2012/06/09
போ நீ போ
பூக்களாய் உதிரும் விண்மீன் பொறுக்கி
பூமிக்குள் சரமாக்கும் கவிதைக் காரா !
பல கவியுத்தத்தில் புரண்டெழுந்து
இதழ் முத்தமாய் நொருங்கிக் கிடந்தாய் என்னுள்!
அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்
அழகாய்ச் சொன்னாய் வலி தந்தபடி!
நம் மெட்டுக்களெல்லாம் - உன்
மொட்டைமாடியிலல்லவா சிதறிக்கிடக்கின்றன!
நான் சிரித்ததாய் ஞாபகமில்லை
சில்லறைக் குறும்புகளால் நீயென்னைச் சீண்டும் வரை!
யாருக்காகவோ நீ புனையும் கவிகளில்
ஆணவமாய் நானே உட்கார்வதாய் பிரமிப்பு!
நடு இரவின் பனி சொட்டுகையில்
கூதல் காற்றாய் எனை இறுக்கும் உன் வில்லத்தனம்!
நீயென்னைக் கடந்து செல்கையில்
வீம்பாய் பிடித்திழுக்கும் உன் நினைவுகள் !
உன் கவிமயக்கங்கள் கண்டு
நிலா மெல்லிறங்கி கிறங்கிக் கிடப்பாள் என்னுள்!
நம் நள்ளிரவுக் காதலைக் கிள்ளியெறியும்
கொடுங்கோலனா நீ வியப்புக்குறியென்னுள்!
நாம் காகிதமல்ல நினைத்தவுடன் கசக்கி வீச
புரிகிறது அன்பால் நெய்யப்பட்ட அழகுவேலி!
உனக்கு கொடுக்க என்னிடமினி எதுவுமேயில்லை
நீ தந்த என் கண்ணீரைத் தவிர!
அஞ்சுகின்றேன் கூடல் தந்த சிறு மோதல்
தொலைத்திடுமோ என் விலாசமதை உன்னுள்!
எந்தன் நெஞ்சின் வலிதனை நீ உணர்ந்தால்
பல நடு இரவினிலே புலம்ப வைப்பாயா
என்னுணர்வுகளை மிதித்து கனவுகளை அறுத்து
உன்னால் பயணிக்க முடிகிறதா!
போ நீ போ !
உன்னிலுள்ள என்னைத் தந்து விட்டு!
ஜன்ஸி கபூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!