About Me

2021/05/15

கொரோனா அலையும் நிகழ்நிலைக் கற்றலும்

 

கல்வி என்பது குழந்தைகளின் உரிமை. ஆனால் அவற்றை வழங்க இடையூறாகி நிற்கின்றது இன்றைய கொரோனா நிலைமை.

தற்போதய சூழ்நிலையில் நிகழ்நிலைக் கற்றலின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. எதையும் கற்காமல் வெறுமையாக வீட்டில் இருப்பதைவிட, ஏதாவது விடயங்களைக் கற்க, மீட்க இப்பயிற்சி உதவுகின்றது.

ஆனாலும் ஒவ்வொன்றுக்குள்ளும் சாதக, பாத இடர்கள் காணப்படுகின்றன. அவற்றை நோக்கிய சில பார்வையே இது.

சுயமான கற்றல் எம் மாணவரிடம் காணப்படுகின்றதோ, அவர் சிறந்த ஆற்றல் உள்ளவராகக் காணப்படுகின்றார். ஆனால் இன்றைய கற்றல் அவதானிப்பில் சில மாணவர் சுயகற்றலில் ஆர்வமற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

வகுப்பறையில் எப்படித்தான் கற்பித்தாலும், சில மாணவர்களின் கவனக் குவிப்பு கற்றலை விட்டு விலகி  நிற்பதை ஆசிரியர்கள் மறுக்க முடியாது.

பரீட்சையை மையப்படுத்திய இன்றைய கல்விக் கட்டமைப்பில், சுயகற்றல் திறனை மேம்படுத்துகின்ற பயிற்சிகள், மொடியூல்களை வழங்கினாலும்கூட சில மாணவர்கள் அதை முயற்சிப்பதாக இல்லை. 

அந்த சில மாணவர்களைத் தண்டிப்பதால் பயனில்லை. உணர்வுபூர்வமாக சிந்திக்க வைக்க வேண்டும். இவ்வாறான சிந்தனை மாற்றங்களே பெரிதும் பயனடைகின்றன.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் இழக்கின்ற கல்வியை தக்க வைக்க நிகழ்நிலைக் கற்றல் பாடசாலைகளால் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் இம்முயற்சி எதிர்பார்க்கின்ற கற்றல் விளைவைத் தருமா எனச் சிந்திக்கையில் சிறிய பாடசாலைகளில் பல இடையூறுகள் காணப்படுகின்றன.

தெரிந்த அளவில் அவற்றைப் பட்டியல்படுத்துகின்றேன்.

வயதான ஓய்வு நிலையை நெருங்கிய சில ஆசிரியர்களும், தகவல் தொழினுட்ப அறிவும், ஆற்றலும் கொண்டிராத சில ஆசிரியர்களும் இன்னும் நிகழ்நிலை கற்பித்தலை இயக்குவது தொடர்பான அறிவைப்  பெற்றுக் கொள்ளக் காட்டுகின்ற ஆர்வம் குறைவு என்றே சொல்ல வேண்டும்.  அவர்களின் வயது, மனநிலை, சூழல் போன்ற காரணங்களால் இத்தொய்வு ஏற்படலாம். 

ஆனாலும் 2023 ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய புதிய கல்விச் சீர்திருத்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகையில், இத்தகைய தகவல் தொழினுட்ப ஆற்றல் கொண்டிராத ஆசிரியர்களை ஆசிரியர்த் தொழில் நிராகரித்து விடும் என்பது கசப்பான உண்மைதான்.  

அதிகளவிலான வறுமைப்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில், மாணவர்களிடம் மேம்படுத்தப்பட்ட தொலைபேசி வசதிகளோ இணைய வசதிகளோ காணப்படவில்லை. அவர்கள் தமது பெற்றோரை வற்புறுத்தும்போது தமது வயிற்றைக் கட்டியோ, கடன்பெற்றோ எப்படியோ தொலைபேசி வாங்கிக் கொடுக்கின்றார்கள். ஆனால் அவ்வாறு பெற்றுக் கொள்ளப்படுகின்ற தொலைபேசி எதிர்பார்த்த கல்வித் தேவைக்கு மாத்திரமா பயன்படுத்தப்படுகின்றது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகின்றது.

எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் இத்தகைய தேவைக்காக வாங்கப்பட்ட தொலைபேசியில் அம்மாணவியின் விதவிதமான புகைப்படங்கள் ஆக்கிரமித்திருந்தன.

மேலும் நிகழ்நிலைக் கற்றல் இணையத் தொடர்புக்கு தரவு அவசியம். இதற்கான பணம் வறுமைப்பட்ட பெற்றோரின் கடின உழைப்பிலிருந்தே செலவழிக்கப்படுகின்றது.

அன்றொரு மதியப் பொழுது. கொமினிகேசன் ஒன்றில் சற்று சனக் கூட்டம். ஒரு கூலித் தொழிலாளி. வியர்வை வடிய விரைந்து வருகின்றார். அவரால் மூச்சுக் கூட இயல்பாக விடமுடியவில்லை.

'மகள் ஆன்லைன் கிளாஸில நிற்கிறா. கெதியா இந்த நம்பருக்கு ரீலோட் பண்ணுங்க'

அவரின் துடிப்பு அப்பிள்ளைக்கு விளங்கியிருக்குமா? தனது ஏழ்மை பிள்ளையின் கல்வியைப் பாதிக்கக்கூடாது என தனது தொழிலில் இருந்து பாதியில் ஓடி வந்து கற்றலைப் பெற உதவுகின்ற இத்தந்தையைப் போல் பலர் உள்ளனர்.

இன்னுமொருநாள் ஒரு வீட்டிலுள்ள தரம் 7 கற்கின்ற மாணவியின் அழுகுரல் வீதிப் பரப்பில் தெறிக்கின்றது. தாயின் ஆவேசக் கத்தலும், அடியும் அப்பிள்ளையின் கதறலுக்கு காரணமாக இருக்கலாம். தனியார் கல்வி நிலைய நிகழ்நிலையில் பங்கேற்காமல் தூங்கியதற்கான காரணமாகவே அப்பிள்ளை அத்தண்டணையைப் பெற்றிருக்கின்றார்.

கற்றலில் ஒரு பிள்ளையை மற்றைய பிள்ளையுடன் ஒப்பிடாமல் இருக்கவே மதிப்பீடானது கணிப்பீடாக மாறியது. ஆனாலும் வீட்டில் பெற்றோர் தம் பிள்ளையை அடுத்த பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற அவலநிலை இன்னும் மாறவேயில்லை.

மேலும் வீடுகளில் இருக்கின்றபோது, இக்கற்றல் நடைபெறுகையில் வீட்டின் நிலவரம் மாணவர்களின் சிந்தனைகளைக் குழப்பி  மனதை கற்கும் விடயத்திலிருந்து திசை திருப்பி விடுகின்றது.

ஒரு ஆசிரியை தனது அனுபவத்தை பின்வருமாறு கூறுகின்றார்.

'நான் பாடம் எடுக்கையில் மாணவர்களின் முகத்தைப் பார்த்துக் கற்பிக்கவும் பாடத்தில் கவனத்தை நிலைப்படுத்தி வைக்கவும் கேமராவை இயக்கச் சொன்னேன். ஒரு மாணவன் இயக்கியபோது அவனுக்கருகில் அவனது குடிகாரத் தந்தை மேல்சட்டை இன்றி நிலத்தில் படுத்திருந்தார். அவரின் அருகில் உணவுகள் சிதறிக் கிடந்தன. அந்த மாணவனின் சங்கடத்தை நான் அறிந்து, கேமராவை நிறுத்தச் சொன்னோன்" என்றார். 

இந்நிலைதான் பல இடங்களில் தொடர்கின்றது. வசதியற்ற குடும்பங்கள். சிறு வீட்டுக் கட்டமைப்பு. நடப்பது எல்லாம் வெளிப்படும் நிலை. அவர்கள் கதைக்கின்ற ஒலிகள் வேறு குழப்பும். மாணவர்களின் கேமரா, மைக் இவற்றை நிறுத்தி கற்பித்தால் அது சுவாரஸியமற்ற உயிர்ப்பற்ற ஒருபக்கக் கலந்துரையாடலாகவே இருக்கும்.

இன்னுமொரு ஆசிரியர் தன் அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்தார்

"ஒரு வகுப்பில் முப்பத்தைந்து மாணவர்கள். வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகள் சராசரியாக ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் கற்பிக்கப்படுகிறார்கள். இன்று வரும் குழந்தை நாளை இல்லை. சில குழந்தைகள் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே பார்க்கிறார்கள் " என்றார்.

இன்னுமொரு ஆசிரியரோ தன் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்தார்.

"பாடம் ஆரம்பிக்கப்பட்டு முடிவடையும் தறுவாயில் ஒரு மாணவி இணைந்தார். காரணம் கேட்டபோது புதிய தரவு அட்டை வாங்கச் சென்ற அம்மா இப்போதுதான் வந்தார்" என்றாள். 

சராசரி வாழ்க்கைநிலைக் குடும்பங்களின் நிலை இதுதான்.

இன்னுமொரு அனுபவம் இவ்வாறு பகிரப்படுகின்றது.

கற்பித்துக் கொண்டிருக்கையில் குறுஞ்செய்தியொன்று....

"மிஸ் எனது தரவு இன்னும் சிறிய நேரத்தில் முடியப் போகின்றது. நீங்கள் தொடர்ந்து கற்பிப்பீர்களா?"

என்ற ஆதங்கத்தினுள் இப்பிள்ளையின் கற்கும் ஆர்வம் தொக்கி நின்றது.

இன்னுமொருவரின் அனுபவமிது

"தொடர்ச்சியான பாடத்தில் பங்கேற்காத ஒரு மகனை கடைசி நாள் அழைத்தேன் ..

மகனே, நீங்கள் ஏன் வகுப்புகளுக்கு வரவில்லை?"

"எனக்கு தொலைபேசி  இல்லை மிஸ். அப்பாவுக்கு ஒரு சிறிய தொலைபேசி உள்ளது .அதிலிருந்து பெரிதாக்க முடியாது மிஸ் .."

இவ்வாறாக பல அனுபவங்கள் அன்றாடம் ஆசிரியர் எதிர்நோக்க நேரிடுகின்றது.

மேலும் நிகழ்நிலைக் கற்பித்தல் நடைபெறுகையில், திடீரென மின்சாரம் நிறுத்தப்படுமானால், மாணவர்களின் மனநிலையும் பாதிக்கப்படும். கற்கின்ற விடயங்களின் தொடர்பு குழம்புகின்றபோது அப்பாடத்தின்மீதான விருப்பும் குறைந்து விடுகின்றது.

இவ்வாறான கற்றலில் சிறிது இடைவேளை காணப்படுகின்றபோது, மாணவர்கள் தொலைபேசி இணையங்களில் வேறு தலைப்புக்களைப் பார்க்க விழைகின்றார்கள்.

பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களுக்காக பாட ஆசிரியர்கள் வாட்ஸ்அப், வைபர் குழுக்களை உருவாக்கி பாட விடயங்களை தரவேற்றம் செய்கையில், சில மாணவிகள் அதனை தமது பொழுதுபோக்கு விடயங்களைப் பகிரும் தளமாகவும் பயன்படுத்துகின்ற நிலை காணப்படுகின்றது.

தற்கால நவீனத்துவ நிலையில் நிகழ்நிலைக் கற்றலானது மேம்படுத்தப்பட்ட கல்வி அமைப்பினை உருவாக்கப் பயன்படக்கூடியது. எனவே கற்றல் சமூகமும், அதனைச் சூழ்ந்திருப்போரும் அதன் பயனை வினைத்திறனாக்கின்ற செயற்பாட்டிலீடுபட்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் நிச்சயமாக நாம் எதிர்பார்க்கின்ற கற்றல்பேறினை அடையலாம் என்பது வெள்ளிடைமலை.

ஜன்ஸி கபூர் -15.05.2021


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!