About Me

2020/05/30

காலங்கள் மாறும்

எல்லாவற்றையும் நாம் ஞாபகத்திலிருத்துவதில்லை. மறந்து விட்டதாகத்தான் நினைக்கின்றோம். ஆனாலும் அந்த மறதிகள் சிற்சில சந்தர்ப்பங்களால் உடைகின்றன............. உயிர்ப்படைகின்றன.......புதிய நிகழ்வுகள் போல மீள நமக்குள் நிழலாடுகின்றன....

2015 ......... 

நான் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் பெண்கள் கல்லூரிக்கு அதிபராகப் பொறுப்பேற்றுச் சென்ற ஆரம்ப காலம். சோனகதெரு யுத்த வடுக்களால் தன் உருக்களை இழந்திருந்தது. சொந்த ஊரிலேயே அந்நியமான பிரம்மை. மகிழ்வும் கவலையும் கலந்த கலவையாய் நான். 

அந்நாட்களில் சவால்களும் வலிகளுமே நாம் அதிகம் உணர்ந்த மொழியாக இருந்தது. துன்பங்களைத்தான் அதிகம் பரிமாறினோம். சொத்து இழப்புக்களை மீண்டும் ஈடு செய்ய நிறைய பொருளாதார பலம் தேவைப்பட்டது. வெளி உதவிகளற்ற நிலையில் மனதிலும், வாழ்விலும் கௌரவமான வறுமை வாழ்வைப் பின்னடித்துக் கொண்டிருந்தது. பிறப்பிடமே அகதி வலியோடு வாழ வைத்துக் கொண்டிருந்த காலமது.

வளங்கள் எதுவுமற்ற நிலையில் எனது தலைமையின்கீழ் பாடசாலை மீள ஆரம்பித்தல் என்பது கடினமான சவாலானது. அபிவிருத்தி காணாத பாடசாலையின் பெறுமானம் பூஜ்ஜியமாயிருந்தது. பல்வேறு மனக்கஷ்டத்தில் சொந்த வாழ்க்கையையும் அதிபர் பணியையும் சமாந்தரமாகவே நகர்த்திச் சென்றேன். மனம் உடையும்போதெல்லாம் தாய் தந்தையர் துணைக்கு நின்றார்கள்.

சிதைந்த மனை.........!
உருக்குலைந்திருந்த பாடசாலை ..............!

இரண்டினதும் புதிய நிர்மாணத்தில் நான் அதிக சிரமங்களை எதிர்கொண்டேன். இன்றுவரை அச்சுழியிலிருந்து வெளிவரவில்லை.

யாழ் வலயக் கல்வித் திணைக்களத்தில் இணைந்திருந்த ஒரேயொரு முஸ்லிம் பெண் அதிபர் நானே!  இந்த மனநிலையில் மாதந்தோறும் நடைபெறும் அதிபர் கூட்டங்களுக்குச் செல்வேன்.. நூற்றுக்கணக்கான தலைமைகள் இருக்கும் அந்த மண்டபத்திலும் நான் தனித்திருக்கும் வெறுமை...

பல முகங்களுடன் வெற்றுப் புன்னகை!
அருகிலிருப்போருடன் சில சம்பிரதாய வார்த்தைகள்..!!

பல காலம் இந்த சுழற்சியிலிருந்து  என்னால் மீள முடியவில்லை. இயல்பிலேயே நான் யாருடனும் அதிகம்  கதைப்பதில்லை. 

பெரும்பான்மை சிங்கள மொழி பேசும் அநுராதபுரச் சூழலில் பல வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த என்னால், தமிழ்மொழி பேசும் யாழ்ப்பாணச் சூழலுடன் உடனேயே ஒன்றித்துப் போக முடியவில்லை. அநுராதபுர நிழல்களின் அலைவுகள் என்னை அதிகம் ஆக்கிரமித்திருந்ததால், யாழ்ப்பாண நிகழ்வுகளில் மாறுதல்கள் தெரிந்தன.  இவ்விரண்டு ஊர்களின் வேறுபாடுகளின்  வெடிப்பிலிருந்து நான் மீண்டெழ சில காலம் தேவைப்பட்டது.

அதிபர் பதவி ...........வெறும் பணியல்ல...... வாழ்க்கை.......!

சொந்த வாழ்க்கைக்குள் அந்தக் கடமைகளையும் பிணைத்து  வாழ கற்றுக் கொண்டபோது சில சவால்கள் உடைந்து காணாமல் போயின. 

இருந்தும்......... 

எனக்கும் இங்குள்ள ஏனைய பாடசாலை அதிபர்களுக்கும் இடையிலான இடைவெளிகள் நீண்டு கொண்டே இருந்த சமயத்தில்...

அப்போதைய யாழ் வலயக்கல்விப் பணிப்பாளராக இருந்த திரு தெய்வேந்திரராஜா சேர் அவர்கள், யாழ் வலய பாடசாலை அதிபர்கள் பங்குபற்றும் 3 நாள் கல்விச்சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தார். அதில் நானும் பங்குபற்றினேன்...

பல மனிதர்கள்........... பல பாடங்கள்....அனுபவங்களாகி என்னுள் நிறைந்தன. 
நாங்கள் தலைவர்கள் எனும் முடியையிறக்கி சுதந்திரமானோம். சுவாரஸியங்களும் வேடிக்கைகளும் மெல்ல மெல்ல.......... அந்த இடைவெளியைக் குறைத்தபோது என்னையும் யாழ் மண் உரிமையுடன் உள்ளிழுத்துக் கொண்டது. அதுவரை மனதில் இறுகிக் கிடந்த 'அந்நியம்' காணாமல் போனது. 

அந்த சுற்றுலாவில் பல நல்லதிபர்களை நான் அடையாளம் கண்டேன். கடமைசார் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். அதிபர் பதவிக்குள் சிறு மழலையாக இருந்த நான் என்னை நானே இயக்குமளவிந்கு அனுபவங்களையும்,  தற்றுணிவையும் பெற்றுக் கொண்டேன்.

அச்சுற்றுலாவில் நான் கண்டு கொண்ட இன்னொரு முகத்தின் சொந்தக்காரர் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் அதிபர் வணக்கத்திற்குரிய திருமகன் சேர்தான் ...அவர் தன் மதம் கடந்து பிற மதங்கள் மீதான கூர்மையான அறிவைப் பெற்றிருந்தார். ஆச்சரியப்பட்டேன். என்னுடன் இஸ்லாம். குர்ஆன் பற்றிய நிறைய விடயங்களைப் பகிர்ந்தார்;. இஸ்லாமிய நாகரிகம் பாடத்திலுள்ள பல விடயங்களைக்கூட ஞாபகப்படுத்தினார். புல்லரித்துப் போனேன். ஒருவரின் கலாசார ஆடைகளை அடிப்படையாக வைத்து அவர் தன் மதத்தை சார்ந்தே அறிவை உள்வாங்குகின்றார்  எனும் எனது எண்ணம் முதன் முறையாக உடைந்து போனது. மரியாதை கலந்த பெருமதிப்பேற்பட்டது அவரில்...

சுற்றுலா நிறைவுற்ற பிறகு...............பல நாட்கள் !

எல்லாம்  தொலைவாகிப் போனது.. வாழ்க்கையுடன் ஒன்றித்துப் போன கடமைகளுக்காக வெவ்வேறு திசைகளில் அதிபர்கள் நாங்கள் உழைத்துக் கொண்டிருந்தோம்.

ஒருநாள் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான மேற்பார்வைப் பணியின் பொருட்டு அவர் பாடசாலைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. பாடசாலையின் காட்சிப்புலங்களிலிருந்து நிறைய அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டேன்.

அந்த நீண்ட இடைவெளியின் பின்னர்........ 

24.05.2020 அன்று .........நோன்புப் பெருநாள் தினத்தில் வணக்கத்திற்குரிய திருமகன்  சேரின் பெருநாள் வாழ்த்துக்களை என் கைபேசி உவகையுடன் உரத்து வாசித்தது.

அவர் ஆளுமையுள்ள அதிபர் மாத்திரமல்ல. பிற மதங்களை கண்ணியப்படுத்தும், நேசிக்கும் சிறந்த மனிதர். மதம் கடந்த சகோதரர்.........    
அவர் வாழ்த்துக்களை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டிருக்கின்ற நேரம் தனியார் தொலைக்காட்சியொன்றில் .................

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பாகிஸ்தான் அரசின் கற்றல்சார் உதவிகளை அந்நாட்டு அதிகாரி வழங்கும் காட்சியும், திருக்குமரன் சேரின் உரையும் பதிவாகிக் கொண்டிருந்தன. அக்காட்சியில் மனம் நிறைந்தது. 

மதம் கடந்த மனிதாபிமானங்கள் தொடர்ந்து கொண்டே இருக்குமானால் இப்பூமியில் வசந்தமே மொழியாகும்.

இவ்வாறாக மதங்களைத் தாண்டிய   ஈர்ப்புக்கள் இவ்வுலகைப் பிணைத்து வைத்திருக்குமாயின்......வன்முறையற்ற வாழ்க்கை மனிதர்களுக்கான சிறந்த பொக்கிசமாகக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

[d;]p fG+u; - 31.05.2020


Aj;jj;jhy; rpijtile;jpUe;j kid - 2015


Gjpjhf mikf;fg;gl;bUf;Fk; ghlrhiy - 2020


- ஜன்ஸி கபூர் -
- 31.05.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!