About Me

2021/04/13

வெற்றியும் தோல்வியும்

 


 
வீழ்கையில் எழுவது ஆற்றலின் பலமே/
மூழ்கினாலே முத்துக்களைத் தொடுகின்றது கரமும்/
வெற்றியும் தோல்வியும் முயற்சியின் பலனே/
கற்றிடலாம் பாடங்களை பெற்றிடலாம் அனுபவங்களை/ 

தவறிப் போகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களும்/
தரிக்கின்றதே பிறிதொரு நன்மைக்குள் என்றுமே/
குறைகளைக் கண்டறிந்தால் துலங்குமே நிறைகளும்/
குன்றாப் புகழில் இணைக்குமே நம்மையுமே/

சிறப்பான எண்ணத்துள் சிறகடிக்கும் நல்லறிவு/
சிந்தையை ஆள்கையில் உணர்கிறோம் உயர்வை/
விந்தை வாழ்வுக்குள் விளையாடும் விதியென/
விமர்சிக்கின்றோம் நாமும் தோற்ற பொழுதுகளை/

கழிகின்ற பொழுதுகளை கருத்தோடு செலவழிக்கையில்/
வழிகின்றதே உற்சாகம் வருத்தமும் தொலைகிறதே/
விடிகின்ற பொழுதுகளில் படிகின்றதே ஆனந்தம்/
விருப்புடன் உழைக்கையில் எதிர்காலமும் உயர்கிறதே/

ஜன்ஸி கபூர் - 6.12.2020

அதிகாலை வேளையிலே


வைகறைப் பொழுதில் சிதறுகின்ற சந்தனம்/
கறை ஆகிடமோ நீள் வானுக்குள்ளும்/
திறையும் விரித்திடாமல் விலகும் முகில்கள்/
மறைக்கவுமில்லை ஏந்துகின்றன ஆதவன் நிழலினை/
 
கனவுகளைப் படித்த இரவுகள் விழிக்கையில்/
கானமும் ஒலிக்குதே பறவைக் குரல்களில்/
மெல்லிய குளிரும் மோதுகின்ற காற்றில்/
மெல்லத் திறக்கின்றதே பூக்களின் வாசமும்/

பசுமைவெளிகளில் அழகாக வெடிக்கின்ற பனித்துளிகள்/
படர்கின்றன முத்துக்களைக் கோர்த்தவாறு பாதைகளில்/
மடலும் வரைகின்றதோ கதிர்களின் காதலும்/
உடலும் பளபளக்க உற்சாகத்தில் பறவைகள்/

சோம்பலைத் துடைத்தே சோபையினை அணிந்த/
விசும்பின் புன்னகைக்குள் உயிர்களும் மகிழ்ந்திட/
பறக்கின்றதோ மலர்களும் வண்ணாத்துப் பூச்சிகளாகி/
நறவினைச் சுவைத்திட துடிக்கின்றதோ சிறகுகளும்/

உழைப்பினை உரமாக்குகின்ற விடிகாலைப் பொழுதினுள்/
அழைக்கின்றதே ஆனந்தமும் மனதினை மெல்ல/
பூபாளச் சத்தத்தில் நாதமிடுகின்ற பொழுதினை/  
நானும் ரசிக்கின்றேன் உள்ளமும் உவந்திட/

ஜன்ஸி கபூர் - 11.12.2020

கருப்பு நிலா

 

மேனியின் நிறத்தினில் பார்வைகள் தொடுத்தே/
வலியினை வீசுகின்ற வக்கிர உலகினில்/
வாழ்ந்திடும் பாதையினை அறிந்திடாப் பேதை/
தாழ்கின்றாள் தவிப்பினில் தன்மானமும் கருகிட/

அழகினை ஆராதித்தே பழகிடும் மாந்தர்/
அறியாத அகமே அன்பினைத் தேக்கும்/
வருத்திடும் சமூகம் வழிதனைக் காட்டாது/
துரத்துகின்றதே தினமும் விதியெனும் பெயரால்/

விழிகள் எதிர்பார்ப்பில் நழுவுகின்ற போதெல்லாம்/
நழுவுகின்றதே ஆசைகளும் கண்ணீரில் கரைந்திட/
தழுவிய மாங்கல்யம் கழுத்தினை இறுக்கிட/
அழுகின்றதே உணர்வுகள் ஆறாக் காயத்துடன்/

கருமைக் கருவறைக்குள் உருக் கொண்டோரும்/
திருமேனிக்குள் தேடும் பொன்னிறக் கலவை/ 
எரிக்கின்ற தணலும் பூக்கின்ற பூவே/ 
நுரைக்கின்றதே கண்ணீரும் உறைகின்றதே வடுவாகி/

ஜன்ஸி கபூர் - 21.12.2020

எனக்கே எனக்கா

வெண்ணிலா மெல்ல இறங்கியது மடியினில்/
கண்களோ தென்றலைத் தழுவியது ஆசையுடன்/
மண்ணும் மின்னியது செல்ல நடைதனில்/
எண்ணற்ற இன்பத்தில் குவிந்தது மனமும்/
 
பிஞ்சு விரல்களின் கொஞ்சும் அன்பால்/
நெஞ்சினில்;  தேனும் வருடியதோ இதமாக/
மழலை மொழிதனில் மலர்கின்ற  சிந்தைக்குள்/
அழகின் அகராதியும் மனப்பாடம் ஆனதே/

எனக்கே எனக்கா கிடைத்திட்ட வரத்தினை/
தாய்மை நிழலுக்குள் போர்த்திக் கொண்டேன்/
தரணி வாழ்விற்குள் அர்த்தமும் கண்டேன்/
அடுத்தார் பலித்திடாது கிடைத்ததே செல்வமாகி/

ஜன்ஸி கபூர் - 21.12.2020