உன்னில் நான் !


வேடிக்கையான நம் வார்த்தைகள்
வேள்வியானதில்.........
முக்காடிட்ட மனசோ
மூச்சு மறந்து போனது!

உன் எண்ணப்பதிவுகள் - என்
முகப்பேட்டில்
வெறுமையாய் முறைத்துக் கிடக்க...........
மனமோ..........
கண்ணீர்ச்சுனாமியில்
காவு கொள்ளப்பட்டது!

உன் திசை தேடித் தேடியே
உருக்குலைந்த என் நிழற்சுவடுகள்........
இளைப்பாற மனமின்றி
இன்னும் தவமிருக்கின்றது
உனக்காக!

அறிவாயா............
நீயில்லாப் பொழுதுகளில்
மெளனித்துக் கிடக்கும் என்
வார்த்தைகள்............
தத்தெடுத்துக் கிடக்கின்றன
வெறுமையை ............மானசீகமாய்!

என் ஞாபகச் செண்டில்
முடிந்து வைத்தவுன்னை...........
மடி சுமந்து காக்கின்றேன்
உன் தோழியாய் உருமாறி!

எனக்கான உன் கவிவிரிப்புக்கள்
தஞ்சமாய் என்னுள் சுருண்டிட...........
கண்டு கொண்டேன் - உன்
குறும்புவிழியில் என்னையே!

நீர்க்குமிழி வாழ்வுக்குள்ளும்
பெரும் வேராய் பற்றிக்கொண்டாய்.........
உன் வார்த்தைகளில் காதல் பூசி
நெஞ்சுக்குள்ளும் குந்திக்கொண்டாய்!

என் இரசச்சுவர் பிம்பமதில்
உன்னையே வார்த்து நின்றாய்..........
என் புன்னகை தேசத்திலும்
நீயே அரணும் அமைத்துக் கொண்டாய்!

சேகரித்துக் கிடக்குமுன் ஞாபகங்கள்
என் தெருக்களில்- உன்
முகந்தேடி அலைவதிலேயே
இப்பொழுதெல்லாம்
காலம் கழிக்கின்றது!

உன் நினைவுப்படுக்கையில்
புரளும் என் மனசோரம்.............
சீண்டலின் முழுவுருவாய்
முகந் தந்தேதான்
தொலைவாகிப் போனாய்!

உன் வார்த்தைகளெல்லாம்
அதிர்வுகளாகி என்னுள் பேரம் பேச.........
நீ மட்டும் ஏனடா
தனித்துப் போனாய்!

நீயுன்றி மயானமாகும்
என் தேசம் மெய்ப்பட...............
உன் நேசம் தா..............
உனக்காக நான் வாழ
என்னுள் நீ வாழ!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை