About Me

2020/12/04

மழை


 

கருத்துப் போன முகில்களின் நீரோட்டம்

கடல் அலைகளை வேகமாகத் துரத்துகின்றது

அச்சப்பட்ட அலைகள் அடைக்கலம் தேடி

ஊருக்குள் நுழைகின்றது வெள்ளமெனும் பெயரில்

கனமழையின் நிழலுக்குள் ஒளிகின்ற உயிர்களைத்

தேடி ஒலிக்கின்ற உறவுகளின் கதறல்களும்

கலக்கின்றது காற்றோடு போராடுகின்ற ஈரத்தில்


மழைக்குள்ளும் ஈரமான மனசு இருக்கின்றது

அதனாற்றான் வறட்சியின் துன்பம் கண்டு

அடிக்கடி கண்ணீர் சிந்தி அழுகின்றது

ஓவெனும் ஒப்பாரிச் சத்தம் கேட்டு

எட்டிப் பார்க்கின்றன குளம் குட்டைகள்

தம் நெஞ்சத்தில் அணைத்தே ஆறுதல்படுத்துகின்றன

வழிந்தோடும் விழிநீரால் நனைக்கின்றன இருப்பிடங்களையும்


குடைக்குள் ஒளிந்து கொள்கின்ற கொடை

பற்றியதான புரிதல்கள் இங்கு யாருக்குமில்லை

எப்போது அணைக்கும் அழிக்குமென்ற மணக்கணக்கும்

தப்பாகிப் போய்விடுகின்றமையால் தவிக்கின்றேன் வாழ்வில்


விழுகின்ற நீர்த்துளிகள் பரிகசிக்கின்றன முன்னறிவிப்புக்களை

எதிர்வுகூறல்களை எட்டி உதைக்கையில் தடுமாறுகின்றன

முன்னாயத்தம் இல்லாத் தாவரங்களும் இயற்கையும்

சினத்தில் வானமும் முகம் கறுக்க

முகில்களும் கல்லெறிகின்றன தகரக் கூரைகளில்

அதன் பேரிரைச்சல் சப்தம் கேட்டு

தலைதெறித்து ஓடுகின்ற அமைதியான ஆறுகளை

நானும் அனுதாபத்துடன் பார்த்துக் கலங்குகின்றேன்


எவருக்கும் தெரியாது மழையின் குறும்பும்

பிறரை வருத்தும் துன்பத்தின் தீவிரமும்

வாட்டம் தீர்க்கின்ற இதமான அன்பும்

மழையின் இரகசியம் நானும் அறிந்திருந்தால்

ஒவ்வொரு துளிகளையும் அனுபவித்தே மகிழ்ந்திருக்கலாம்


கிடைக்கின்றபோது சலிப்பதும் காணாதபோது ஏங்குவதும்

நிலையற்ற மனதின் எதிரொலியாகவே காண்கின்றேன்

நினைக்கின்ற போதெல்லாம் மழையும் கிடைத்துவிட்டால்

துன்பங்கள் நம் அனுபவங்களைத் தொட்டிருக்காது


வெளியே மழையின் ஓசை கேட்கின்றது

மண்வாசம் சுவாசத்தினைத் தொட்டுச் செல்கின்றது

குளிரைப் போத்தியபடி இரசிக்கின்றேன் மழையை

அது விரும்பும்வரை என்னையும் நனைக்கட்டும்


ஜன்ஸி கபூர் - 4.12.2020


Kesavadhas

ஜன்ஸி கபூர் 

இயற்கை நிகழ்வுகளை மழையின் ஒவ்வொரு நகர்வையும் மனித உணர்வுகளௌடு ஒப்பிட்டு படிமங்களாய் பதிய வைத்திருக்கிறார் கவிஞர்!

கவிதையைப் புரிந்துணர்வு செய்யும் முயற்சியில் புதிய சொல்லாக்கங்களும் அரங்கேறுகிறது அழகு!

முகில் நீரோட்டம் கடல் அலைகளை துரத்த அவை அடைக்கலம் தேடி ஊருக்குள் நுழைகிறதாம்!

கனமழையின் நிழலுக்குள் ஒளிகின்றனவாம் உயிர்கள்

அந்த உயிர்களைத் தேடும் உறவுகளின் கதறல்கள் காற்றோடு போராடுகின்றனவாம்!

மழைக்கும் ஈரமான மன்சு இருக்கிறதாம்!

அதனால்தான் வறட்சி கண்டு அடிக்கடி கண்ணீர் சிந்துகிறதாம்!

ஓவெனும் ஒப்பாரி கேட்டு எட்டிப் பார்க்கின்றனவாம் குளங்குட்டைகள்!

தம் நெஞ்சில் அணைத்து ஆறுதல் படுத்துகின்றனவாம்!

பெய்யும் மழையின் ஓலமும் பாயும் நீரும் நிரம்பும் குளங்குட்டைகளும் படிமக் கடலில் புணைகள் ஆகின்றன!

அணைப்பதும் அழிப்பதும் கொடுப்பதும் கெடுப்பதும் மழைக்கு கைவந்தகலை!

நம் கணக்குதான் தப்பாகிப் போகிறது!

என்ன அழகான புரிதல்!

விழுகிற நீர்த்துளிகள் பரிகசிக்கின்றன முன்னறிவிப்புகளை எதிர்வுகூறல்களை..

முன்னாயத்தம் இல்லா தாவரங்களுடான இயற்கை சினத்தில் வானமும் முகமும் கறுக்க முகில்கள் கல்லெறிகின்றனவாம்! கற்பனை விரைந்து பாய்கிறதே விரியனின் விஷமாய்!

அடுத்த நாலைந்து வரிகள் மழையின் தாண்டவம் காட்டும்!

குறும்பு காயப்படுத்தல் அன்பு

என பலமுகம் காட்டுகிறது மழை!

மழை மர்மம் புரியாமையால் ரசிக்க முடியவில்லை!

புரிந்து ஆயத்தமாய் பாதுகாப்பாய் இருந்திட எல்லாவற்றையும் ரசிக்கலாம் மழையின் துளிகள் அதட்டல் மிரட்டல் எல்லாவற்றையும்!

கிடைத்தால் சலிப்பாகும்!

கிடைக்காதபோது ஏக்கம் தரும்!

மனதைப் போலவே மழையும்!

நினைக்கும் போதே எல்லாம் சாத்தியமானால் வாழ்வு சுவாரசியம் இழந்து போகாதோ!

மழையின் ஓசை வெளியில்

மழைதொட்ட மண்ணின்

மணம் நாசியில்

குளிரைப் போர்த்தி என்னை நினைக்கின்றது மழை!

குளிரால் போர்த்தமுடியுமா?

போர்த்தினாலும் நனையுமா!

எதிர்களின் அடுக்கினால் கோட்டையே கட்டிவிடுகிறார் கவிஞர்!

வாழ்த்துகள்!

மழையானுபவம் பேரின்பமே!

*****+

 





 

 



------------------------------------------------------------------------------------------




 புலப்பேன்கொல் புல்லுவன் கொல்லோ
*************************************** 
உணர்வினைத் தழுவிய உத்தம அன்பன்/
உழைத்திடும் விருப்பினில் ஊரில் நீங்கியதால்/
பிரிவின் வலிதனில் பிணியுற்றதே மேனியும்/
பரிவுத் துடிப்பினில் அலைந்ததே கலியினில்/

மெல்லிடை மெலிந்ததே இன்னுயிர் வருந்திட/
அல்லல் மையினால் அணிந்திட்ட கருவளையம்/
துல்லியமாகச் சொல்லிடும் தூய காதலினை/
தென்றல்த் தழுவலால் வடுக்கள் மோதிட்ட/

மென் மேனியின்று சிறகடிக்கின்றதே பரவசத்தில்/
தொட்டவன் நிழலினில் தொடுகின்ற சுகத்தினில்/
பட்டுடலும் காமமுற மயங்குகின்றதே பெண்மையும்/
ஒளியிழந்த விழிக்குள் வீழ்கின்றதே சுடரும்/

வலித்திட்ட உதடும் விரிந்திடும் சிவந்தே/
ஊடலும் கூடலுமாக புணர்வின் துடிப்பினில்/
உயிர்த்தன புன்னகையும் அவனிழல் கண்டவுடன்/
உணர்வினில் இரசித்திட்டாள் கொண்டவன் அன்பினை/

ஜன்ஸி கபூர் - 18.12.2020
 








 



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!