About Me

2020/08/09

மழையில் பூத்த நிலா

தெறித்திட்ட பூமழையில் நனைந்திட்ட நிலவும்

பறித்தெடுத்த இலைக்குள் மறைக்கின்றதே உடலை

சிரித்திடும் கன்னமதில் விரிந்திடும் அழகும்

பூரிக்கின்றதே சிற்பமவள் மெல்லிடையும் சிலிர்க்க


மூடிய விழிகளுக்குள் மோதிடும் மகிழ்வெல்லாம்

சூடிய மல்லிகையின் வாசத்தில்  நுரைத்தெழ

நனைந்திட்ட தேகமதும் விரித்திடும் சிறகால்

புனைந்திட்ட காவியமாய்  உயிர்த்திடுவாள் இவளே


ஜன்ஸி கபூர்

யாழ்ப்பாணம்  


  •  

வறட்சிப் பூக்கள்

ஏக்கங்கள் வெடித்திடும் ஏழ்மையும் கண்டே/

ஏனி றங்கவில்லை வான்மழையு மிங்கே/

வெடித்திட்ட தரைக்குள்ளே துடித்திடும் வலியும்/

வடித்திட்ட கண்ணீரும் ஈரமில்லா அனலே/


வறட்சி நிலமெல்லாம் கரைந்திட்ட பசுமையால்/

வயிறும் காய்ந்ததே வைரமாய் இடரிங்கே/

வசந்தத்தின் நிழலிங்கே பெருஞ்சுமைக்குள் இளைப்பாற/

வாடிய மனங்களின் தேடலிங்கே மூச்சறுப்பே/


ஜன்ஸி கபூர் 

தோள் கொடுக்கும் தோழனிருந்தால்


மனமது திசைமாறுகையில்
நிறுத்திடும் கரமாய்/

மடிந்திருக்கும் துன்பங்களையும்
விரட்டிடும் உருவாய்/

உணர்வின் மொழியாய்
உருக்கொள்ளும் நட்பே/

உண்மை அன்பில்
உயிர்த்திடும் அழகாய்/

உள்ளத்து வலியைத்
துரத்திடும் அன்பே/

ஊமைக் காயங்களுக்கும்
மருந்திடும் நொடிப்பொழுதில்/

தோள் கொடுக்கும்
தோழன் அருகென்றால்/

வாழ்நாளும் நீளுமே
வசந்தத்தின் துணையுடன்/

ஜன்ஸி கபூர்  



நலமோடு வாழ


பறக்குது காற்றிலே கொரோனாக் கொடி/
பதறித் துடிக்குது பாரும் நோய்முற்றி/
உதறுது ஆரோக்கியம் உயிரை வருத்தியபடி/
உழைப்போ ஏதுமின்றி உறங்குது ஊரடங்கில்/

உன்னத மனிதமும் உறவின் அருமையும்/
உணர்த்திய பாடங்களாம் உருண்டன நெஞ்சோடு/
இறுமாப்பில் நிமிர்ந்தோரும் இன்னலுடன் தலைகுனிந்தே/
வறுமைச்சுவை தானறிந்தே வாழ்வையும் புரிந்தனரே/

முகக்கவசம் மூச்சுக்காற்றின் முத்தமாய் அலைந்ததுவே/
அகக்கண்ணிலோ அச்சம் மொத்தமாய் வீழ்ந்ததுவே/
முத்திரையாம் கைக்கவசமும் இடைவெளியும் நலமாகும்/
முடிவுரையாய் ஆரோக்கியப் பயிற்சியும் நமதாகும்/

ஜன்ஸி கபூர் - 09.07.2020