கவிஞர் கண்ணதாசன் அவர்கள் !


ஒவ்வொருவரும் அனுபவங்களை உள்வாங்குகின்றோம். அந்த அனுபவங்களை நம் உணர்வுகளால் மெருகூட்டத் துடிக்கும் போதே கவிஞன் பிறப்பெடுக்கின்றான்.தன் வார்த்தை வருடல்களால் பிற மனங்களை வசியப்படுத்தும் போது இலக்கியவுலகின் சொந்தங்களும் நேசிப்புக்களும் தங்கள் இராச்சியத்துக்குள் இவர்களுக்கான செங்கம்பள விரிப்பை விரிக்கின்றனர்.வரவேற்கின்றனர்.

அந்த வகையில் கவிதைகளின் தேன் ஊற்று, காவியத் தாயின் இளைய மகனாய் பொன்முடி சூட்டிக் கொண்ட கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாளின்று (2012.06.24). தன் முகம் காட்டி நிற்கின்றது.

தமிழ்நாடு சிறுகூடல்பட்டியில் 1927ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் திகதி சாத்தப்பனார், விசாலாட்சி தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். இவர் இயற் பெயர் முத்தையா. உடன்பிறப்புக்கள் எண்மர். இருந்தும் குடும்பத்தின் பாச நீரோட்டம் இவரை நனைக்க முன்னரே ஏழாயிரம் ரூபா பணத்திற்கு தத்துப்பிள்ளையாகி வேறோர் பெற்றோர் வசம் போய்ச் சேர்ந்தார்.

"நாராயணன்" வளர்ப்புப் பெற்றோரிட்ட பெயர் . இவர் கல்வி எட்டாம் வகுப்புடன் தடைப்படவே பதினாறு வயதில் பணி புரியத் தொடங்கினார்..பொன்னம்மா, பார்வதி, வள்ளியம்மை எனும் மூன்று மனைவியர் மூலம் பதினான்கு வாரிசுகள்.இலர் இரத்த உரிமைகளாகின.

கவிஞர் கண்ணதாசன்.அவர்கள்....காலம் என்றும் உச்சரிக்கும் அற்புதமான கவிஞர்.இவரின் ஒவ்வொரு பாடல்களிலும் இழையோடிக் கிடக்கும் கவி வார்ப்பின் ஆழத்தினைக் காணும் போது நம்மனசுக்குள் வியப்பு சிறகடிக்கின்றது.

.இவர் காலம் நமக்கு அடையாளம் காட்டிய அற்புத கவிஞர் . காதல், திருமணம், வாழ்க்கை, தொழில், ஏக்கம், சோகம், அன்பு, பாசம் எனும் பல உணர்வுக் கலவைகளில் சொற்சிலம்பாடிய உணர்ச்சிக் கவிஞர்.

நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளையும், ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களையும் மக்கள் மனங்களில் நிறைத்தவர் கண்ணதாசன் அவர்கள். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்த இவருக்கு அரசு தன் கௌரவப்படுத்தலை சாகித்ய அகாதமி விருதின் மூலம் வழங்கியது.

சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் போன்ற இதழ்கள் இவரின் மேற்பார்வையின் கீழ் பதிப்புரிமை பெற்ற இதழ்களாகும்.கம்பரும் பாரதியாரும் இவரின் மானசீக குருக்களாகும்.

இவர் இந்துமதத்தில் பிறந்தவராயினும் மதங்களுள் மதங் கொள்ளாமல் பிற மதங்களிலும் மனம் லயித்து இயேசுகாவியம் பாடினார்.

திரைப்படப்பாடல், அர்த்தமுள்ள இந்து மதம், மாங்கனி,இயேசு காவியம் இவரது படைப்புக்களாகும். ,அர்த்தமுள்ள இந்துமதம் பத்துபாகங்களாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தாய்ப்பாவை, கவிதாஞ்சலி,கண்ணதாசன் கவிதைகள் உள்ளிட்ட பத்து கவிதை நூல்கள் இவரின் சொந்தமாகின. கண்ணதாசன் கவிதைகள் ஆறு பாகங்களாக வெளியாகின.அவ்வாறே கடைசிப்பக்கம் உள்ளிட்ட பத்துக்குமேற்பட்ட கட்டுரைகளையும், விளக்கு மட்டுமா சிவப்பு உள்ளிட்ட இருபத்தொரு புதினங்களையும் , வனவாசம் உள்ளிட்ட பத்து கட்டுரைகளையும் எழுதியுள்ளன அவரின் கரங்கள் .ராஜ தண்டனை, அனார்கலி உள்ளிட்ட மூன்று நாடகங்களும், பகவத் கீதையுரை, அபிராமி அந்தாதியுரை என்பன அவர் நமக்கு விட்டுச் சென்ற இலக்கிய கலசங்களாகும்.

காலம் மறக்காத இந்த ஒப்பற்ற கவிஞர் 1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் திகதி அமெரிக்கா சிகாகோ நகர் மருத்துவ மனையில் தன்னுயிர்த்துடிப்பை நிரந்தரமாக அடக்கினார்.மதுபோதையின் நட்புக்கு பலியாகிய இந்தக் கவிஞன் மறைந்தாலும் இன்னும் கவிதைகளாலும் , பாடல்களாலும் நம்மிடையே உயிர்த்துக் கொண்டுதானிருக்கின்றார்.

இவரது ஞாபகங்கள் இன்றும் கூட சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணதாசன் மணிமண்டபம் மூலம் மீட்டப்படுகின்றது. அங்கு அவரது நூல்கள் உள்ளிட்ட பல நூல்கள் வைக்கப்பட்டுள்ள நூலகமும், அவரது வாழ்க்கை வரலாற்றின் எச்சங்களாகப் பரிணமிக்கும் புகைப்படங்களின் தொகுப்புக் கண்காட்சியும் நடைபெறுகின்றது. அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது மார்பளவுச் சிலையும் அவர் விட்டுச் சென்ற கனச்செறிவான கவிதைகளின் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றன இன்றும் என்றால் மிகையில்லை

கண்ணதாசன் அவர்களின் மணக்கோல நிகழ்வைக் காட்டும் அபூர்வ புகைப்படமிது

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை