About Me

2012/06/07

ஊடலேனோ



தொலைவில் !
வானைத் தொட்டு விடும் மேகங்களாய்
உனை எனுள் நிரப்ப
உயிரேந்திக் காத்திருக்கின்றேன் நிதமும்!

உன் ஞாபகங்களால் நெய்யப்பட்ட
என் மனக்குடியிருப்பு  
உன் நிழலின்றி பாழடைந்துதான்
போனது பல நாட்களாய் !

மெலிதான கடலோசையில்
புரண்டெழும் மணற்றரையாய்- மங்கையென்
விழிகளும் ஆர்ப்பரிக்கின்றன
கண்ணீரைச் சுமந்தபடி !

வெந்நீருள் சாமரம் வீசி- என்
செந்நீருள் இன்னல் நிரப்பி- இன்னும்
வந்தமரா வசந்தமாய்  நீ
எனை அவஸ்தையில் வாட்டுவதுமேனோ!

தென்றல் சிறகாடையில் - தம்
தேகம் உலர்த்தும் சின்னஞ்சிட்டாய் 
உன்னுள் என் மேனி துவைக்க
உருகித் துடிக்கின்றேன் வெம்மையோடு!

கால் புதையும் வெண்மணலில்- என்
கால் சீண்டும் சிறு நண்டாய் 
உன் குறும்பில் நானும் நொறுங்க
கண்ணா காத்திருக்கின்றேன்  கனநாளாய்!

எதிர்பார்ப்பில் விழிகளைச் செருகி
எட்டுத் திக்கும் பார்வை பாய்ச்சி
வெட்டவெளியின் வெறுமைக்குள்ளும் - இந்த
கட்டிளமை உன்னிழல்தான் தேடிக்கிடக்கும்!

பாதச்சுவட்டில் மோதும் கற்கள் கூட
உந்தன் பெயரை உச்சரித்தே கிடக்கும்!!
மலரை மோதும் வண்டுகள் கூட - என்
நெஞ்சிலூர்ந்து உன் ஞாபகங்கள் சுவைக்கும் !

காற்றில் கலையும் கருங்கூந்தல்
காதல் கொண்டு தவித்து மாளும் !- அது
சாதலில் வீழ்ந்திட துடிக்குமெந்தன்
சரித்திரம் நீயென சாட்சியும் பகரும்!

என் ஆறடி தேகம் உந்தன் தேசம்- என்
பார்வைப்புலத்தில் உந்தன் விம்பம்!- நீ
இன்னல் தந்து மறைந்ததுமேனோ
இன்னும் உன்னுள் ஊடல்தானோ!


ஜன்ஸி கபூர் 



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!