About Me

2020/08/06

நிழல் - நவீனத்து கவிதை

ஒளியில்லாவிட்டால் நிழலும்

பயந்து 

மறைந்து கொள்கிறது/


மதிய வெயிலுக்கு

நிழல் 

செருப்பாகின்றன கால்களுக்கே/


கைவிரல்களின் நிழல்களும்

ஒளியுள்ளபோது 

வித்தை காட்டிச் சம்பாதிக்கின்றன./


நிலவு மறைப்பில்

பூமியின் நிழல் கண்டு

நிலவும்

கொதிக்கின்றது கோபத்தில்/


கதிரவ மறைப்பில்

நிலவின் நிழல் கண்டே

சூரியனும்

பயத்தில் கண்களை மூடுகின்றதே/


சூரியனைக் கண்டதுமே

எமது நிழல்களும் வழுக்கி வீழ்கின்றன

தரையில்/


தகரத் துளைகளில் விழும்

சிறு ஒளிப்பொட்டின் நிழலும்

புகைகின்றன

ஏழையின் மனக்குமுறலாய்/


A.C.Jancy

மனசுக்குள்ளே பூக்கும் மழை



வானம் தேடும் முகில்கள் கூட்டம்/
தினம் ஊற்றாதோ நீரைத்தான் பூமிக்குள்/
கானம் இசைத்திடுமே குயில்களும் கூதலில்/
மனதும் இசைந்திடுமே ஈரப் பூக்களுடன்/
வான்மழை கண்ட வண்ணமயில் ஆட்டம்/
காண்போர் விழியினில் செருகிடுமே வசந்தத்தை/
வானவில் கோலமும் வண்ணத்திரை விரித்திட/
தானமாய் உதிர்ந்திடுமே வான்மழையும்  வையகத்திற்கே/

ஜன்ஸி கபூர்  
 





  

அஃதாண்டு அவள் செய்தது


சோலைத் தென்றலில் சிறகுவிரித்த வாலைக்குமரியவள்/
காளையைக் கண்டதுமே காதலும் மலர்ந்ததுவே/  
கூர் விழிகளிற் இசைந்திட்ட காதலும்/
கூடியே களித்ததே மகிழ்வின் பேரொளியாய்/

கசிந்த காதலும் கனிந்ததே திருமணத்தில்/
கன்னி மனதை காளையும் வென்றான்/
இணைந்தனரே இன்பவெளியிற் இதயங்களும் சிரித்திடவே/
இல்வாழ்வின் அமுதத்தில் தித்தித்தனர் ஆருயிராய்/

மன்னவனும் பொருளீட்ட பிரிவதாய் சொன்னதும்/
மங்கையவள் துடித்திட்டாள் பிரிவின் வலியுணர்ந்து/
தொலைவிலவர் நீங்கிடின் மெலிந்திடுமே தோள்களும்/
வளையலுமே நழுவிடுமே கரங்கள் விட்டே/

உளத்துயர் தாங்கிடாதே உயிரதுவும் பிரிந்திடுமே/
உறவின் திசையினில் பாதங்களும் போகுமே/
உன்னதக் காதலின் குறிப்புணர்ந்த தோழியும்/
உரைத்தாலே தலைவனுக்கே தலைவியின் மனதினையே/

ஜன்ஸி கபூர் - 05.08.2020
யாழ்ப்பாணம் 





 

2020/08/05

காதோடு குழையாட


காதோடு குழையாட கன்னமெல்லாம் நாணமா/
கருத்தோடு இசைந்த புள்ள கண்ணம்மா/
கரும்புக் காட்டுப் பக்கம் தான் வாறியா/
அரும்பியிருக்கிற ஆசகளத்தான் பேசிடலாம் கண்ணால/

ஒத்தயடிப் பாதையில ஒய்யாரமாய் நடக்கையில/
சித்தமெல்லாம் ஒன்மேலதான் சாயுதடி செல்லம்மா/ 
சிக்கினேனடி உன்னிடம்தான் விக்கலெடுக்குது நெனவுக்குள்ள/ 
பக்கம் வந்து பேசடி மாதுளம்பிஞ்சே/ 

தாமரை மொட்டெடுத்த சாற்றிலதான் ஒடம்பிருக்கு/
சாமத்து கோழிபோல  நீளுறே கனவுக்குள்ள/
பூமரத்து வாசம் நெஞ்சுக்குள்ள பேசும்/
பூமாதேவியும் பூரிப்பா ஒன்னப்பாத்து மனசுக்குள்ள/ 

சொப்பனச் சொக்கியே மச்சான மயக்கித்தானே/
சொல்லாமப் போறியே ஆத்துப்பக்கம் தனித்துதான்/
மல்லிகை வாசம் மனசோட பேச/
அல்லியே வாறேன்டி உந்தன் பின்னாடி/

ஆக்கத்தான் பொறுத்திட்டேனே ஆறத்தான் பொறுக்கலயே/
ஏக்கங்கள் வெட்டுதடி எந்தன் நெஞ்சுக்குள்ள/
ஏழு மணிக்குள் வந்திடி ஏலத்தோப்புக்குள்ள/
விழுந்திட்ட மனச இழுக்கிற ஒனக்குள்/

நீயும் வாழும் நெஞ்சக்கூடு தனியாத்தாயிருக்கு/
சாஞ்சிட தோளத் தந்திடடி சொகமாயிருக்கும்/
கொஞ்சிடும் குழைதான் மிஞ்சிடுது அழகில்/
வஞ்சியே வாக்கப்படு தவிப்படங்கும் நெஞ்சுக்குள்ள/

ஜன்ஸி கபூர்