About Me

2020/12/01

விவசாயம்



விவசாயத்தின் வரலாறானது பல்வேறு காலகட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. காட்டிலிருந்து பெறப்பட்ட விதைகளைத் திட்டமிட்டு விதைக்கச் செய்தும், ஆறு, ஏரி, கடல் போன்ற நீர் நிலைகளிலிருந்து மீன்களைப், பிடித்தும், உணவுத்தேவையினை நிறைவு செய்த மக்கள், இன்று தமது சிந்தனையின் விளைவாக விவசாயம் எனும் பழமைக்குள் தற்கால அறிவியலைப் புகுத்தி நீர்ப்பாசனம், உரங்கள், பயிர்ச்செய்கை முறைகள், பூச்சிகொல்லிகள் போன்ற பல்துறைகளிலும் பல்வேறான தொழினுட்ப உபாயங்கள் பயன்படுத்தி, தற்கால மனித தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய விளைவுகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

பயிர்ச்செய்கை, விலங்கு வேளாண்மை போன்ற பகுதிகளைக் கொண்டுள்ள விவசாயத்தில் நிலங்கள் பண்படுத்தப்படுவதனால் மண்வாழ் உயிரிகளுக்கான வாழ்விடம் கிடைப்பதுடன், மண்வளமும் காக்கப்படுகின்றது. செழிக்கின்ற பசுமைக்குள் இயற்கையும் உயிர்க்கின்றது. அத்துடன் சூழல்வாழ் உயிரிகளுக்கிடையிலான அங்கிச் சமநிலையும் பேணப்படுகின்றது. எனவே விவசாயமானது வருமானத்தை ஈட்டித் தந்து நாட்டினதும், வீட்டினதும் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உயர்த்துவதுடன், சூழலையும் காக்கின்றது.

இவ்வுலக வாழ்வில் இணைந்த மனிதன் இயற்கையாகக் கிடைக்கின்ற இயற்கை வளங்கள் உயிரினங்கள் என்பனவற்றுடன் தொடர்புபட்டு மணணையும், விண்ணையும் ஓர் புள்ளியில் குவித்து, அதன் மூலமாக ஏற்படுகின்ற பிணைப்பினால் விவசாயத்தை உயிர்க்கச் செய்து, சமூக பொருளாதார மாற்றத்திற்கு பங்காற்றிக் கொண்டிருக்கின்றான். விவசாயத்தை ஆளுகின்ற விவசாயியின் மூலமாகவே இவ்வாறான உன்னதமான உழைப்பினை தான் வாழும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் வழங்க முடிகின்றது.

விவசாயத்தின் அடிப்படைத் தத்துவம் உழவாகும். தமிழரின் உழவு சார்ந்த வாழ்வியல் நெறிப் பண்பாட்டினை திருவள்ளுவரும் தமது குறளடிகளில் எடுத்துக்காட்டியுள்ளார்.  

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும். – (குறள் 1037)


ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு. – (குறள் 1038)


மேற்கூறப்பட்ட குறளடிகளில் உழவுத் தொழிலின் தொழினுட்பத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

பசுமைப் புரட்சியின் மூலமாக விவசாய விளைவுகள் அதிகரிக்கப்படக்கூடியதாக இருந்தாலும் கூட, நாகரிக வாழ்வு, வணிகமயமாதலின் தாக்கம், காலநிலை, சனத்தொகைப் பெருக்கத்தினால் ஏற்பட்ட இடநெருக்கீடு, மண்வளம், நீர்வளம், நிலத்தோற்றம் போன்ற பல புறக்காரணிகளின் தாக்கங்களுடன், விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டங்களும் விவசாயத்தின் செழிப்பைக் குறைக்க முனைகின்றன. இவ்வாறான சூழ்நிலைகள் எதிர்கொள்ளப்பட்டாலும்கூட, இயற்கையுடன் இசைந்து வாழ்ந்து இயற்கையைப் பாதுகாக்கும்விதமாக நாம் வேளாண்மையில் நாட்டம் கொண்டு உழைப்போமாக.!


 ஜன்ஸி கபூர் - 1.12.2020


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!