நான் முகநூல் எனும் சமூக வலைத்தளத்தில் கால் பதித்து 18 மாதங்களே (08.06.2012) கடந்திருக்கின்றன. இன்று பலரை நட்பால் ,அன்பால் , மனித நேயத்தால் பிணைத்திருக்கும் இந்த முகநூல் எனும் மாபெரும் சக்தியானது ஓர் நொடியில் அகிலத்தின் பல திக்குகளையும் தொடச் செய்கின்றது.
ஒத்தக் கருத்து உடையவர்களை தேடி நட்புக் கொள்ளவும், பிரிந்த நண்பர்களுடன் இணையம் வழியாக இணைந்திருக்கவும் உருவாக்கப் பட்டதுதான் ஃபேஸ்புக் சமூக வலைதளம்.
எல்லாவற்றிற்கும் ஈர் பக்கங்கள் உண்டு. அடுத்தவர் மகிழ்ச்சி, வளர்ச்சியில் திருப்தி காணாத மனநோயாளிகளே முகநூலில் நம் பெயருக்குள் களங்கம் விளைவிக்கின்றனர். முயல்கின்றனர். முகநூல் பாதுகாப்பற்றது. ஏனெனில் யார் வேண்டுமானாலும் என்ன பெயரிலும் எத்தனை முகநூல்பக்கங்களையும் கணக்கின்றி உருவாக்கலாம் எனும் நிலைப்பாடுள்ளது. இந்த வசதி வாய்ப்புக்கள்தான் பலருக்கு தீங்கு விளைவிக்கும் முகநூல் எதிரிகளை உருவாக்குகின்றது. எனினும் நாம் நல்லவற்றிற்காக முகநூல் பக்கங்களை பயன்படுத்தும் போது அதன் மூலம் கிடைக்கும் திருப்தி, மகிழ்வு வார்த்தைக்குள் கட்டுப்படாதது.
அதுமட்டுமல்ல வீணாகக் கழியும் நம் பொழுதுகளை நாம் முகநூலுக்குள் சுருக்குவதால் பிறருடனான வீண் வார்த்தையாடல்களையும் தவிர்க்க முடிகின்றது.. நம்மைச்சூழ விரிக்கப்படும் மெளனங்களும் நிசப்தங்களும் பிறருடனான முரண்பாடுகளைத் தவிர்க்க உதவுகின்றது.
முகநூல் சிறந்த தொடர்பு சாதனம்....வயது, பால் , மத, அந்தஸ்து போன்ற எவ்வித வேறுபாடின்றி ...நட்பை , அன்பை, தாம் பெற்ற அனுபவங்களை , தமது திறமைகளைப் பரிமாறிக் கொள்ளவுதவும் சிறந்த முற்றமது.....!
இருந்தும் அதிக அன்பு தரும் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத ஏமாற்றங்கள், ஏக்கங்கள், காதல் தொடர்புகள் ஏற்படுத்தும் தோல்விகள் ,நினைத்தவுடன் எவ்விதத் தணிக்கையுமின்றி எமது விமர்சனங்களை வெளிப்படுத்துவதால் ஏற்படக்கூடிய முரண்பாடுகள், கண்டனங்கள் , சுதந்திரமான நமது வெளிப்பாட்டில் பொறாமை கொண்டெழும் எதிரிக் கூட்டங்களும் அவர்களின் முறைகேடான தாக்குதல்களும் போன்ற செயல்கள் யாவுமே நம்மைச்சூழவுள்ள பாதகங்களே!
முகநூலில் நாம் வெளிப்படுத்தும் ஒவ்வொரு அசைவும் நுணுக்கமாக அடுத்தவரால் அவதானிக்கப்படுவதை பலர் மறந்தே விடுவதால்தான் சில சந்தர்ப்பங்களில் நட்பின் ஒழுக்கம் விலகி பிரச்சினைகள் எட்டிப்பார்க்கின்றன அடுத்தவரின் கேலிப் பார்வைக்குள்ளும் நாம் வீழ்கின்றோம்..
முகநூல் என்பது பெரும்பாலும் முகமறியாதவர்களுக்காக நாம் உருவாக்கும் இராஜ்ஜியம். இங்கு வருபவர்கள் பற்றியும் நம் நட்பு வட்டத்தில் இணைவோர் பற்றியும் நம்மால் எவ்வித உத்தரவாதமும் பெறமுடியாது. ஏனெனில் அவர்களால் முன்வைக்கப்படும் தகவல்களே நாம் நம்பும் ஆதாரங்கள். மனிதர் முகங்களைப் போல் குணங்களும் மாறலாம் .எல்லோரையும் ஒரே எடையில் வைத்துப் பார்க்க , கணிக்க முடியாது. முகநூலினுள் நாம் மகிழ்வாக உலா வர வேண்டுமானால் ஒவ்வொரு நகர்வையும் அவதானமாகவே இடவேண்டும். அதற்காக நான் பின்பற்றும் சில நடைமுறைகள் இவைதான்...........
நண்பர் இணைவுக்கான அனுமதி வரும் போது (Friend request) நான் அந் நண்பர்களுடன் தொடர்புடைய என் நண்பர்கள் யார் (Mutual friend) என்பதையே முதலில் பார்ப்பேன். அவர்களின் முகப்புப் பக்கத்தையும் ஆராய்வேன். அவ்வாறு பார்த்து திருப்தியுற்ற பின்னரே சம்மதம் கொடுப்பேன்.அப்பொழுதே அந் நட்பு நிலைக்கும், பயனுள்ள கருத்துப்பரிமாற்றங்களுடன் தாவி நிற்கும். .ஏனெனில் முகநூல் பிரவேசமானது பெண்களுக்கு கத்தி விளிம்பில் நடப்பதற்கு ஒப்பானது. இத் தளத்தில் எற்படும் சிறு சறுக்கலும் நம்முள் நிரந்தர இடர்பாட்டை, அவமானங்களைத் தோற்றுவித்து விடும்.
அத்துடன் நாம் பதியும் சுய விவரங்களை குறைவாகப் பதிய வேண்டும். பெயர் , பிறந்த திகதி, தொழில், நாடு அல்லது ஊர் இருந்தால் போதும். மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பர்களைத் தவிர வேறு யாருக்கும் தொலைபேசி எண்களைப் பரிமாறக்கூடாது.
பொதுவாக நாமிடும் பதிவுகள் சகலருக்கும் பொருத்தமுள்ளதாகவும், சிந்தனையை வளப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். 'மெஸேஜ்" எனும் பகுதிக்குள் பதியப்பட வேண்டிய தனிப்பட்ட , குறித்த நண்பர் மட்டும் பார்க்க வேண்டிய செய்திகளை பலர் பொதுப்படையாக பரிமாறுவது ஆரோக்கியமல்ல. பெண்களை ப் பொறுத்தவரை இந் நடைமுறை நிறுத்தப்பட வேண்டிய தொன்று. ஆண் நண்பர்களால் பரிமாறப்படும் வெளிப்படையான செய்திகளுக்கு தேவைப்படின் பெண் நண்பிகள் அவர்களின் மெஸேஜ் பகுதிக்குள் தம் கருத்துக்களைப் பகிரலாம்.
என்னைப் பொறுத்தவரை செய்திப்பரிமாற்றங்கள், chat தொடர்பாடல் என்பவற்றை அதிகளவு மேற்கொள்ளாது தவிர்க்க வேண்டும். சிலரின் பார்வை நாம் பதிவிடும் விடயங்கள் தொடர்பாக இல்லாமல், மெஸேஜ் பகுதிகளினூடான வீணாண தொடர்பாடலிலேயே இருக்கும். இது எனக்குப் பிடிக்காததும் கூட..........ஆனால் நாம் நமது நண்பர்களாக உறுதிப்படுத்தியவருடன் அதிகம் தொடர்பாடுவது தவறல்ல..ஆனால் அவ்வாறான தொடர்பாடலை நட்பை, நம்மை புரிந்து கொண்டவர்களுடன் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்..
