About Me

Showing posts with label உணர்வுகள். Show all posts
Showing posts with label உணர்வுகள். Show all posts

2019/06/16

யாழ் நினைவுகள்




யாழ்ப்பாணம் 
1990 ஆம்  ஆண்டுக்கு முன்னர் நாம் பிறந்த ஒரு தேசம். வாழ்விடம். பிறப்பிடம் தான். ஆனால் இடப்பெயர்வின் பின்னர் வேறு ஊர்களில் தங்கி இருக்கும் போதுதான் சொந்த ஊரின், வீட்டின் வாசம்  புரிந்தது. அதன் ஏக்கம் நெஞ்சில் நிறைந்து ஆழமான மனத் தாக்கமாய் உள் நுழைந்தது. இழப்பின் போதுதானே அதன் அருமை புரியும். அந்த வகையில் எம் சொந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போது சின்ன வயது நினைவுகள் மெல்ல மெல்ல அதிர்ந்து கண்கள் வழியே கண்ணீரை வெளித் தள்ளும்.

பிள்ளைப் பருவம் என்பது பிறப்புக்கும், பருவமடைந்த நிலைக்கும் இடையிலான பருவமாகும். இப்பருவம் வாழ்வின் ஆரம்ப நிலை பலவற்றை கற்றுக் கொள்ளும் ஆர்வம் மனதை நிறைக்கும் பருவம். அனுபவங்களை விரும்பி ஏற்றுக்கொள்ளும் பருவம். பயம் பாதி, தைரியம் பாதி என   நம்ம நாமே நிரப்பிக் கொள்ளும் பருவம். வாழ்க்கை தத்துவங்களை புரிந்து கொள்ளாமலே நமக்கென சில கோலங்களை நாமே வகுத்து அணி வகுக்கும் காலம்.  குடும்பமே வலிமையான உறவாக நம்மை வட்டமிடும். கஷ்டம், நஷ்டம் மனதுக்கு புரிவதில்லை. கிடைக்கும் சிறு காசு கூட கற்பனை  மாளிகையின் வண்ணக் கோலம்கள்தான். சுதந்திரமான காற்றின் அசைவுகளில் வாழ்நாட்கள் நகரும் அழகிய பருவம்.

அந்த பருவ அசைவுகள் யாழ்பாணத்து தெருக்களில் என்னை பதித்த நினைவுகளை மெல்ல அசை போடுறேன்.

அப்போது நான் 4 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் காலம். சைக்கிள் பழகும் ஆசை ஏற்படவே உம்மாவிடம் மெல்ல ஆசைகளை அவிழ்த்தேன். பக்கத்தில் லுகுமான் காக்காவின் சைக்கிள் கடை. ஒரு மணித்தியாலத்திற்கு குறித்த சில்லறைகள் வாடகையாகக் கொடுக்க வேண்டும். பக்கத்துக்கு வீட்டு நண்பிகள் புடை சூழ சைக்கிள் பயிற்சி  தினமும் ஆரம்பமானது.

சில மாதங்கள் நகர்ந்தன.

உம்மாவின் கோரிக்கைக்கேற்ப வாப்பா எனக்கென சிறு சைக்கிள் வாங்கித் தந்தார். இப்போது வாப்பாவின் மேற்பார்வையில் சைக்கிளோட்டம் ஆரம்பமானது. வாப்பா முன்னே செல்ல, நான் பின்னே பயத்துடன் ஊர்ந்து கொண்டிருந்தேன்.

அது ஓட்டுமடச் சந்தி கடந்த அராலி வீதி.

அப்போது முதலாம் குறுக்குத் தெரு பொம்மைவெளியில் வீடுகள் பெரிதாக இல்லை. ஆங்காங்கே  குடிசைகள்.  வீதிக்கும், குறுக்கு நிலத்துக்கும் இடையில் பெரிய பள்ளம்.

ஈருருளி நகர்ந்து கொண்டிருக்கும் போது என் பின்னால் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பயத்தில் கைகள் நடுங்க, ஈருருளியை பள்ளத்துக்குள் வீழ்த்தினேன். 

"உம்மா"

மெல்ல முனகலுடன் எழும்ப  முயற்சித்தேன். "ம்ம் ஹும்" முடியவில்லை. வாப்பாவும் பள்ளத்துக்குள் இறங்கி  என்னை தூக்கி விட்டார். அந்தக்கணம் பாதி வெட்கம், மீதி வேதனை.

அன்று எனக்கேற்பட்ட அடி மெல்ல என் முயற்சிகளுக்கு  பலமானது. இன்று நான் லாகவமாக உந்துருளியை செலுத்தும் போதெல்லாம் அந்த நினைவுகள் மெல்ல என்னை உலுக்கி செல்கின்றது. வீழ்கின்ற ஒவ்வொரு அடியும், அவமானமும் நம்மை தூக்கி விடும் தூண்கள்தான்! 
 

- Jancy Caffoor -
  16.06.2019





தனி மரம்

Image result for divorce

பெண் இப்புவியில் கருக்கொள்ளும் போதே அவளை சூழ இருளும் கவ்வத் தொடங்குகிறது போலும்1 பெண் எனும் அழகிய உருக்குள்ளே சோகங்களும் மையம் கொள்ளத் தொடங்குகிறது. அவளுக்குள்ளே உறைந்து கொண்டிருக்கும் கனவுகள், எதிர்பார்ப்புகளை காலம் "திருமணம்" எனும் பெயரால் விகாரப்படுத்தி விடுகின்றது. 

