வருவாரோ..........
தாயே..............!

மனசேனோ இன்று நெருடலில்
வெம்பிக் கிடக்கின்றது
பல மணியாய்!

இறுகிப் போன உணர்வுகளின்
ஓலத்தில்............
ஒளிந்து கொண்ட சோகங்கள்- என்
விழியைப் பிய்த்தெறிகின்றது!

தொலைவில் அலைந்து கொண்டிருக்கும்
பனிப் புகாரில் ......
உங்கள் முகம் கலைந்து கொண்டிருக்கின்றது
சுய இருப்பைத் தொலைத்தபடியே!

கண்ணீரில் கரையும் கன்னங்கள்
 ரணமாகி .................என்னுள்
சிவந்து மிரட்டுகிறது
செந்தணல் குவியலாய்!

நம்முள் எழுதப்பட்ட .நீண்டகால...........
தொப்புள் ஒப்பந்தம்
காலாவதியாவதில் ஏன் உடன்பாடு கண்டீர்
அன்னையே!

மண்ணோரமென்னைச் செதுக்கியெடுத்து
சுவாசத்துள் சிறகும் நெய்தும்.........'
பாசம் தந்த என் அகிலமே- நீங்கள்
பேச மறந்ததேனோ நிரந்தரமாய்!

வெள்ளிப் பாலூட்டி- என்
வேதனை பல கிள்ளியெறிந்து
சாதனைகள் கண்டு புன்னகையுதிர்த்த
அன்னையின்று அருகிலில்லையே
என் செய்வேன்!

வெளியோரம் சுவடு பதித்து
வழிகாட்டி பயணம் தந்து - என்
மனவெளிக்குள் அன்பும் தந்த
அன்னையின்று எங்கு சென்றாரோ!

இதயமென்ன இரும்பரனோ..........
துருப்பிடித்து இற்றுப் போக!- என்
அருகாமை தொலைத்த உங்களுக்காய்
காத்திருக்கின்றேன் சிறுபிள்ளையாய் !

அன்பால் வேலி நெய்து - என்
அகிலமாய் பிரகடனம் தந்து............
புன்னகைத் தேசத்துள் எனை நிரப்பி
பரிவாய் உருகி நின்ற அன்னையே !

இன்றேனோ உங்கள் பிரிவு கண்டு................
சிதைந்து வீழ்கின்றேன் மண்ணில்
அரவணைப்பார் யாருமின்றி - என்
ஆயுள் முழுதும் விரக்தி சுமந்தபடி!(06.06.2012 என் முகநூல் உடன் பிறவாத தம்பியின் அன்னையின்று காலமான செய்தி என்னுள் கண்ணீரை மட்டுமல்ல, இக் கவிதையையும் வார்த்து நின்றது. முகம் தேடி பழகத்துடிக்கும் பலருள் உள் அன்பின் ஓசைக்காய் மட்டும் என் நேசத்துள் நெருங்கிக்கிடக்கும் அந்தத் தம்பியை ஆறுதல் படுத்த வழியின்றி, மௌனிப்புக்களுடன் கவிதைகளை சமர்ப்பிக்கின்றேன் என் கண்ணீர் அஞ்சலியாய்! )2 comments:

  1. உணர்வுகளின் அழகிய வெளிப்பாடு... அருமை ஜான்சி

    ReplyDelete
  2. நன்றி உதயா...மனதில் சோகங்கள் பீறிடும் போது உணர்வுகளும் கட்டுக்கோப்பின்றி நம்முள் புரளுகின்றது !

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை