About Me

2020/05/30

அனுபவப் பகிர்வு -1


'அம்மா .........அம்மா'

வாசலோரம் அந்த ஐயாவின் குரல் கேட்க கதவைத் திறந்தேன்.

அவருக்கு என் வாப்பாவின் வயதிருக்கும். முதுமையிலும் தான் உழைத்து வாழ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் இன்னும் உழைத்துக் கொண்டிருக்கின்றார். எமது வீட்டுக்கு அருகிலுள்ள சந்தையொன்றுக்கு தினமும் பழங்கள், மரக்கறிகள் கொண்டு சென்று விற்பார். இவை விற்காமல் மிஞ்சியிருந்தால் எமது வீட்டிற்கு கொண்டு வந்து தருவார். பொருளுக்காக இல்லாவிட்டாலும் அந்த வயோதிபத்தின் உழைப்புக்காக ஏதாவது வாங்குவோம்.

அன்றும் வந்திருந்தார்......................

சில எலுமிச்சம்பழங்களை எமக்கு விற்று அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டார். 

துருப்பிடித்த பழைய சைக்கிளின் முன்புறம் மரக்கறி மூட்டையைக் கட்டிக் கொண்டு வருவார். கால்களில் செருப்புக்கள் இருக்காது. சுட்டெரிக்கும் யாழ்ப்பாண வெயிலில்கூட சைக்கிளை உருட்டிக் கொண்டே வெறுங் காலுடன் செல்வார்.

அந்தக் காட்சி............

என்னுள் கசிவைக் கொடுக்க ஒரு நாள் "போடுங்கள் ஐயா" என்று புதிய செருப்புக்களை வாங்கிக் கொடுத்தேன்.

'வேண்டாம் புள்ள...............'

மறுத்தார். 

"செருப்பைப் போட்டா சைக்கிள் ஓட முடியாதும்மா."

 அவர் பக்க நியாயம் ஜெயித்தது.

அந்த ஐயாவை எனக்கு ஐந்து வருடங்களாகத் தெரியும்.   வாப்பா அவரின் வாடிக்கையாளர். எந்நாளும் அவரிடம் வாப்பா பழங்கள் வாங்குவார். சில நேரங்களில் அவரின் இந்த தினசரி விற்பனையால் எமக்கு கோபம் வரும்.   அதிக விலைக்கு விற்கின்றாரோ என நினைப்பதுமுண்டு. சில நேரங்களில் வாப்பா அறியாமலே எதுவும் வேண்டாமென்று அவரை விரட்டி விடுவேன். அந்த நாட்களில் அந்த ஐயா மீது எனக்கு கோபம் கொப்பளித்து வரும். அடக்கிக் கொள்வேன்.

காலவோட்டத்தில் எங்கள் வாப்பா மௌத்தாகிய பின்னர் அந்த ஐயா வீட்டுக்கு வந்தார். வாப்பா மரணித்த செய்தி அவரைத் துன்பப்படுத்தியிருக்க வேண்டும். அழுதார். நிறைய அழுதார். வாப்பாமீது அவர் வைத்திருந்த பாசத்தை அன்று நான் கண்டு கொண்டேன். அவரின் கண்ணீர் எங்களை ஈரப்படுத்தி அவர் மீதான கோபத்தையும் கரைத்தது.

அன்றிலிருந்து அவரைக் கண்டால் வாப்பா நினைவுக்கு வருவார். வாப்பாவின் நினைவாக ஏதாவது பழங்களை ஐயாவிடம் வாங்குவோம். புணத்தை கையில் வாங்கும்போது 'சரி புள்ள' புன்னகைப்பார். 

தள்ளாடும் நடை ............. முதுமையில்கூட அவரின் புன்னகையில் கபடமற்ற பாசம் தெரிந்தது.

வைகாசி 2020 ...... 

கொரொனா ஊரடங்கு நீங்கி அன்றும் வீட்டுக்கு வந்திருந்தார். வியாபாரியாக அல்ல. அறிந்த மனிதராக!

'கனநாள் வரல புள்ள............அதான் உங்கள எல்லாம் பாத்துட்டு போகலாமென்று வந்தேன். சுகமாக இருக்கிறீங்களா'

கேட்டார். அதே மாறாத புன்னகை! இன்னும் அவரிடம் அப்பிக்கிடந்தது.

'ஓம் ஐயா' 

நலங்களைப் பரிமாற்றிக் கொண்டோம். விடைபெற்றார்.

'நில்லுங்கள் ஐயா' 

வீட்டுக்குள் சென்று என்னாலான சிறு பணத் தொகையை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை எதிர்பார்க்கவில்லைதான். ஆனாலும் அவரின் கஷ்டம் துடைக்க சிறு பங்களிப்பாவது செய்ய நினைத்தேன். வாங்கிக் கொண்டார் மகிழ்ச்சியுடன்....

'வாரன் புள்ள'

எல்லோரிடமும் விடைபெற்றார். அவரின் அந்தப் புன்னகை மட்டும் மாறவேயில்லை.ஒளிர்ந்து கொண்டே இருந்தது.

மனிதர்களின் அன்பைச் சம்பாதிப்பதே மிகச்சிறந்த செல்வம்.   திருப்தியில் மனதை நிரம்பிக் கொண்டேன்.

- ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!