திருமணம் ஒரு பெண்ணை முழுமைப்படுத்துகிறது. அவள் தன் மனதில் படிய வைத்திருக்கும் ஆசைகள் அரங்கேற்றும் இடமாக அந்த மணவாழ்க்கையை கருதுகிறாள். அவள் உணர்வுகளோடு ஒன்றித்துப் போகும் கணவனை மனம் தேடுகிறது. தன் குடும்பமே அவள் உலகமாக உரு எடுக்க, தன் உணர்வுகளை குடும்பத்துக்கே அர்ப்பணித்து வாழ்கிறாள். அந்த திருமணம் அவள் பெற்றோர் உடன்பிறப்புகள்,  உறவினர்கள், நண்பர்கள் என பல உறவுகளையும் பிரித்து, கணவன் எனும் கயிற்றை பலமாகப் பற்ற அவளுக்கு கற்றுக் கொடுக்கிறது. 

வருடங்கள் அவள் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வர அவளுக்கென்றே அவள் இரத்தத்தோடு  உறவாடும் பிள்ளைகள் சொந்தமாகிறார்கள். 

தனிமரம் அவள் கிளை விட்டு தோப்பாகிறாள். 

சில வருடங்கள் ஓடிச்சென்றது விதி சதி செய்கிறது!

மருமகளின் உணர்வுகளை புரிந்து மகளாக ஏற்றுக் கொள்ளாத மாமியார், மதினிமார் அவள் மீது வன்மம் வளர்த்தார்கள். அவர்களின் சூழ்ச்சியால் கணவன், மனைவிக்கிடையில் மனக்கசப்பு உருவானது. அவர்களின் உறவுக்குள் மௌனம் பிசைந்து கொண்டது. ஒரு வீட்டுக்குள் வாழும் பறவைகள் உடலாலும், மனதாலும் தொலைவாகினர். அந்த வாழ்வு வெறும் சம்பிரதாயமாக மாறியது. அவள் ஏதோ வாழ்ந்தாள். அவள் பிள்ளைகள் மீது உயிரை போர்வையாக்கி மகிழ்ந்தாள். தன் குடும்ப மகிழ்வுக்காக அவள் சுயநலம் களைந்து ஒடுங்கிக் கொண்டாள்!

" பெண் என்றால் பேயும்  இறங்கும் "  என்பார்கள்.  

ஆனால்!

இந்த ஆணாதிக்க யுகத்தில் அவளுக்கென்று வெறும் போராட்டங்களே தரித்து நிற்கின்றன.   காற்றாகி போகும் கானல்கள் அவளுக்குள் தீயாய்  உறைந்து விடுகிறது.  நிம்மதி தேடும் வழிப்பயணத்தில் அவள் பதிக்கும் சுவடுகள் எல்லாம் கலியாகி  உலர்ந்து விடுகிறது. திருமணம் எனும் உணர்வுமிக்க புரிந்துணர்வு வெறும் சடங்காகிப் போகும் போது பெண்ணின் வாழ்வும் கேலியாய்,  கேள்வியாய் வீணாகிப் போய் விடுகின்றது.
   
நம்பிக்கை தந்து வாழ்வை பகிர்ந்த கணவன் வேறு பெண்ணை நாடும் பறவையாகிறான். அவள் மனநிலை இறுக்கமடைகிறது. தற்கொலை எண்ணம் தீயாய் அவளை சூழ்ந்து மனதை அல்லல்படுத்துகிறது.  தன்னை கட்டுப்படுத்த, தன் பிள்ளைகளுக்கான இருப்பை தக்க வைக்க அந்த சூழலை விட்டு சில காலம் வெளியேற நினைக்கிறாள்.  உணர்வுகளை நேசிக்காத  அந்த மனிதாபிமானமற்ற மனிதனிடமிருந்து, தன் பிள்ளைகளிடமிருந்து  யாருமறியாமல்  பிரிந்து தாய் வீடு செல்கிறாள்.  பிள்ளைகள் அவனுடன் இருந்தால் அவன் தன் அடுத்த மனைவியை தேடிச் செல்லமாட்டான்  எனும் நப்பாசை அவளுக்குள்!

சில காலம் சென்றதும் 

தன் கொந்தளிக்கும் மனதை அடக்கி மீள வீட்டிட்குச் செல்கிறாள்.  அவள் கணவன் அவள் குழந்தைகளையும் பார்க்க அனுமதிக்கவில்லை.  பிள்ளைகள் அந்த சிலகாலமும் தகப்பனால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள் போலும் ! தாய் மனநிலையை புரிந்து கொள்ளாமல் வெறுப்பை கக்கினார்கள்.  

அவள்  பிள்ளைகள் கணவனால் பிரிக்கப்படுகின்றார்கள். பிரிக்கப்பட்ட போது பெத்த மனம் கண்ணீரால் தன்னை கழுவிக் கொண்டது. 

இன்று விவாகரத்துக்காக    விண்ணப்பித்துக் காத்திருக்கும் அவள் மனம்!

போராட்டக் கலவை. கணவனால் வேறாக்கி கொண்டு செல்லப்பட்ட அவள் குழந்தைகள் தாய்ப்பாசம் மறந்து இன்று கணவனின் மனைவியான சிற்றன்னையுடன் வாழும்  பிள்ளைகளாக மாறி விட்டார்கள் . 

ஏன் ?

தாயை  மறக்கும் படி கணவன் மிரட்டினானா அல்லது கணவன் ஈனச் செயல் தாங்காது அவள் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி தன் தாய் வீடு சென்றதா?  

அவள் இன்று தனி மரம்!
வாழ்வோடு போராடும் தனி மரம்!!
வாழ்வு தரிக்கப்பட்ட சோக மனம்!!!

அவளுக்கு அவள் தெரிவு செய்த இந்த திருமண வாழ்வு பொய்த்து போனதே!

இது யார் குற்றம்? 

அவனைத் தெரிவு செய்த அவள் குற்றமா அல்லது இறைவன் விட்ட வழியா?

அவள் துன்பத்துக்கு ஒருநாள் முடிவு வரும் அதுவரை அவள் வாழ்வு காலத்தின் கையில் புதிர்தான்!
கலங்காதே உன் துன்பம் விரைவில் தீரும்!!   பிரார்த்தனைகள்!!!

- Jancy Caffoor-
    16.06.2019


Image result for life

மௌனமே சிறந்த தேர்வு



வாழ்க்கை ஒரு நீண்ட பயணம். ஒவ்வொரு நகர்விலும்  நமது காலடியில் பலவித அனுபவங்கள். அனுபவங்களை உள்வாங்கியபடி நாம் பயணிக்கும் போது சூழ்நிலைகளின் தாக்கத்திலும் உள் வாங்கப்படுகிறோம். எண்ணங்களை நாம் உருவாக்கி அதனை செயற்படுத்தி வாழ முயற்சிக்கிறோம்.   ஆனால் நாம் நினைத்த படி வாழ்க்கை அமையாத போது மனதிலும் அமைதி இன்மை குடி கொள்கிறது. அர்த்தமற்றதாக தோன்றும் வாழ்வில் துன்பங்களின் ஆதிக்கம் அதிகமாகிறது. வாழும் ஒவ்வொரு நொடியும் பெரும் சுமையாக மாறுகிறது. நாம் நம்பிக்கை வைத்த அனைத்துமே மாயமாக மாறி மனதை அங்கலாய்க்கிறது. உலக உருண்டையில் சுழலும் ஒவ்வொரு துளிகளிலும் நமக்கான வெறுப்பு மேலோங்குகிறது. நயம் தரும் வாழ்வு காயம் தரும் நகர்வாக மாற ஆரம்பிக்கிறது. புரிந்துணர்வில்லாத மனிதர்களின் சொல் , செயல்கள் புயலாக மாறி தாக்கும் போது வார்த்தைகள் நாவுக்குள் ஒடுங்கி மௌனமே சிறந்த தேர்வாக   நமக்குள் அங்கீகரிக்கப்படுகிறது .

Related image

- Jancy Caffoor-
   15.06.2019

2019/06/11

எதிர் மறை எண்ணங்கள்

Image result for rosa

கையில் அழகான ரோசா!

இருந்தாலும்
காயம் தந்த முள்ளையும்
ஓரப் பார்வையில் விழுத்தி விடுகிறது மனம்
இவ்வாறே வாழ்க்கையும்  எப்போதும் எதிர்மறை எண்ணங்களின் ஆக்கிரமிப்பில் அலை மோதுகிறது.

- Jancy Caffoor-
   11.06.2019

யதார்த்தம்

Image result for சுயநலம்

இந்த உலகம் எப்போது உருவாக்கப்பட்டதோ, அன்றே மனித வர்க்கமும் சுயநலம் என்ற வலையை தன்னைச் சுற்றி பின்னத் தொடங்கி விட்டது।  வஞ்சகம், பொறாமை, கள்ளம், கபடம் போன்ற நச்சு விதைகளின் இருப்பிடம் அவனது மனமாக மாறி விட்டது। தான், தன் குடும்பம் முதனிலை பெற, அடுத்தவர் தூரமாகினர். ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் பொதுநலம் மறைந்து போனதில் முரண்பாடுகளின் விளைச்சல் அவனது வார்த்தைகள் மூலமாக உருவாகத் தொடங்கிவிட்டது. அழகான குறுகிய கால வாழ்க்கையில் சந்தோசம் துளியளவு கிடைக்காத மன நிலை நிரந்தர சொத்தாக மாறி விட்டது! உள்ளே குமுறி வெளியே சிரிக்கும் நடிகனாக மனிதன் மாறத் தொடங்கி விட்டான். இயந்திரமயமான இவ் உலகம் இன்று இதயம் இல்லாத மனிதன் கையில்!


- Jancy Caffoor-
   11.06.2019

2019/06/04

வலிமை


Image result for வலிமை

சூழ்நிலைகள் நம்மை அரவணைக்கும்போது நாமும் அதற்கேற்றாற் போல் வளைந்து கொள்கின்றோம். இயல்போடு பிசைந்து செல்லும் வாழ்வில் சிறு தடைகள் போதும் நம்மைப் புரட்டிப் போட!

ஏனெனில்! 

எண்ணங்களின் அசைவில் நகர்ந்து கொண்டிருக்கின்ற நம் மனங்களில் சிறு தடங்கல் ஏற்படும்போது நமது பயணங்களும் இயல்போட்டங்களிலிருந்து தளர்ந்து விடுகிறது.

வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் அழகிய எதிர்பார்ப்பில் தரிசித்து நிற்கின்றது. ஆனாலும் நாம் எதிர்பாராத தடைகள் காரணமாக மனம் பின்னோக்கி ஏமாற்றத்தின் பிடிக்குள் சிக்கி விடுகின்றோம். பலம் பலகீனமாக மாறும்போது நம்பிக்கைகளும் தோற்றுவிடுகின்றது.

இருந்தும்!

ஒவ்வொரு தடையும் சவால்களின் மறு வடிவம் என மனசு அங்கீகரிக்கும்போது முட்களுக்கிடையே பயணிக்கும் மனோ வலிமை பிறக்கிறது நம்முள்!

- Jancy Caffoor-
   06.04.2019

பெருநாள்


நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. காலத்தின் ஒவ்வொரு மைல் கல்லையும் நாம் தரிசிக்கும்போது ஏதோ ஒரு கணத்தில் நாம் கடந்துபோன ஞாபகங்கள் நெஞ்சை பிசைந்து வண்ணமிருக்கும். நாளை பெருநாள்!

