வழி மாறும் பயணம்மரங்களை உலுக்கியபடி பலத்த காற்று வீசிக் கொண்டிருக்க நானும் வீட்டின் முற்றத்துக்குள் இறங்கிக் கொண்டிருக்கின்றேன். ஏனோ நான் குடியிருக்கும் பகுதியில் சிறுசலசலப்பு சில மணி நேரமாய் தன் அசைவைக் காட்டிக் கொண்டிருந்தது. புது மனிதமுகங்கள் எதையோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அக் கூட்டத்தினிடையே ஏற்பட்ட சிறு இடைவெளிகளினூடாக என் பார்வையை அங்கே பதிக்கின்றேன்.

அங்கே...........!

இளம் காதல் ஜோடியொன்று குற்றவாளிகளாக மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தினரின் கேலி, சோக, அனுதாபப் பார்வைகளை அவர்கள் உள்வாங்கி வெம்மிக் கொண்டிருப்பது புரிகிறது.

அவர்கள் நான் குடியிருக்கும் பகுதியில் இருப்பிடம் தேடி வந்த காதல் அனாதைகள். அவள் இருபத்தைந்துக்குள் இருப்பாள். சற்று கரிய நிறம். அழகென்று சொல்லாவிட்டாலும் கூட ஏதோ கவர்ச்சியான வறுமைப்பட்ட தேகத்தின் சொந்தக்காரியவள். அவன் அவளை விட ஓரிரு வயது இளையவனாக இருக்க வேண்டும். அழகானவன். காதலுக்கு அழகு முக்கியமல்ல...அவர்கள் அதனை நிருபித்துக் கொண்டிருந்தார்கள்..

அந்தக் கூட்டத்தைப் பொருட்படுத்தாமல் அவன் அவளை அணைத்துக் கொண்டிருந்தான். அந்த அணைப்பின் அன்பில் அவள் தன் சோகங்களைக் கழற்றட்டும் எனும் எதிர்பார்ப்போ புரியவில்லை.

மனமோ அவர்களுடன் பேச துடித்தது. இருந்தும் எனக்குள் தடைவேலியாய் தந்தையின் குரல்........

" அவங்களோட பேச்சு வைச்சுக் கொள்ள வேணாம், அவங்க நல்லமில்ல..."

நான் அவர்களுடன் பேச வேண்டுமென்று நினைத்த என் மனவோட்டத்தை தந்தை எப்படியறிந்தார்.... தந்தையின் அதிகாரக்குரல் என்னை மிரட்டவே, எனக்குள் ஒடுங்கிக் கொள்கின்றேன்.

இத்தனைக்கும் அவர்கள் செய்த தவறென்ன........காதல்!

ஜாதி ,பேதம் ,அந்தஸ்து ,மொழி, மதம் எனும் எல்லைகளைத் துறந்து மனம் இணைந்தது ஒருவேளை தவறோ...

 அவள் முஸ்லிம் , அவனோ பெரும்பான்மையைச் சேர்ந்தவன். பௌத்தன். இராணுவ வீரன். அவர்கள் மாத்தளைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அந்தக் காதல் பிணைப்பால் இருவருமே தம் பெற்றோரை இழந்து அனாதையாக இருப்பிடம் தேடி ஊர் ஊராய் அலைந்து கடைசியில் நான் குடியிருக்கும் பகுதிக்குள் வந்துள்ளார்கள். ஆறு மாதமாக அலையும் இந்த நாடோடி வாழ்க்கைக்குள் அவள் தன் வயிற்றை மட்டுமே நிரப்பிக் கொண்டிருந்தாள். ஊதிப் பெருத்த வயிறு அவளின் தாய்மை நிலையை ஊருக்கு பறைசாட்டிக் கொண்டிருந்தது.

இன்னும் ஓரிரு மாதங்களில் அவர்களின் தொகை மூன்றாகும் போது அந்த வாழ்க்கைச் சுமையில் வெற்றி காண்பார்களா.....மாற்று உடுப்போ அவர்கள் கையில் ஐந்து சதமோ இன்றி வறுமைப்பட்டுக் கிடக்கும் இந்த வாழ்க்கை செழிக்குமா....... மனசேனோ வலித்தது...

அவன் இஸ்லாம் மதத்தை ஏற்க ஆயத்தமாக இருந்தான். ஆனால் எம் மதத்துள் ஓர் வேற்று மத ஆண் உள்நுழைவதற்கான முதல் தகுதி 'கத்னா' எனப்படும் சுன்னத் செய்வதிலேயே தங்கியுள்ளது. ஏனோ அவன் இராணுவ வீரனாக இருப்பதால் தன் கடமை நிமித்தம் அந்தச் சடங்கை தள்ளிக் கொண்டே வந்ததில் அவர்களுக்கு இன்னும் திருமணம் நடைபெறாமலே அவள் அவன் வாரிசை சுமந்து நிற்கின்றாள். அவள் கர்ப்பமாக இருப்பதால் அவளுக்கு வழங்கப்படும் மதத் தண்டனையை நிறைவேற்றி திருமணத்தை எழுதமுடியாத அங்கலாயிப்பில் காலம் சிலிர்த்தது.

ஏனோ எம்மவர்களின் பார்வையில் அந்தச் சிங்களப் பெடியனே குற்றவாளி...எல்லோரும் அவன் மீது குற்றப் பத்திரிகை வாசிக்க,... என் மனமோ அவன் மீதான அனுதாபத்தில் கரைந்தது. அவன் நினைத்தால் அவளை தன் மதத்துக்குள் மத மாற்றம் செய்திருக்க முடியும். ஏதோ வெறும் பாலியல் ஈர்ப்பில் காதல் போதையில் உளறுபவர்கள் திருமணம் என்றவுடன் விழிப்படைந்து புறமுதுகு காட்டியோடும் போது, தான் காதலித்தவளுக்காக தன் இன,சன உறவுகளை அறுத்தெறிந்து விட்டு அவளுக்காக காத்திருக்கும் அந்த வாலிபன் என்னுள் உயர்ந்துதான் நின்றான்.

நாளை மறுநாள் அவன் தன் இராணுவப் பணிக் கடமைக்குத் திரும்ப வேண்டும்.

 அவளை அவன் கடமைமுகாமிற்கு அழைத்துச் செல்ல முடியாதே
அவள் கதி!அவளைப் பொறுப்பெடுக்க இரு சமூகத்திலும் யாரும் முன்வராத நிலையில் அவள் எதிர்காலம்............?
அவளுக்கு அவன்........அவனுக்கு அவள்.............அவர்களுக்கு அவர்கள் பிள்ளை.
இந்த வாழ்வை அவர்கள் சந்தோஷமாக தீர்மானித்து விட்டார்கள்...ஆனால் யதார்த்த வாழ்வில் வாழ்வைத் தீர்மானிக்கும் முக்கிய காரணி பணமாச்சே!

இவர்கள் அவசரப்பட்டு தங்கள் வாழ்வை வீணடித்து விட்டார்களா அல்லது மதம் துறந்து காதலித்தது தவறா...............நாளை இவர்களால் இந்த வாழ்க்கை யுத்தத்தில் ஜெயிக்க முடியுமா? அல்லது சமுகங்களின் சாபங்களால் ஒழுக்கங்கெட்டவர்கள் எனும் களங்கத்தை தங்கள் சந்ததிக்கு கடத்தப் போகின்றார்களா ..அல்லது நாளை இந்தக் காதல் போதை கலைந்து அவர்கள் தங்கள் உறவுகளைத் தேட ஆரம்பித்து இல்வாழ்வை சலிப்புக்களால் நிரப்புவார்களா...

என்னுள் பல வினாக்கள் தொக்கிக் கிடக்க அவர்களுக்காக ஒரு துளி கண்ணீர் என் கன்னத்தை நனைக்கின்றது....

இந்தச் சின்ன வயதில் ஆயிரங் கனவுகளை மனதில் தேக்கி மற்றவர்கள் போல் அவர்களும் வாழ நினைக்கின்ற ஆசைகளை விதி அறுத்தெறிந்ததால் இன்று அடுத்தவர் பார்வைக்குள் வேடிக்கைப் பொருளாக மாறி வெந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களின் வயது நிகழ்காலத்தை மட்டுமே தீர்மானிக்கக்கூடியது எதிர்காலத்தை வழிநடத்தும் மனோபலம் வர இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும். அதுவரை வாழ்வை எப்படி எதிர்கொள்ளப் போகின்றார்கள்.அவர்கள் மீது அனுதாபப்படுவோர் தயவில் இன்னும் எத்தனை நாட்கள் தான் அவர்கள் வாழ்க்கை நகரப்போகின்றது.........வாழ்க்கைப் புதிருக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் அந்தச் சிறு புள்ளிக்காக என் மனம் கசியத் தொடங்கியது.

இறைவா............!

அவர்கள் குற்றங்களை மன்னித்து அவர்கள் வாழ வழி காட்டு எனும் பிரார்த்தனையை மானசீகமாக வழங்கத்தான் என்னால் முடிகிறது...
ஒவ்வொருவர் வாழ்க்கையும் மற்றவர்களுக்குப் பாடங்கள்....
இதையுணர்ந்தால் எம் அனுபவங்கள் சிறந்ததாக மாற்றப்படும்...

அவர்களின் இந்த சுதந்திரமான வாழ்க்கைத் தெரிவிற்காக நாம் இனி சபிப்பதால் பயனென்ன.........திசை தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நதிகளை வழிப்படுத்துங்கள்..இல்லையென்றால் நம் மதத்துள் இன்று அடங்கிக் கிடக்கத் துடிக்கும் துடிப்புக்கள் நாளை விரக்தியால் வேறு திசை நோக்கி நகர்த்தப்படலாம்....!

இவ்வாறான சம்பவங்களின் போது உணர்வுபூர்வமாக ஆத்திரப்படுவதை விட, அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டும். சகல தடைகளையும் உடைத்தெறியும் மகா சக்தி அன்பு.......அந்த நதியை அணைக கட்ட முடியாது. ஆனால் நதி பிராவகிக்க முன்னர் முளையிலேயே கிள்ளியெறியலாம். ...........!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை