About Me

2012/06/06

நவீனத்துவம்


விண்ணுக்குள் கோலமிட்டு
கோள்களைப் பிய்த்தெறிய
துடிக்கின்றன - நவீனத்துவ
நாசாவின் விரல்கள்!

பூமி மார்புக் கூட்டினை கிழித்து
தலை நிமிரும் மாடமாளிகைகள்....தம்
முகம் பார்க்கத் துடிக்கின்றன
ஆகாயக் கண்ணாடியினில்!

மேகங்களை பிய்த்தெறிந்து
சாகசம் செய்யும் யந்திரப்பறவைகள்
எச்சமிட்டே ஏக்களமிடுகின்றன - நம்
சூழலின் கற்பைக் கெடுத்தவாறே!

பசுமைகளை கரைத்துவிட்டு 
வெம்மைக்குள் முறைத்துக் கிடக்கும்
வெட்ட வெளிகள் 
நா வறண்டு மயங்கி வீழ்கின்றன!

பாய்ந்தோடும் கடலீரத்தில்
கால் நனைக்கா வீதிகளுக்காய்
காத்திருக்கும் பாலங்கள் - வாகன
நெரிசல்களால் வாந்தியெடுக்கின்றன பலமாய்!

இயந்திரக் கைகலப்பில்- மனித
இதயங்கள் மௌனித்துக் கிடக்கையில்!
ஆலைகள் வீரியங்கள் கொண்டு - மனித
சாலைகளின் உழைப்பை உறிஞ்சியெடுக்கும்!

ரோபோக்களுக்குள் ரேகை நுழைக்க
வீறாப்பாய் காத்திருக்கும் விஞ்ஞானம் மனித
மனங்களுக்குள் முரணை அரணாக்கி
ஈனப்பிறவியாய் வேவும் பார்க்கின்றது!

கைபேசிகள் கண்ணடிக்கும்- மனித
கரங்கள் கணனிக்குள் மொழி பேசும்!
உறவுகளும் நட்புக்களும் ஊமையாக
உலகமே கைக்குள் சுருங்கிக் கிடக்கும்!

நவீனத்துவத்தின் காலனித்துவத்தில்
கல்லடிபட்டுக்கிடக்கும் பழைமைகள் 
தள்ளாடி வீழ்கின்றன - சிலர்
எள்ளி நகையாடல்களுடன்!


ஜன்ஸி கபூர் 







2 comments:

  1. //கைபேசிகள் கண்ணடிக்கும்- மனித
    கரங்கள் கணனிக்குள் மொழி பேசும்!
    உறவுகளும் நட்புக்களும் ஊமையாக
    உலகமே கைக்குள் சுருங்கிக் கிடக்கும்!
    // நடைமுறை இது தான் ஜான்சி

    ReplyDelete
  2. உண்மைதான் தர்சினி..........இந்த வாழ்வியலைப் புறக்கணிக்க முடியாதவர்களாய் நாம் !

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!