வலிவழியேதுமுண்டோ - பல்
வலி விலகியோட!
முள்வேலிப் படுக்கையிலின்று
தொல்லைகளோடு நான்!

முரசுக்குள் ஊசி நுழைத்து
வேரறுத்த பின்புமேனோ
வதைக்குதிந்த வலி.........
சதை கிழிக்கும் கதறலோடு!

வீக்கம் கண்ட கன்னங்கள்
சோகத்தில் தோய்ந்து கிடக்கும்!
வலி முணுமுணுப்புக்கள்
வேலி சாத்தும் உணர்வோரம்!

குருதி வாடையால்..........
குசலம் விசாரிக்கும் மூச்சுக்காற்றும்
மெல்ல செவி நரம்பைச் சீண்டி
கள்ளத்தனமாய் முறைத்துக் கிடக்கும்!

பற் சபாவின் ஆட்குறைப்பால்
பரிதவிக்கும் நாவும்.............
உணவு மறுப்புப் போராட்டத்தில்
களமிறங்கி அதிர்ந்து கிடக்கும்!

விறைத்துப் போன மனசோ
மௌனிக்கச் செய்யும் வார்த்தைகளை!
தியானித்துக் கிடக்கும் கனவுகள்
நெருப்பில் வெந்து மடியும்!

நலமிழந்த என் தேகம்
அழகிழந்து கதறும் பலமாய்!
களையிழந்த புன்னகை யாவும்
மிரளும் வலியின் வில்லத்தனத்தில்!

இயல்பு வாழ்வை நச்சரித்து...............
பயணப்பாதையை அச்சுறுத்தி...........
தடம் பதிக்கும் பல்வலி - என்னை
உயிரறுக்கும் ஆட்கொல்லி !!No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை