About Me

2012/06/05

பிறப்பிட நிழலிலே



90.....ஒக்டோபர்....30 !

இனவாதச் சுனாமியில் - எம்
சுகமழிக்கப்பட்ட நாள் !
அந்த இரண்டு மணி.........
எம் மூச்சுப்பூக்களின்
பேச்சையறுத்த தீக்கணங்கள்!

எம் இயல்பு வாழ்வும்
வனப்புக்களும்
வல்லுருக்களின்
செந்நீர்த் தேசத்தின் குடியிருப்பாய்
உரு மாறியதில்
தவிப்புக்களும் ஏக்கங்களும்
தாவிக்கொண்டன
அகதி வாழ்வுக்குள் !

பிரமாண்டமான தேசத்தில்
எம் பிறப்பிடம் பிடுங்கி
நாடியறுத்த - அந்த
ஆயுதக்கரங்கள்
உறிஞ்சிக் கொண்டன- எம்
பாரம்பரியங்களை!

கள்ளிப்பால் தந்து
முள்வேலிக்குள்
தள்ளிவிட்ட - இனச்
சுத்திகரிப்பின் வேரூன்றலில்
மனசும்
மரத்துப் போனது!
சேமிப்போ விழிநீரானது!

அந்தரித்த அந்த அகதிப்
பொழுதுகளின்
ஞாபகங்கள் இன்னும்
பிரமிட்டுக்களாய்
பிரமிப்புக் காட்டும்
சாகாவரம் பெற்றவை!

சிலர் வரைந்த
தீர்ப்புக்களால்...........
வெட்டவெளியும்
சுட்டெரிக்கும் வெயிலும்
கொட்டும் மழையும்
ஒட்டியுலர்ந்த தேகமும் - எம்
பொழுதுகளின் விதியாய்
பிரகடனமானது!

நிவாரண செலவளிப்புக்களிலும்
நிழல் வெளிகளிலும்
நிதர்சனமான- எம்
காத்திருப்புக்களின்
வேரூன்றல்கள் - இன்னும்
மௌனித்துத்தான்
கிடக்கின்றன- மீள
முடியாத சோகத்தில்!

சொந்தங்கள் தொலைவாக
சுற்றம் வெறும் செய்தியாக
வார்க்கப்பட்ட - எம்
வாழ்வின் வசந்தங்கள்
இன்னும் மயானவெளிகளில்
சயனித்துக் கொண்டுதானிருக்கின்றன!

பள்ளிகளும்
பள்ளிவாசல்களும்
வாழ்ந்த மனைகளும்
வாழ்க்கை தந்த மரபணுக்களும்
மடியேந்தி.....
காத்துக்கிடந்தோம் - எம்
வெளிகளைத் தொட்டுநிற்க!

சீறிப்பாயும் ஷெல்கள்
செந்நீர் தேடும் சன்னங்கள்
வட்டமிடும் தும்பிகள்
மிரட்டும் யந்திரப் பறவைகள்
காவு கொள்ளா- எம்முயிரை
ஏப்பமிட்ட பயங்கரவாதம்
இன்று..........
மரணித்த பொழுதுகளில்
மனமேனோ துடிக்கின்றது
மீளத் தாயக நிழல் சேர!

நினைவகத்தின் கருவறையில்
அப்பிக் கொண்ட அவலங்களை
அறுத்தெறிந்து.........
வேரூன்றும் கணங்களுக்காய்
வாழ்வின்னும்
தனித்துத்தான் கிடக்கின்றது!

வடுக்களின் மிரட்டலில்
தடுமாறிய
நேற்றைய பொழுதுகள்......
ரணம் தந்த கண்ணீர்
இன்று.........
ஆவியாக- மீண்டும்
செதுக்குகின்றோம்
பிறப்பிடக் கனவுகளை!

கறைபடிந்த அவலங்கள்
கண்ணீர்த் திரவங்கள்
யுத்தத்தின் எச்சங்கள்
கரைந்த எம் பொழுதுகளில்
விடியல் வரைய
விருப்போடு நகர்கின்றோம்
எம் இருப்பிடம் தேடி!

உருக்குலைந்த மனைகள்
உலர்ந்த பொருளாதாரம்
இன்னும் எட்டிப் பார்க்கா
நிவாரணம் - இருந்தும்
சிதைவுகளைப்
பொறுக்கியெடுத்து
மீளச் சேகரிக்கின்றோம்
எம்மை- எம்
தெருக்களில் மீண்டும்!

அன்று அந்நியமான - எம்
தேசத்தின் மூலை முடுக்குகளில்
இன்றோ.......
தடம் பதித்து தாவுகின்றோம் !
புதுக் குழந்தையாய்
புளாங்கிதத்துடன் !

சதை மேனிகளின்
சமாதியில்.............
சங்கமமான சமாதானம்.......
கைகுலுக்கும் விடியலுக்காய்
கரமேந்தி உருகுகின்றோம்
படைத்த வல்லோனிடம் !

இன்று தனித்துவமிழக்கும் - எம்
தெருக்கள்- நாளை
சுவடுகள் மறக்கும் பாதைகள்!
இழப்புக்கள் தொடராமல்
மீண்டும் விதையாவோம்
எம் தேசமதில் !

கடல் கடந்த பயணங்கள்
புரியாத பாஷைகள்
கறை படிந்த அந்தரிப்புக்கள்
முரசறையும் துன்பங்கள்
போதுமிவையினி!

கல்வெட்டான துரோகங்களின்
முணுப்புக்களை
கத்தரித்த தொடர்வோம்
புதுப்பயணம் - எம்
வாழ்வை
கௌரவிக்கவாவது !

கறைபடிந்த சுவடுகளை
காலம் கழுவட்டும்- இனி
விடியலின் திசைக்குள் - மட்டும்
மடி தேடுவோம் - இந்த
இருபத்தோராம் ஆண்டு
நிறைவுகளிலாவது!



(யாழ் முஸ்லிம்களின் 21வது ஆண்டு நிறைவையொட்டி (2011.10.31)
யாழ் முஸ்லீம் இணையத்தளம் (www.Jaffna Muslim) வெளியிட்ட 'வேர் அறுதலின் வலி' எனும் கவிதை நூல் தொகுப்பில் இடம்பெற்ற எனது கவிதையிது!)


















4 comments:

  1. Very effective and powerful rendering of an agonoized soul, one among many that suffered because of some inhuman beasts.

    ReplyDelete
  2. வரிகளில் தெறிக்கும் வலி உணர்வைப் பிழிகிறது. அருமையான கவிதை அக்கா.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எத்தனை வருடங்கள் உதிர்ந்தாலும் அந்த அகதி வாழ்வின் வலியும், அந்தரிப்பும், அந்தஸ்தற்ற வாழ்வும் மனதைப் பிழிந்து கண்ணீரால் கன்னத்தை நனைக்கின்றது அமல்.........!
      உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி !

      Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!