சூரியனும் வெள்ளியும் சந்தித்தால்இப் பிரபஞ்சம் பற்றியும் இப் பூமியின் இயக்கம் பற்றியும் அழகாய் கற்றுத்தரும் அறிவியலின் இயக்கச சாவியே விஞ்ஞானம். இந்த விஞ்ஞானத்தின் பரந்த பகுத்தறிவுக்குள்ளடங்கும் தேடல் சுவாரஸியமானது.......அந்த வகையில் இன்று 2012 ஜூன் 06 ந் திகதி விண்வெளியில் சூரியனும் வெள்ளிக்கிரகமும் சந்தித்துக் கொண்ட காட்சியும் பல விழிகளை நிறைத்திருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

சுக்கிரன், விடிவெள்ளி, மாலைவெள்ளி என அழைக்கப்படும் வெள்ளிக் கிரகத்தின் வளி மண்டலம் நம் பூமியின் வளிமண்டலத்தை விட 93 மடங்கு அடர்த்தியானது. அதில் ஏறக்குறைய 96 சதவீதம் காபனீரொட்சைட்டு வாயு நிறைந்திருப்பதால் வெப்பநிலையின் வீச்சும் 460 பாகை செல்சியஸை விட அதிகமானதாகவே காணப்படும். மிகச் சிறிய கோளாகிய சூரியனுக்கு அருகிலமைந்துள்ள புதன் கிரகத்தின் வெப்பநிலையை விட வெள்ளியின் வெப்பநிலை 60 பாகை அதிகமாகும்.

வெள்ளிக்கிரகம் தன்னை ஒருமுறை சுற்றி வர 243 நாட்களும் சூரியனைச் சுற்றி வர 225 நாட்களும் எடுக்கின்றன. நாம் 2 வருடங்களைக் கழிக்கும் போது வெள்ளிக் கிரகம் 3 நாட் பயணத்தில் மாத்திரமே அலைக்கழிந்திருக்கும். வெள்ளியின் அச்சு 177 பாகை சரிவில் இருப்பதனால் அது தலைகீழாகச் சுற்றும். எனவே சூரியன் மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும்.

வெள்ளி சூரியனைக் கடந்து செல்லும் இந்த நிகழ்வை வெள்ளி ட்ரான்சிட் நகர்வு என்பார்கள். வெள்ளிக்கிரகமானது சூரியனுக்கும் பூமிக்குமிடையே நேர்கோட்டில் வரும் இந்நிகழ்வானது 105 வருடங்களுக்கு ஒருமுறையே நிகழும். இதனை நேரில் (நேரடியாக அல்ல....கறுப்புக் கண்ணாடி அல்லது தொலைநோக்கி மூலம் மிகப் பாதுகாப்பான முறையில்) இன்று பார்த்தவர்கள் அதிஷ்டசாலிகளே! ஏனெனில் மீண்டும் இது தோன்றுவது 2117 டிசம்பர் 6 ஆக இருக்கும்.

வெள்ளி தன்னை விட 100 மடங்கான சூரியனைக் கடந்து செல்லும் போது சிறு புள்ளி போல் தோற்றமளிக்கும்.இவ்வாறு கடந்து செல்ல சுமார் 7 மணித்தியாலங்கள் எடுக்கும். இதனை வெள்ளி இடைநகர்வு, வெள்ளி நகர்வு, வெள்ளிக் கடத்தல், வெள்ளி மறைப்பு, வெள்ளி உலா எனும் பல பெயர்களால் அழைக்கின்றார்கள்..இந்த வெள்ளி உலாவுக்கான நேரம் காலை 6 மணி தொடக்கம் 10 .22 மணி வரையாகும். எனினும் இலங்கை மக்கள் சுமார் 7 மணியளவில் தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருக்கும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்த அரிய நிகழ்வை மக்கள் பார்வையிட திருனோணமலை , கொழும்பு மாவட்டங்களில் விசேட உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தன.
அத்துடன் இதன் நகர்வை நேரடியாக இணையத்தள முகவரியினூடாக கண்டு களிக்கவும் வசதி செய்தனர்.. இதனடிப்படையில் கொழும்பு பல்கலைக்கழக வான சாஸ்திர சங்கத்தின் இணையத்தளமான www.uocmas.info , மற்றும் ஆதர்சி கிளார்க் நிலைய இணையத்தளமான www.accimt.ac.lk லும் பார்வையிட வசதி யளிக்கப்பட்டிருந்தது

இன்று இவ் அரிய நிகழ்வின் நகர்வை கண்டு வியந்த அதிஷ்டம் பெற்றவரா நீங்கள்..................?? வாழ்த்துக்கள் !!
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை