வைகறைப் பொழுதில் சிதறுகின்ற சந்தனம்/
கறை ஆகிடமோ நீள் வானுக்குள்ளும்/
திறையும் விரித்திடாமல் விலகும் முகில்கள்/
மறைக்கவுமில்லை ஏந்துகின்றன ஆதவன் நிழலினை/
கனவுகளைப் படித்த இரவுகள் விழிக்கையில்/
கானமும் ஒலிக்குதே பறவைக் குரல்களில்/
மெல்லிய குளிரும் மோதுகின்ற காற்றில்/
மெல்லத் திறக்கின்றதே பூக்களின் வாசமும்/
பசுமைவெளிகளில் அழகாக வெடிக்கின்ற பனித்துளிகள்/
படர்கின்றன முத்துக்களைக் கோர்த்தவாறு பாதைகளில்/
மடலும் வரைகின்றதோ கதிர்களின் காதலும்/
உடலும் பளபளக்க உற்சாகத்தில் பறவைகள்/
சோம்பலைத் துடைத்தே சோபையினை அணிந்த/
விசும்பின் புன்னகைக்குள் உயிர்களும் மகிழ்ந்திட/
பறக்கின்றதோ மலர்களும் வண்ணாத்துப் பூச்சிகளாகி/
நறவினைச் சுவைத்திட துடிக்கின்றதோ சிறகுகளும்/
உழைப்பினை உரமாக்குகின்ற விடிகாலைப் பொழுதினுள்/
அழைக்கின்றதே ஆனந்தமும் மனதினை மெல்ல/
பூபாளச் சத்தத்தில் நாதமிடுகின்ற பொழுதினை/
நானும் ரசிக்கின்றேன் உள்ளமும் உவந்திட/
ஜன்ஸி கபூர் - 11.12.2020
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!