மாதம் மகத்தான நோன்பிருந்து கொண்டாடும் பெருநாள். ஆனாலும் இந்த வருடம் நெஞ்சக்குழியில் ஏதோ பிசையும் உணர்வு. மகிழ்வோடு பனிக்கும் கண்களிலிருந்து இம்முறை திரட்டிக் கொண்டு கண்ணீர் கசிகிறது.

சம்பிரதாயமான ஒரு சடங்காக இந்தப் பெருநாள் அமைந்து விடுமோ அச்ச வேரின் பற்றுதலில் மனம் திணறிக் கொண்டிருக்கிறது. 
வெறுமை!

மன வெளியை வெறித்தனமாக இறுக்கிக் கொண்டிருக்கிறது. நிம்மதி துறந்த உணர்வுகளின் போராட்டத்தின் வெடிப்பின் கலவையாய் மாறிய மனம் இந்தப் பெருநாளை ஏந்தி நிற்கின்றது.

நல்லிணக்கத்தை மாற்றார் சிதைத்ததில் அச்சமும், நம்பிக்கையீனங்களும் விளைவாகின. களிப்பேந்தும் மனதில் கலி கசிகிறது. சவால்கள் துன்பமாகி, பதற்றம் தொடராகி எம்மைச் சூழ்ந்து நிற்கையில் நம் காலடியில் பெருநாள்!

எம் இருப்பின் வேர்களை அசைக்கையில் வலிக்கிறதுதான். ஆனாலும் அடுத்தவர் தமது விமர்சனங்களால் எம் ஈமானை உரசும்போது  மனம் பலமடைகிறது. இரும்பு இதயங்கள் எம் இளகிய உணர்வுகளை பிசைகையில் ஆக்ரோஷம் களைந்து மனம் பொறுமை காக்கின்றது.

" இறைவா எம் வலி துடைத்து வளம் சேர்ப்பாய் இந் நன்னாளில்!"

- Jancy Caffoor - 
  04.06.2019

2019/05/20

திருமணம்



Image result for திருமணம் பற்றிய ஹதீஸ்

ஓர் ஆணும், பெண்ணும் மனம் பொருந்தி வாழ்வதற்காக மேற்கொள்ளப்படும் சட்டரீதியான ஒப்பந்தமே திருமணமாகும். சமயங்கள் போதிக்கும் இந்த ஒழுக்க வாழ்வியல் மிகச் சிறந்த வரம். சமூக அங்கீகாரம் பெற்ற, வம்சம் வளர்க்கும் இந்த விழுமியம் காக்கும் ஒப்பந்தத்தில் ஆணும், பெண்ணும் மானசீகமாக இணைக்கப்படும் போதே இல்லறம் நல்லறமாக போற்றப்படுகிறது. முன், பின் அறியாத அல்லது அறிந்த இரு உறவுகள் தமக்காக, தமக்குள்  ஏற்படுத்திக்கொள்ளும் இந்த இல்லற அறத்தையே சமூகம் அங்கீகரிக்கிறது. உறவினால் இருவர் இணைந்து குடும்பமாகி பிள்ளைகள் எனும் விழுதுகளையும் அமைத்து வாழும் போது அந்த வாழ்க்கை பல்வேறு எதிர்பார்ப்புகளையும், சவால்களையும் ஆசை, கனவுகளையும் அரவணைத்து செல்கிறது. குடும்பம் எனும் கோபுரம் அமைக்கப்படும் போது பிள்ளைகள் தூண்களாகி, பெற்றோர்களை தாங்கி நிற்பது நல்ல குடும்பத்தின் லட்சணமாகிறது.

கணவன், மனைவி என்போர் ஒருவரை ஒருவர் புரிந்து, விட்டுக்கொடுத்து அன்புடன் வாழும் அந்த வாழ்க்கையின் அழகில் எதிர்காலம் ஒளிமயமாகிறது. சிறந்த குடும்பத்தின் ஒவ்வொரு நகர்வும் ஆனந்தத்தின் தித்திப்போடு செல்லும் என்பதில் ஐயமில்லை.  பொறுமையும், அமைதியும், எதையும் தாங்கும்  மனமும் கிடைக்கப் பெறும் மணம் கால ஓட்டத்திலும் தேயாத நறுமணம்தான்.


தம்பதியர் தமது சுயநலம் களைந்து, ஈருடல், ஓருயிராக தம்மை மாற்றி வாழாதபோது அக்குடும்பத்தின் நம்பிக்கையும் சிதைவடைந்து விடுகிறது. ஆசை, கனவுகளுடன் தன்  எதிர்காலத்தை கணவனிடமோ அல்லது மனைவியிடமோ ஒப்படைத்து வாழும் துணைக்கு, தான் நம்பி இருப்போர் விசுவாசமாக இல்லாத போது, நம்பிக்கைத் துரோகியாக  மாறும் போது வாழ்வின் பெறுமதி கேள்விக்குறியாகி விடுகிறது. வாழ்க்கை பொய்க்கும் போது எதிர்காலமே இருண்டு விடுகிறது.  ஒருவரோடு ஒருவர் பொருந்தி பல்லாண்டு  காலம் வாழ்வோம் என்று உறுதி பூண்டு இடையில் முரண்பாடுகளால் குடும்பத்தை, தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை சிதைக்கும் ஆணோ, பெண்ணோ உணர்வுகளை சிதைக்கும் மிருகமே!   
Related image
தம்மைச் சார்ந்திருப்போர் நலன் பேணாத யாருமே மனித நேயத்தை தொலைத்தவர்களே! பண்புகள் அற்றோரிடம் பணம் இருந்தாலும் கூட,  அவர்கள் பிணத்துக்கு ஒப்பானவர்களே! உலக வாழ்க்கையில் இன்பம் பெறவும், தனது தவறுகளை குறைத்துக் கொள்ளவும், தனது வாரிசுகளை இப்பூமியில் நிலை நிறுத்தவும் இறைவன் செய்த ஏற்பாடான இந்த திருமணத்தின் அர்த்தம் உணர்ந்து வாழும் தம்பதியினர் நல்ல சமூகத்தின் தோற்றுவாய்களாக தம்மை உருவேற்றிக் கொள்கின்றார்கள்.