முகநூலில் நல்ல நண்பர்களாக இனங்கண்டவர்களை அடிக்கடி பெயர் சொல்லி விளியுங்கள். ஏனெனில் பெயர் குறித்தல் மனதை இதப்படுத்தி நம்முள் தலைகாட்டும் வேறுபாடுகளைக் களைந்து நம் மனதை அன்பின் பால் ஈர்க்கும்.
முகநூலில் நாம் பதிவிடும் புகைப்படங்களை நமக்கு தெரியாமல் யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் (download) செய்து தவறாக பயன்படுத்தலாம் பெண்களின் புகைப்படங்களை கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் உலவ விடும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. எனவே பெண்கள் தமது புகைப்படங்களை வலைவேற்றம் (upload) செய்யக்கூடாது . தேவைப்பட்டால் குறித்த நம்பிக்கையான நண்பர்கள் மட்டும் பார்வையிடச் செய்யலாம்.
அவ்வாறே போலிப் பெயர்களில் உலாவுவோருடனும் நட்பு கொள்வதை தவிருங்கள். ஏனெனில் இடப்படும் முகமூடி தவறுகளின் பக்கங்களில் நம்மைத் தள்ளிவிடும்..நல்ல நண்பர்கள் நிச்சயம் தமது சொந்தப் பெயர்களில் மட்டுமே தொடர்பு கொள்வார்கள்
முகநூலில் நாம் பதிவிடும் விடயங்களை நண்பர்கள் மட்டுமே பார்வையிடச் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல நல்ல விடயங்களை மட்டும் பகிர வேண்டும். பின்னூட்டங்களை( Comment) வழங்கும் போது பிறர் நம்மை மதிக்கக்கூடியவாறு பண்புள்ள நல்ல வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். அவ்வாறே நண்பர்கள் தானே என்று அவர்களிடும் சகல பதிவுகளுக்கும் விருப்பிட்டு (Like) வம்பில் மாட்டிக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். நாமிடும் விருப்புக்களும் பின்னூட்டங்களும் பதிவுகளுமே அடுத்தவர் மத்தியில் நம் இருப்பின் கௌரவத்தை உறுதிப்படுத்தக் கூடியவை.
அவ்வாறே நம்முள் அதிகம் பரிச்சயமில்லாதவர்களுடன் அளவுக்கதிகமாக உரையாடி காதல் போதையில் களிப்பதும் தவறு. ஏனெனில் முகநூல் காதல் பெரும்பாலும் பொய்யான வலைவிரிப்பு. சொற்ப நேர சந்தோஷ உணர்வுப் பரிமாற்றங்களால் பெண்கள் கற்பையே பறிகொடுத்து அல்லல்பட்ட சம்பவங்களையும் நாம் கேள்விப்பட்டுள்ளோம்.
இருந்தும் என்னைப் பொறுத்த வரை விரல்விட்டெண்ணக்கூடிய நல்ல நட்புக்களை நான் முகநூலில் பெற்றுள்ளேன். அந்த நட்புக்கள் என் ஆயுட் கால வாழ்வுவரை தொடரவேண்டுமென்பதே என் எதிர்பார்ப்பாகும்.
ஈற்றில் முகநூல் நிலவரங்களை உணர்ந்து நாம் களமிறங்கினால் நம் சமூக அந்தஸ்தும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுவதுடன் பாசக்கார நட்புக்களும் நம்மைச் சூழ்ந்திருக்கும்.
முகநூல்...
ReplyDeleteவரமும் (சிலவும்) சாபமும் (பலவும்) நிறைந்த "அழகிய (கூர்மையான) கத்தி"...!
இதில்...
நம் "அணுகுமுறையே" நம்மை காக்கும்!.
நிச்சயமாக....நம் அணுகுமுறையின் பிரதிபலிப்பாகவே நம் பதிவுகளும் அமையும்...சாபம் தவிர்த்து வரம் பெறுவது நம் புத்திசாலித்தனத்திலேயே உள்ளது. நன்றி Sherkhan
Delete