி, இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் பாவமன்னிப்பு கேட்டால் அவரை நான் மன்னிக்கின்றேன்"

எனக் கூறுகின்றார்கள். (ஆதாரம் - நூல் புகாரி )

இந்த மாதத்தில் அல்லாஹ்விடம் நாம் உதவிகோரி கையேந்தும் போது அவன் தன் அருளினாலும், நோன்பின் பரகத்தினாலும் நம் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான். ஷிர்க்கைத் தவிர நாம் செய்த தவறுகளையும் மன்னித்து தனது கருணையால் நமக்குள் ஈடேற்றம் தருகின்றான்.

இறைவன் கூறியதை நபிகள் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:-

"ரமளானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து (தொழுது) வணங்குகிறவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்"

(நூல் - புகாரி)

ஒரு நோன்பாளி, இறைவன் தன்னை எந்நேரமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றான் எனும் சிந்தனை மேலீட்டால் , கடந்த காலத்தில் தான் செய்த பாவங்களை நினைத்துப் பார்ப்பான். அப்பொழுது அப்பாவ நினைவுகள் அவன் மனதை வருத்தும். அப் பாவங்களை மீண்டும் செய்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டுமன்ற எண்ண மேலீட்டால், மீண்டும் அப்பாவங்களின் பால் தான் செல்லக்கூடாதென உறுதியெடுத்தவனாக, மனமுறுகி முறையாக பாவ மன்னிப்புக் கேட்கும் போது, அவனது நோன்பின் பரகத்தால் அல்லாஹ்வும் பாவ மன்னிப்பைத் தருபவனாக இருக்கின்றான். ஒவ்வொரு தொழுகையின் பின்பும் , தஹஜ்ஜத் தொழுகையின் பின்னும் பாவ மன்னிப்பு நாம் கோர வேண்டும்.

நம்மை இறைவன் எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். அதனால் நமது நல்ல செயல்களுக்கு நன்மையும், தீய செயலுக்கு தீமையும் நிச்சயம் வழங்குபவனாகவும் இருக்கின்றான் எனும் எண்ணத்தை உள் வாங்கி
நோன்பிருப்போமானால், அந் நோன்பு நிச்சயம் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ரஹ்மத் எனும் கருணையை நமக்குப் பெற்றுத் தரும். அது மாத்திரமின்றி இறை மன்னிப்பால் நரக நெருப்பில் வீழாமல், ஈடேற்றம் பெற்று சுவர்க்கத்தில் நுழையும் பாக்கியவாதிகளாக மாறுவோம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்-

"சொர்க்கத்தில் "ரய்யான்" என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். (அவர்களைத் தவிர) வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும்
அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும்"

(அறிவிப்பவர் :- ஸஹ்ல் ரளியல்லாஹூ அன்ஹூ , நூல் - புஹாரி )

நமது குற்றங் குறைகளின் கறை போக்கிடவே, அல்லாஹ் த ஆலா விடம் பாவமன்னிப்பைப் பெற்று ஈடேற்றம் காண எமது நோன்பும், துஆ ப் பிரார்த்தனைகளும் வழி தரட்டும்........மனதில் ஈமானிய பசுமைகள் பூக்கட்டும்!

வஸ்ஸலாம்



2012/08/02

ரமழான் சிந்தனைகள்





******
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகிறான். தன் இறைவனைச் சந்திக்கும் போது அவன் மகிழ்ச்சி அடைகிறான்"

(அபூஹூரைரா ரளியல்லாஹூ அன்ஹூ, புகாரி)

******
உண்ணுங்கள் , பருகுங்கள் , விரயம் செய்யாதீர் " (7:31)
******
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்

"மனிதனின் ஒவ்வொரு அமலுக்கும் கூலி இரட்டிப்பாக வழங்கப்படுகிறது. ஒரு நன்மைக்கு பத்து நன்மைகள் முதல் எழுநூறு மடங்கு வரை. இறைவன் சொல்கிறான் நோன்பைத் தவிர, ஏனெனில் நிச்சயமாக எனக்குரியது. நானே அதற்கு கூலி வழங்குகிறேன். காரணம் அடியான் தனது ஆசையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகிறான் "  (முஸ்லிம்)

******
நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன"
- நபி மொழி_
(அபூஹூரைரா ரளியல்லாஹூ அன்ஹூ, திர்மிதி - 619 )

******
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்

"அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது "
( அறிவிப்பவர் - அபூஹூரைரா ரளியல்லாஹூ அன்ஹூ, நூற்கள் : அஹ்மது , நஸயீ, பைஹக்கீ )

******

ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன"
- நபிமொழி-

( அறிவிப்பவர் - அபூஹூரைரா ரளியல்லாஹூ அன்ஹூ ,
நூல் :முஸ்லிம் 1957)

******
"வைகறை எனும் வெள்ளைக் கயிறு (இரவு எனும்)
 கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்.

(திருக்குர்ஆன் 2:187)

******
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் ( நன்மை தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகிறாரோ, அவர் அம் மாதம் நோன்பு நோற்க வேண்டும் .

(அல்குர் ஆன் 2 :185)



வறியவர்க்குதவுவோம்


புனித ரமழான் நமக்கு கற்றுத் தரும் பயிற்சிகள் மகத்தானவை. ஏனெனில் நோன்பானது நம் உடல், உள, ஆன்மீகத்துடன்  தொடர்புபட்ட புனித கடமையாகும்.

புனித நோன்பானது பசியின் கோரத்தை, வறுமையை, ஒட்டியுலர்ந்த வயிற்றின் அலறலை, நமக்குள் மானசீகமாக உணர்த்தி, ஏழ்மையின் இடரை செல்வந்தன் உணரச் செய்யக்கூடிய சிறந்த வழியாக உள்ளது. இது ஓர் சமத்துவத்திற்கான பாதையாகும். ஏனெனில் ஏழை , பணக்காரன் இரு சாரரும் ஒரே திசையில் பயணித்து அல்லாஹ்வுக்கு நோன்பெனும் வரியைச் செலுத்த வேண்டும்.

ஏழ்மையுடையவர்களை நினைந்து, உள்ளம் உருகி, கண்ணீர் சிந்தக்கூடிய சந்தர்ப்பத்தை நோன்பு தருகின்றது. இவர்களின் துயருணர்ந்து அவற்றை ஓரளவாவது களைய முயற்சிப்பது கூட சன்மார்க்க நெறியாகும். புனித ரமழானில் நாம் நோற்கும் நோன்பு மூலம் ஏழைகள், அனாதைகள், அகதிகள் மீது எம் கருணை வளர்க்கப்படல் வேண்டும். அக் கருணையின் உந்தலால் நாம் அவர்களுக்கு ஈகையை வழங்க வேண்டும்

" தர்மத்தில் சிறந்தது ரமழானில் வழங்கப்படும் தர்மமாகும்"

என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் நோன்பு காலங்களில் அதிக தான தர்மங்களை மேற் கொண்டார்கள்.

வறுமையானது கொடியது. வாழ்க்கைக்கே சவால் விடக்கூடியது. இதனால் சிந்தனை, பகுத்தறிவு என்பன மந்தநிலையை அடையும். ஈமானைக் கூட பறித்துவிடக்கூடிய கொடிய மிருகம். ஏனெனில் வறுமைப்படும் போது மனிதன் அறநெறிகளிலிருந்து தவறி தன் நற்பண்புகளைத் துறக்கும் மிருகநிலைக்குச் சமனாகின்றான். இதனால் பண்பற்ற செயல்களும், துர்நடத்தைகளும், முறைகேடுகளும் நடந்து வாழ்வின் பெறுமதியை இழிவுபடுத்தலாம்.பல வறுமைப்பட்ட குடும்பங்களின் கட்டமைப்புக்களும், நடத்தைச் சிறப்புக்களும் சீரழிந்துள்ளன.  எனவே இதன் பயங்கர நிலைக்குள் முஸ்லிம்கள் வீழாமல் நிலைத்திருக்க ரமழான் உதவுகின்றது.இந்த ஆபத்துக்களை நீக்க நாமும் முயல்வதன் மூலம் நல்ல ஆரோக்கியமான சமூகத்தின் இருக்கைக்கான அத்திவாரங்களையும் இடலாம்..

அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள்,

" வறுமையானது குப்ரையும் ஏற்படுத்தி விடக்கூடியது."

குப்ரிலிருந்து பாதுகாப்புத் தேடிய நபியவர்கள், அதனுடன் இணைத்து 'பக்ர்' என்ற வறுமையிலிருந்தும் பாதுகாப்பு தேடியமை அவையிரண்டுக்குமிடையிலான தொடர்பை நம் முன்வைக்கின்றது.

இஸ்லாம் அநாதைகள் மீது அதிக கரிசனை காட்டுகின்றது.ஏழைகளை ஆதரித்து வறுமையை ஒழித்துக் கட்டாதவன் தீனை உண்மைப்படுத்துவனல்லன் என்பதை திருமறையும், ஹதீஸ்களும் நவின்றுள்ளன.

தீனைப் பொய்ப்பிப்பவன் பற்றிக் கூறும் ஸூறா அல்மாஊன் பின்வருமாறு கூறுகின்றது-

"அவன்தான் அநாதைகளைக் கடிந்து விரட்டுபவன்"

" அவன் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டவும் மாட்டான் "

உண்மையில் ஏழைக்கு தானும் உணவளித்து, பிறரையும் தூண்டி வறுமையை அழிக்கும் செயலில் ஈடுபடாதவர் இஸ்லாம் மார்க்கத்தை பொய்ப்பிப்பவராகவே கருதப்படுகின்றார். இதனை அல்-குர்ஆனும் பின்வருமாறு எடுத்துக்காட்டுகின்றது.

"நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை விசுவாசிக்கவில்லை. ஏழைகளுக்கு ஆகாரமளிக்கவும்படி தூண்டவுமில்லை. ஆகவே இன்று அவனுக்கு இங்கு எந்த நண்பனும் இல்லை. புண்களில் வடியும் சீழைத் தவிர அவனுக்கு வேறு ஆகாரமும் இல்லை எனக் கூறப்படும் . அதனைக் குற்றவாளிகளைத் தவிர வேறு எவரும் புசிக்க மாட்டார்கள்"

தன் மீதுள்ள கடமை, பொறுப்புக்களை மாத்திரமே நிறைவேற்றி , சமூகக் கடமைகளை உதாசீனம் செய்வோரை இஸ்லாம் ஆதரிப்பதில்லை.

எமது உள்ளங்களுக்கு பக்குவத்தையும், பண்பாட்டையும் வழங்கி, சகோதரத்துவத்தைத் தூண்டக்கூடிய செயல்களில் நாம் ஈடுபடும் போதே எமது இபாதத்துக்கள் நன்மை பயப்பனவாகையாக இருக்கின்றன..

ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் ஓரங்கம். அச் சமுகம் உயிர்ப்போடு இருக்கும் போதே அவனாலும் நிம்மதியாக, மகிழ்வுடன் அச் சமுகத்தில் தன்னைப் பொறுத்தி பயனடைய முடியும்.

முஸ்லிமின் இவ்வுலக கஷ்டங்களிலிருந்து அவனை நீக்கி, அவனுக்கு உதவி செய்து நிறைவான வாழ்வுக்குள் அவனை அழைத்துச் செல்லும் கடமைப்பாடு எம்மெல்லோரின் கடமையாகும்.

எனவே ஈகையினதும், கருணையினதும் மாதமாகிய இப் புனித ரமழானில் சமூகத்தில் வாழ வழியற்றுத் தவித்துக் கொண்டிருக்கும் வறியவர்கள், அனாதைகள், எளியவர்கள் மீது மனிதாபிமானத்துடன் உதவிக்கரம் நீட்டி இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளை, உதவியைப் பெற்றுக் கொள்வோமாக!


2012/07/25

ரமழான் சிந்தனை



இது ரமழான் மாதம்....முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் புனித மாதம்...நோன்பின் 27 ம் நாளான லைலதுல் கத்ர் இரவினிலேயே தான் அல்குர் ஆன் அருளப்பட்டது..

இந்த ரமழானைச் சிறப்பிக்கும் வகையில் நானும் என் வலைப்பூவில் ஹதீஸ், அல் குர்ஆனில் அருளப்பட்ட, நவிலப்பட்ட வசனங்களை பதிவிடுகின்றேன். இன்ஷா அல்லாஹ்....ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வசனங்களாக என் வலைப்பூவினிதயம் அதனைச் சுமக்கும் !

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே .அல்ஹம்துலில்லாஹ்!

 *****
இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்-

"நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள். (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள். உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக்கொள்ளுங்கள் "

அறிவிப்பவர் - இப்னு உமர் (ரலி) அவர்கள்                                          (2:30)

*****
இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :

"ரமழான் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றார்கள்"

அறிவிப்பவர் - அபு ஹூரைரா (ரலி) அவர்கள்                                      (2:30)

*****
ரமழான் மாதத்தைப் பற்றி அல்லாஹ் த ஆலா திருமறையாம் அல் குர்ஆனில் கூறுவதாவது-

"ஈமான் கொண்டவர்களே! உங்கள் முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டது போல உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்"

ஆதாரம் - அல் குர்-ஆன்  2:183

*****
இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்-

"சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கின்றது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். " நோன்பாளிகள் எங்கே" என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ் வாசல் அடைக்கப்பட்டு விடும். அதன் வழியாக வேறு எவரும்  நுழைய மாட்டார்கள்"

அறிவிப்பவர் ஸஹீல் (ரலி ) அவர்கள்                                              (2:30)

*****
 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் -

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுக்களை பேச வேண்டாம். முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட  வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் "நான் நோன்பாளி" என்று இருமுறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும். (மேலும்) எனக்காக நோன்பாளி தம் உணவையும் , பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகிறார்.நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது.அதற்கு நானே கூலி கொடுப்பேன்.! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!" (என்று அல்லாஹ் கூறினான்) "

அறிவிப்பவர் -   அபூ ஹூரைரா (ரலி)                                                   (2:30)

2012/07/24

கண்ணேறு (Eyil Eye)



கண்ணேறு என்பதை கண்ணூறு, நாகூறு,  திருஷ்டி என்றெல்லாம் அழைப்பார்..ஒருவர் இன்னுமொருவரை அல்லது அவர் பொருளை ஏக்கத்துடன் அல்லது பொறாமையுடன் பார்க்கும் போது உரிய பொருளுக்கு அல்லது ஆளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக பலரும் கூறுவதை அவ்வவ்போது கேள்விப்படுகின்றோம்.

உண்மையில் கண்ணேறு உள்ளதா?

இஸ்லாம் இதற்கு அனுமதியளித்துள்ளதா?

இவ்வாறாக என்னுள் தேங்கிய வினாவுக்கு விடை தேடினேன்...என் தேடலுக்கு கிடைத்த ஆதாரங்கள் இவைதான்.......

"கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்"

அறிவிப்பவர் - அபுஹூரைரா (ரலி)  , நூல் : புஹாரி முஸ்லிம்

"நபி (ஸல்) அவர்கள் கண்ணேறுவின் (தீய விளைவி) லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள் "

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள்

ஆதாரம் - புஹாரி

கண்ணேறு ஏற்படும் சந்தர்ப்பத்தில் பின்வரும் துஆ வை ஓதிக்கொள்ளும்படி நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் ...

"அவூது பிகலிமாத்தில்லாஹித் தாமத்தி மின்குல்லி ஷைத்தானின் வஹாமத்தின் வமின் குலவி அய்னின் லாம்மத்தின்"

பொருள்-
----------------
அல்லாஹ்வின் நிறைவான வார்த்தைகள் மூலம் ஒவ்வொரு சைத்தானை விட்டும். விஷ ஜந்துக்களை விட்டும், கெட்ட கண்திருஷ்டியை விட்டும் நான் பாதுகாப்பு தேடுகின்றேன் )        ஆதாரம் - முஸ்லிம்

எனவே ஒவ்வாத நிலைமைகளில் நமக்கேற்படும் கண்திருஷ்டிகளை நாமும் தவிர்ப்போமாக

2012/07/20

வந்ததே ரமழான் !


நிலாக் கீற்றின் உதய தரிசனத்தில்
வான விழிகள் கிறங்கிக் கிடக்க.-எம்
"கல்பின்" கறை கழுவிடத்தான்
மாண்போடு வந்ததே புனித 'ரமழான்!

"திக்ர்" செய்தே  இறையோ னிறைஞ்சி
"இறையில்லம் தனை நோக்கி சிரந்தாழ்த்தி
திருமறையின் நேசிப்பிலெம்
வாழ்வைப் பொருத்தி - நிதம்
இறையோ னன்பில் வீழ்ந்து கிடக்க
வந்ததே ரமழான்
தந்ததே மாண்பு பல!

விடியல் தொடாத இருள் கூடலில்
மடி தரும் "ஸஹரில்" அமர்ந்தே
உதடு குவிந்து "நிய்யத்" மொழிந்து
உவகையோடு நோன்பு பிடித்திடவே
வந்ததே ரமழான்
தந்ததே மனத் தூய்மையை!

"ஈமானால்" நிரப்பப்பட்ட எண்ணங்கள்
"இபாதத்" தாய் எட்டிப் பார்க்க
இச்சையறுக்கப்பட்ட  வுடலும்- மன
தூய்மையோ டொன்றித்துக் கிடக்க
வந்ததே ரமழான்
தந்ததே நன்மை பல!

இடர்படுவோரின் துயரறிந்து
ஈகை பல செய்திடவே
"ஸஹாத்" பரிமாறலின் சேவகர்களாய்- எம்
மனசும் கரங்களும் உருமாற்றிக் கிடக்க
வந்ததே ரமழானும்
தந்ததே ஈடேற்றமும்!

அகிலத்தின் தரிப்பிடத்தில் 
ஈமானிய விருட்சங்களாய் எமை வேரூன்ற
உறவுகளும் நேசங்களு மெமக்களித்த
அல்லாஹ்வூக்கே நன்றி பகிர்ந்திட
வந்ததே இனிய ரமழான்
தந்ததே நல்லமல்களை!

மனசோரம் பாவம் விரட்டி
மாண்பான நன்மை பல கோர்த்தே
மாநபி வழியொற்றி தடமும் பதித்து- எம்
மனவெளியின் சந்தனத் தோப்புக்களில்
மானசீகமாய் நாம் வீழ்ந்து கிடக்கவே
வந்ததே புனித நோன்பும்
தந்ததே இனிய வசந்தமும்!

நரகத்தின் நாடி யறுத்தே
விரசங்களின் பாவமெரித்தே
சொர்க்க வாசலை நாம் நுழையவே
மார்க்க மெம் இஸ்லாத்தின்
புனித கடமையாய்
முகங்காட்டும் ரமழானே
வந்ததே ..............வாசத்தோடு!

"லைலதுல் கதிர்" ஒளியினிலே
எழிலாகும் ரமழான் இரவினிலே
வசந்தமே எம் காலடி நிழலாய்
வாசத்தோடு கதை பலபேசிச் செல்ல
வந்ததே இனிய ரமழான்
தந்ததே பல அருள்மொழிதனை!

ஆகாயம் அண்ணார்ந்து பிரமித்திருக்க.
பாதாளம் பரவசத்தில் வீழ்ந்து கிடக்க
சாகரங்கள் சரித்திரம் வாசித்துச் சொல்ல
புன்னகை உதிர்வோடு புளாங்கிதம் தரவே
வந்ததே புனித ரமழான்
தந்ததே பல மாண்புகளையெம்முள்!

இறையோனின் அருள் மாதத்தில்
நோன்பாளியாய் நாமும் அமல் செய்ய
கைகட்டி நிற்கின்றன எம் பொழுதுகள்
நாளைய விடியலுக்காய்!

(கல்பு = மனம் ) (ஸஹர் = நோன்பிருப்பதற்காக ஆயத்தமாகும் சூரியன் உதயம் காட்டாத நடு சாமப்பொழுது) (ஈமான் = நம்பிக்கை) (ஸஹாத் = வறியவர்களுக்கு கொடுக்கும் கொடை) (லைலதுல் கதிர் = 27 ம் நோன்பின் புனித இரவு) இவை என் சகோதர மத நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க பதிவிட்ட சில சொற்களின் விளக்கம்)




-Jancy Caffoor -