About Me

2019/06/23

விருப்பம்

Image result for விருப்பம்

ஒரு விடயம் தேவை என்று எண்ணும் எண்ணமே விருப்பத்துக்கு வித்திடுவதாக உளவியல் மற்றும் சமூகவியல் நிபுணர்கள் கூறுகின்றார்கள்.  விருப்பம் என்பது மனதில் படிந்துள்ள ஆசைகளின் படிமம் ஆகும். உள்ளத்தின் எதிர்பார்ப்புக்கள்.  இதனை உள்ளத்தின் ஈர்ப்பு மையமாகமாகவும் கருதலாம். விருப்பம்  மனிதர்களுக்கிடையில் வேறுபடுவதால்தான் ஆசைகளின் அளவுகளும் வேறுபட்டு முரண்பாடுகள் தோன்றக் காரணமாகின்றன. ஆழ்மனதினை தொட்ட விருப்பங்கள் மாறுவதில்லை.  நம்மை தங்கி நிற்கும் மனதை போசிக்கக் கூடியது விருப்பு.  கால மாற்றத்தின் வேகத்திற்கு இது ஈடு கொடுக்கக் கூடியது.  

விருப்பு ஏற்படும் செயல்கள் நமக்குள் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. அந்த ஆர்வ நிலையானது செய்யும் செயல்களில் தொய்வு ஏற்படாமல் தடுக்கின்றன.  விருப்போடு செய்கின்ற செயல்களுக்கு சக்தி அதிகம். எனவே அவை மாற்றங்களைக் கொண்டு வரக்கூடியவை. மனித வாழ்வில் ஒவ்வொரு வயதுக் கட்டமைப்பிலும் விருப்பங்களின் தன்மை மாறுபடுகின்றன.

ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு பொருத்தமான ஒன்றை அடைய வேண்டும் என்ற உணர்வே விருப்பம் எனப்படுகிறது. உறவுகளில் ஏற்படுகின்ற விருப்பம் அன்பாக மாற்றப்படுகிறது. ஒன்றின் மீது ஏற்படும்  விருப்பத்தினால் மனம் முழுமையாக ஈர்க்கப்பட்டால் அவ்விருப்பின் எல்லையில் இருந்து விலகாமல் தன் விருப்பத்தை நிலை நாட்ட மனம் முழுமையாகப்   போராடும்.  

இன்று இந்த பூகோளத்தின் பல சவால்களுக்கும் மனிதன் தனது விருப்பினால் இயற்கையை வசியப்படுத்த எடுக்கும் முயற்சிகளே காரணமாக இருக்கின்றன. அளவுக்கதிகமான விருப்பு அழிவின் வாசற்படி  என்பதை பலர் காலம் கடந்தே உணர்கின்றார்கள். 

தேவைகளின் அடிப்படையில் இயற்கை பரிமாணம் அடைந்துள்ளது. ஒருவரின் தேவைகளை நாம் இனங்கண்டு நிறைவேற்றும்போது  அவர் நம் மீது விருப்பம் கொண்டிருப்பார். அவரின் பற்றுதல் அன்பாக மாறும். இதனால் இருவரின் உறவுகளும் உறுதியாகி  இறுக்கமான தொடர்பைப் பேணும்.

உணர்ச்சிமிகுந்த சுயநல நாட்டத்தின் காரணமாக ஏற்படும் விருப்பமானது பல திசை உறவுகளையும்  ஈர்த்து வைத்திருக்கின்றது. நமது மனம் பிடிக்காதவர் கள் எது சொன்னாலும் அவர்கள் கருத்துக்களை நாம் உள்வாங்கிக் கொள்வதில்லை.  முரண்பாடுகள் பிசைந்து   விலகிக் கொள்கின்றோம். காரணம் நமது மனம் விரும்பாத ஒன்றின் மீது ஆர்வமோ பற்றோ ஏற்படுவதில்லை. 

- Jancy Caffoor -
   23.06.2019


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!