இருள் சந்தங்களில் சிந்தப்படும்
நம் கவியீர்ப்பில்
வெண்ணிலவின் நாணம்
சந்தனம் குலைத்துத் தரும்!
உன் விரல் நெருடலில் நெளியும்
என்
கணையாழி ஸ்பரிசம்
மெல்லிசையாய்
நெஞ்சில் கோடு கிழிக்கும்!
உன் விழியோரங்களில்
எனை நீ நட்டி
மோகித்து வேரறுக்கும் நேரம்
உறக்கம் கூட தொலைந்து போகும் - நம்
ஞாபகங்களை நீராட்டியபடி!
காரிருள் பூத்ததும்
காரிகையின் விழிக்கேணியில் வீழ்ந்திடரும்
உன் பார்வையில் மொய்க்கும்
நேசமும் காமமும் மருகி
உயிரோடிணையும் நயனமாய்!
காத்திருப்புக்களை விழுங்கிவிட்டு
நமக்காய்
வீழ்ந்து கிடக்கும் நிழல்களில் கூட
மௌனித்துக் கிடக்கும் நிஜம்
சேரத்துடிக்கும் அருகாமைக்காய்!
உனை நானும் எனை நீயும்
நம் இதழோரங்களில்
ஒத்திகை பார்க்கையில்
நேசம் மெல்லச் சிணுங்கும்
நெஞ்சம் சிலிர்த்து வியர்க்கும்!
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!