திருமணம் ஓர் பண்பாட்டின் வெளிப்பாடு ஒவ்வொரு சமயத்தினரது திருமண முறைகள் வேறுபட்டாலும் கூட, ஆண், பெண் எனும் இறை படைப்பின் உருவங்களோ, குருதி நிறமோ, உணர்வுகளோ வேறுபடுவதில்லை.  மரணம் வாழ்வின் எல்லையைக்  குறுக்கி விட்டாலும் கூட, நாம் வாழ்ந்த வாழ்வின் வெளிப்பாடு இந்த சமூக கண்ணாடியில் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். வாழ்தலும் ஒரு கலையே!  இல்லறப் பள்ளியில் இணைந்த அனைவரும் தமது குறைபாடுகள் களைந்து முரண்பாடுகளின் வேரறுத்து நறுமணம் வீசும் மலர்களாக தம்மை மாற்றி கொள்ள வேண்டும்.

வாழுங்கள் சிறப்பாக!

உங்களால் ஒரு சமூகம் உயிர்ப்போடு பின்னால் வரும் உங்கள் வாழ்வின் மெய்யியலைக் கற்றுக்கொள்ள!!

திருமணம் வெறும் சடங்கல்ல................................. வாழ்வியல்! 
Related image

-Jancy Caffoor- 20.05.2019

2019/05/19

நம்பிக்கை துரோகம்

இளமை பருவத்தில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை பற்றிய நம்பிக்கைகள் கனவுகள் தொடர்ச்சியாக உலாவரும். நமக்கு பொருத்தமான தடம் நம் காலடி சேரும் வரை நமது தேடலும் தொடர்ந்து கொண்டிருக்கும் அவ்வாறான தேடலுடன் எனது இளமை வெளியில் உலா வந்த காலம் அது.
.
இழந்த பின்னர்தானே அதன் அருமை புரிகிறது. 1990 ஒக்டோபரில் யுத்தம் எங்கள் வீட்டை விழுங்கிய போது வீடு எனது கனவாக இருந்தது. எல்லோரும் இருப்பதற்கு வீடொன்று இருக்கும் போது நாமோ இருப்பிடம் தொலைத்த அகதிகளாக இரண்டு தசாப்தம் அலைந்த காலம் அது!
.
 சொந்த வீட்டில் இருக்கும் போது  தெரியாத வீட்டின் அருமை இடம் பெயர்ந்த பின்னரே புரிந்தது.  ஏக்கம் சுமையாகி மனதை கோரமாக தாக்கியது. பல இடங்களில் பல வருடங்கள்  அந்தரித்த வாழ்க்கை எம்மை முழுமையாக ஆட்கொண்டது!
.
பிறப்பிடம் திரும்பும் நாள் வெறும் கனவாகவே மனத்திரையை கவ்விக் கொண்டிருந்தது. சொந்த ஊர் திரும்பும் நாளுக்காக சவால்களுடன் காத்திருந்த போதுதான் 2015  அந்த நாள் நெருங்கியது.!
.
 சுவர் எல்லாம் சிதைந்து மயானமாக வெறிச்சோடிக் கிடந்த எங்கள் வீடு  காடாக உருமாறி வீடு கண்ணீரில் நனைந்து கொண்டிருந்தது. மனதோ கவலையின் கலவையில் திரண்டு கொண்டது. சில நாட்கள் ஓடிய போது உடைந்த வீட்டை கொஞ்சம் கொஞ்சமா சரி படுத்தத் தொடங்கினேன் .  
.
அன்றும் கட்டட தேவையின் பொருட்டு குளியலறை கதவுகள் கொள்வனவு செய்வதற்காக குடும்பத்துக்கு தெரிந்த ஆட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தியவாறு வங்கிக்கு சென்று 40000 ரூபாய் பணத்தையும்  பெற்றுக் கொண்டு  தாயுடன் நகரிலுள்ள பிரபல காட்சிகூடத்துக்கு சென்றேன். 5000  ரூபாய் புதிய நாணய தாள்கள் என் கைப்பைக்குள் சிறைப்பட்டன 
.
கடை ஊழியர் எமது தேவை தொடர்புடைய  ஒவ்வொரு பொருள் பற்றியும் தெளிவுபடுத்தி கொண்டிருந்தார் .அப்போது ஆட்டோ காரனும் எம்மோடு வந்து கொண்டிருந்தான். எமது எதிர்பார்ப்புக்கேற்ப பொருள் கிடைத்ததும் அதனை தெரிவு செய்தேன். இருந்தும் இன்னும் சில விடயங்கள் தெளிவில்லாமல் இருக்கவே வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் மேசன்களில் ஒருவனிடம் கதவின் கை  பிடி,  கதவின் அளவு தொடர்பான தகவலை பெற விரும்பி எனது கைப்பையை அருகில் இருந்த மேசை மீது வைத்தேன்.  கைப்பை சிப்பை மெதுவாகத் திறந்து கைத்தொலைபேசியை வெளியே எடுத்தேன். மேசனுடன் கதைத்தவாறே கதவு இருக்கும் இடத்திற்கு சென்றேன் 

.
.
 சற்று தொலைவில் என் கைப்பை திறந்த நிலையில் அநாதரவாக கிடந்தது . அதன் அருகில் அந்த ஆட்டோகாரன்  தனது கைகளை கட்டியவாறு நின்று கொண்டிருந்தான்.   தொலைபேசி  அவசரத்தில் கைப்பையை நான் மூடாதது  நினைவுக்கு வந்தது. என்னிடம்  பணம் இருந்தாலும் கூட குறித்த  பொருட்களை கிரெடிட் கார்டுக்கே கொள்வனவு செய்திருந்ததால், அந்த பணம் மறந்தே போனது.  வீட்டுக்கு வந்து இறங்கியதும் இரவில் ஆறுதலாக அமர்ந்து அன்றைய செலவுகளை சரி பார்த்த போதுதான் அந்த பணம் காணாமல் போனது புரிந்தது . நடந்த நிகழ்வுகளை என் நினைவில் ஒவ்வொன்றாக வீழ்த்தி பார்த்த போது நான் வங்கியில் எடுத்த புதிய 5000 ரூபாய் அந்த ஆட்டோ காரன் கையில் இருந்தது நினைவு வந்தது. அந்த ஆட்டோகாரர் பணத்தை களவெடுத்திருந்தது தெரியவந்தது. பணத்தை கவனமா பேணாதது என் தவறுதானே! நிச்சயம் அவனுக்கு அல்லாஹ் தண்டனை கொடுக்கட்டும். மானசீகமா இறைவனிடம் அந்த கள்ளனை, நம்பிக்கை துரோகியை பொறுப்பு கொடுத்தவளாக கண்ணீரில் கரைந்தேன். அந்த அனுபவம் அதன் பிறகான ஒவ்வொரு நாட்களும் பணத்தின் பெறுமதி தொடர்பான பாடத்தை  எனக்கு கற்று தந்து கொண்டிருக்கிறது.

- Jancy Caffoor -
  19.05.2019

2019/05/07

இனி

வேகமான கால ஓட்டத்தில் பதவி வழிவந்த பணிச்சுமை மற்றும் வாழ்வியல் போராட்டங்களுக்கு மத்தியில் என் விரல்கள் கணனியில் பதிவிடவில்லை . நீண்ட வெறுமையில் சோர்வும் ஓர் அங்கமாகி போக நாளை            நாளை  என நாட்கடத்தலும் நீண்டது . கிட்டத்தட்ட நாலரை வருடங்கள்! என் கவிதாயினியிலிருந்து விலகியே இருந்தேன். இறுகி கிடந்த என் கற்பனை உணர்வுகளை நட்பு வட்டம் மெல்ல மெல்ல கிளற ஆரம்பிக்க, தூசு தட்டினேன் இவ் வலைப்பூவை !

எதை எழுதுவது .....................எப்படி எழுதுவது ...................?

எல்லாமே மௌனித்த உணர்வு.  நான் மாறிவிட்டேனா! இயல்பான வாழ்வியல் சிந்தனைகளை நசுக்கி விட்டதா? ஆனாலும் ஏதோ நான் எழுத வேண்டும். எனக்காக இல்லாவிட்டாலும் நான் நேசித்த என் கலைக்காகவேனும்  எழுத வேண்டும். மீண்டும் நான்  நானாக, என் கலையாக மாறவேண்டும் !

அந்த ஏவல் என் உணர்வுகளுடன் கசிய தொடங்கியவுடன் விரல்களும் விசைப் பலகையுடன் பேசத்தொடங்கியது மழலையாய். ஒரு கலைவாதி மௌனிக்கலாம். ஆனால் மறைந்து விடுவதில்லை. இனி தினமும் என் கவிதாயினியை நான் தரிசித்து போவேன்.

- Ms. Jancy Caffoor -
   07.05.2019

2019/05/06

வாழ்க்கை

Image result for life

வாழ்க்கை என்ற நீண்ட பயணத்தில் வெவ்வேறு தரிப்பிடங்களில் நின்றே பயணிக்கிறோம். நாம் விரும்பியோ விரும்பாமலோ வெவ்வேறு முகங்களை கடந்தே செல்கின்றோம். அவர்களின் தரிசிப்பில் விருப்போ வெறுப்போ நம் வசம். சிலரின் பிரியங்களைச் சுமக்கும் நாம், சிலரின் முரண்பாட்டுக்குள் சிக்கவும் வேண்டும். இந்த நியதியின் அடிப்படையில் அமைந்த உறவு சட்டகங்கள் நாம் வாழும் வாழ்க்கையின் பகுதிகள்தான்.

-Jancy Caffoor- 
  05.05.2019

மாற்றங்கள்


மாற்றங்கள் யாவும் மனங்களிலிருந்து  உயிர்க்கும்போதே பிறக்கின்றன. வெறும் உதடுகளால் முன்மொழியப்படுகின்ற வார்த்தைகள் மாற்றங்களைக் கொண்டு வராது. எண்ணங்களை உள்வாங்கும் மனது,  தான் பயணிக்கப் போகும் பாதை பற்றிய திடமான தீர்மானத்தை தனக்குள் உள்நுழைத்து அதற்காக தன்னை அர்ப்பணித்துச் செயற்படும்போதுதான், அவை மாற்றங்களுடன் வாழ வேண்டிய பக்குவத்தை நமக்கு கற்பித் தருகின்றன.




- Jancy Caffoor-
   05.05.2019







2019/05/05

யதார்த்தம்

இயல்பாகிப் போன வாழ்விலிருந்து விலகுதல் என்பது சாத்தியமற்றது. ஏனென்றால் மனச்சாலையில் ஆங்காங்கு வீழ்ந்து கிடக்கும் தடைகளை உடைத்து  வெளியேற முயற்சிக்கும்போது பெரும் போராட்டமே வெடித்துச் சிதறுகிறது.

Image result for தடைகள்


- Jancy Caffoor-
   05.05.2019

2019/05/04

உள நெருக்கீடு


நம்பிக்கைகள்  சிதைக்கப்படும்போது  அதனை  மீள கட்டியெழுப்புவதென்பது சிரமமானதுதான். அடுத்தவர் வார்த்தைகளால் ௨ணர்வுகைளக் காயப்படுத்தும்போது நாம்  வெளிப்படுத்தும் மௌனம் பாரிய ௨ளநெருக்கீட்டைத் தீர்க்காவிட்டாலும்கூட நம்மைச் சூழ தற்காலிகமாக ௮மைதியையேனும் தோற்றுவிக்கக்கூடியது.

.
- Jancy Caffoor-
   05.04.2019


எண்ணங்கள்

மனித வாழ்வின் தோற்றுவாய்களுள் தவிர்க்க முடியாத அம்சம் பிரச்சினை கள்தான். பிரச்சினைகள் வரும்போது அவற்றிலிருந்து விலகியிருத்தல் அப்பிரச்சனை தவிர்த்தலுக்கான பிரதான வழியாகும்.


கையில் அழகான ரோசா
இருந்தாலும்........
காயம் தந்த முள்ளையும்
ஓரப் பார்வையில் விழுத்தி விடுகிறது மனம்!

- Ms. Jancy Caffoor -
   05.04.2019

2015/08/25

உன்னன்பு



உன் அன்பு அழகிய பூ
நெருங்கி வந்தேன் புரிந்தது - அது
தொட்டாற்சுருங்கிப் பூவென்று!

இந்தக் கவிதையில் அப்படி என்னதான் இருக்கின்றது? நீங்கள் கேட்கலாம். ஆனால் நான் ரசித்த என் கவிதை வரிகள் இவை....எனக்கு மிகவும் பிடித்த அன்புக்காக எழுதிய உயிர்ப்பான வரிகள்!

மலர்கள் மனங்களின் ஈர்ப்பில் உள்வாங்கப்பட்டவை. அதன் நிறமும் அழகும் நறுமணமும் நம் உணர்வின் வருடல்களில் கலந்து நம்மை அடிக்கடி வாசித்துச் செல்பவை. அந்தவகையில்

இந்தப்பூ

தொட்டாற்சுருங்கிப் பூ

இந்தப்பூவை பார்க்கும்போதெல்லாம் எனக்கு நான் எழுதிய கவிதையும், அதற்கான சந்தர்ப்பமும் ஞாபகத்தில் நிரம்புகின்றது.

தொட்டாற்சுருங்கிப் பூவை யாரும்  கண்டு கொள்வதில்லை. ஆனால் வீதியோரங்கள், கவனிப்பாரற்ற இடங்களில் இப்பூக்கள் நிறைந்து காணப்படும். அவ்வாறுதான் எனக்குள்ளும் அந்த அன்பு அடுத்தவர் பார்வைக்கு பெறுமதியற்றுப் போனாலும், விழிகள் வாசிக்கும் உன்னுருவுடன் கசியும் என்னன்பு ரொம்ப உயர்வானது.

இப்பூ ஊதா நிறம். அழகானது. ரசிக்கத்தக்கது. அவ்வாறுதான் உன்னுடனான என்னன்பும் உணர்வுபூர்வமாக அழகானது.

இப்பூவைச் சூழ மரத்தின் முட்கள் தலைநிமிர்ந்திருக்கும். அப்படித்தான் உன்னன்பும் சினத்தின் தொடுகையுடன் இன்னுமின்னும் அன்பை கூட்டிச் செல்கின்றது.

- Jancy Caffoor-

 



2015/03/21

பெண் விடுதலை



உடலில் மட்டுமல்ல. உள்ளத்தில் வார்த்தைகளால் காயப்படுத்துவதும்கூட
வன்முறைதான். எப்பொழுது எல்லா ஆண்கள் தம்மைச் சார்ந்த பெண்களைப் புரிந்தவர்களாக அவர்களின் உணர்வுளை மதித்து வாழ ஆரம்பிக்கின்றார்களோ அப்பொழுதுதான் பெண் விடுதலை ஆரம்பிக்கின்றது!


- Jancy Caffoor-

      20.03.2015

மனவரிகள்


நம் வலிகளை உறிஞ்சி - அவற்றை
புன்னகையாக மாற்றித் தரும் இதயம்
"அம்மா"
--------------------------------------------------------------
கோழி யுரித்துச் சிவக்கும்
உன் கைகளின் தழும்பாய்
எப்பொழுது மிருக்கட்டு மென் உதட்டுன் ஈரம்!
---------------------------------------------------------------
பொய்யோடு மோதும்
மெய்கூட
நோய் வந்து சாய்கையில்
மெய்யன்பு ஆரத்தழுவும்
தன் சேயாய்
----------------------------------------------------------------

நீ நீயாகவும்
நான் நானாகவும் இருந்தால்
நாம்
யாரோவாகப் போகின்றோம்
----------------------------------------------------------------

முகில்கள் தரை இறங்குகின்றனவோ
முகம் மூடும் வயல்களில்
மெல்லக் குட்டுகின்றன பனித்துளிகள்!
---------------------------------------------------------------

கிழக்கின் மையலில்
ஒளிரும் ஒளிப்பொட்டின்
அழகை
அம்பலப்படுத்தும் இரகஸியங்களோ
ஐதரசனும் ஈலியமும்!
---------------------------------------------------------------

பொங்கி வரும் அலைகள்
தாங்கி வரும் சிற்பத்தில்
பொறிக்கின்றேன் என்
உதடு சுமக்கும் சினமதை!
---------------------------------------------------------------

சுயநலமான இவ்வுலகில்
எல்லோர்மீதும் வெறுப்பாய் உள்ளது!


- Jancy Caffoor-
      20.03.2015




2015/02/24

வாழ்வே மாயம்


வாழ்க்கை !

கடந்துபோன வாழ்க்கைய கிளறிப் பார்ப்பது  தப்புத்தான். ஏன் என்றால்  அதில்  நம் நிம்மதி கரைந்து  போன வடுக்கள் இருக்கும். அவை வலிக்கும். ஆனாலும் சில விசயங்கள நினைத்துப்  பார்க்கும் போதுதான் அது நம் வலிகளை  காய வைத்து  பக்குவப்படுத்தி எதிர்காலத்திற்கு தயார்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில இன்னைக்கு நான் நெனைக்கப் போறது என்னோட வாப்பாவ . அவர நெனைச்சு அவர்ட தெறமைகளை கண்டு நான் மலைச்சுப் போயிருக்கிறேன். என்னதான் தெரியாது அவருக்கு. ஓவியம், இலக்கியம் உட்பட எல்லா உபகரணத் திருத்த வேலைகளும்  அவர் பேசுற ஆங்கிலத்திற்கு நிகரே இல்ல. படித்தவர். அரசாங்க ஊழியர். எங்கள எல்லாம் படிக்க வச்சார். தன்னோட சம்பளத்துக்குள்ள  வட்டம் வரைஞ்சி  அதுக்குள்ள எங்களையும் உள்ளீர்த்துக் கொண்டார். அந்த உள்ளீர்ப்பு எங்க அம்மாட தெறமை அவருக்கேத்த வாழ்க்கை. அதுக்கு எங்களயும் பழக்கப்படுத்தி.

என்னோட சின்னக் கால வாழ்க்கய நெனைச்சா அவர்கிட்ட நெறைய அடி வாங்கியிருக்கிறேன். றோட்டுல விரட்டி விரட்டி செம்பரத்தை தடி பிய்ச்சி விளாசியிருக்கிறார்.  அப்படி அடிச்சு வார காயத்தில இருந்து ரெத்தம் வந்தா க கோபம் போனதும் அந்த கல்லுக்குள்ள கொஞ்சம் ஈரம் கசியும். மருந்து கட்டுவார். ஏதாவது தின்ன வாங்கி தருவார் அடிச்சதுக்கு இலஞ்சமா.

அவர் சிங்கம். தனிக்காட்டு ராஜா. யாருக்கும் கட்டுப்படாத அஞ்சா நெஞ்சன். ஆனால் அவரச் சூழ யாருமற்ற ஒரு மயானம் உருவாகியிருப்பதைக்கூட புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

- Ms. Jancy Caffoor -
   24.02.2015

குறும்பு - பாடசாலை நினைவு


நான் ஏ.எல். படிக்கிற நேரம் (12ம் வகுப்பு)
--------------------------------------
இடம்-  யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி
வகுப்பு - கல்வி பொது தராதர உயர் தரம் விஞ்ஞானம் 

ஒரு நாள் Zoology Teacher வகுப்புக்கு வந்தார். அவர்  எப்பவும் மூக்குக் கண்ணாடி போட்டிருப்பார்.   கண்டிப்பான ரீச்சர்.

 ஆனால் நோட்ஸ் நிறையத் தருவதால் ரியூசன் கிளாஸ் போகின்ற  சில பேருக்கு அம் மிஸ்ஸின் பாடத்தை மிஸ் பண்ணத்தான் ஆசை. பயத்தில அரை குறையாக எழுவதைப்போல பாவனை செய்வார்கள். ஆனால் ரியூசன் வாசலை மிதிக்காத என்னப் போல சில பேரின் வற்புறுத்தலில் மிஸ் நிறைய நோட்ஸ் தருவார் .

இப்படியான மனநிலையில், ஒரு நாள் ஒரு குறித்த சப்ஜெக்ட்ல  மிஸ் மந்திலி எக்ஸாம் (மாத அலகுப் பரீட்சை)  தந்தார். நாங்களும் விடை எழுதிக் கொடுத்தோம். மறுநாள் எங்க விடைப் பேப்பரைத் திருத்திய மிஸ்ஸூக்கு மூக்குமேல கோபம் வந்திட்டுது.

உடனே வகுப்புக்கு வந்தார். சிலபேரின் பெயரை வாசித்து எக்ஸாம் கொப்பியை அவர்கள் மூஞ்ஜில வீசிட்டார்.

"ஸ்கூல்ல தார எக்ஸாமுக்கு நான் தார நோட்ஸ படிச்சிட்டுத்தான் விடை எழுதணுமே தவிர, ரியூசன் நோட்ஸ இங்க கொண்டு வந்து விடையா எழுதக்கூடாதுண்ணு எத்தனை தடவை சொன்னேன். "

மிஸ் சத்தம் போட்டாங்க. நாங்க கப்சிப்.

அப்படி எழுதின அத்தனை பேருக்கும் முட்டை மாக்ஸ்தான் (பூச்சியம்) கிடைத்தது. அசடு வழிய உட்கார்ந்திருந்த நண்பிகளை அனுதாபத்துடன் பார்க்கத்தான் முடிந்தது.

இப்ப அந்த ரீச்சர் இருக்கிறாவோ தெரியல. ஆனால். மனசுககுள்ள அந்த முகம் இன்னும் இறுக்கமா படிந்திருக்குது.


- Jancy Caffoor-
    24.02.2015