பாட்டி எங்கே போறியள்மதியம் 12 மணி...........சுட்டெரிக்கும் வெயில் அன்றேனோ எட்டிப் பார்க்கவில்லை. லேசான சிணுங்கலுடன் கூடிய மழைச் சிவிறல்களில் வவுனியா பஸ் நிலையமும் நனையத் தொடங்கியது. என் வகுப்பு முடிந்ததும் அவசர அவசர ஆட்டோ பிடித்து ...........................பஸ்ஸூக்குள்  தாவி ஏறினேன்......ஓரிரு இருக்கைகளே என் னைப் பார்த்து கையசைக்க யன்னலோரம் அமர்ந்து கொண்டேன். மழைப்புழுக்கம் தேகத்தை வேறு வறுத்திக் கொண்டிருந்தது. பின்சீட்டில் பாட்டியொருவர் அமர்ந்திருந்தார்..பெரிய நெற்றி பொட்டும் சிவப்புக்கல் மூக்குத்தியும் அவர் அடையாளங்களாக.............

பாட்டி.......சூழ்நிலையைச் சமாளிக்கிற அளவுக்கு கொஞ்சம் சிங்களத்தை நுனி நாக்கில வைத்திருந்தார்..

"மணிக்கூட்டு கோபுரம் பக்கத்தில இருக்கிற ஆமி காம்ப் பக்கத்தில இறக்குங்க"

தன் அருகிலிருந்த எல்லோரிடமும் சிங்களத்தில் கூறிக் கொண்டே இருந்தார்..
பஸ்ஸின் பயணப்பாதையில் அவர் கூறும் அந்த இடம் இல்லாததால் எல்லோரும் குழம்பி ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தனர்..ஆனால் பாட்டி விடுவதாக இல்லை. தனது வார்த்தைகளை திருப்பித் திருப்பிச் சொல்லி எல்லோரையும் குழப்பிக் கொண்டிருந்தார். அப் பாட்டிக்கு காது வேறு கேட்காத நிலை.....உரத்து பதில் ​சொல்லுவதால் பஸ்ஸில் இருந்த எல்லோரின் பார்வையும் பாட்டி மீது நிலைப்பட்டுக் கிடந்தது...

" பாட்டி .......நீங்க போக வேண்டிய இடத்தைச் சொல்லுங்கோ"

ஒரு இளைஞன் கேட்டதற்கு தெரியாது என்று தலையாட்டினார்..

"ஏன் அம்மா.......வயசான காலத்தில இப்படி அட்ரஸ் தெரியாம அலைகிறிங்க...காலம் கெட்டுக்கிடக்கு"

அருகிலிருந்த பெரியவர் சற்று சினத்தார்.

அருகிலிருந்த பெரும்பான்மையைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் சொன்னார்

" அவ சிங்களம் கதைத்தாலும் கூட தமிழ்தான்........எங்கட ஆட்கள் மூக்குத்தி போட மாட்டார்கள்....நீ அவகிட்ட தமிழில பேசு "

என்னை உசுப்பி விட, நானும் பாட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன். நான் தமிழில் பேசியதைக் கண்டு பாட்டிக்கு சரியான மகிழ்ச்சி.......
இறங்க வேண்டிய இடத்தின் அடையாளம் சொன்னார்...அவரை நான் தைரியப்படுத்தினேன்.

"பிள்ள......இறங்க வேண்டிய இறக்கம் வந்தால் சொல்லும் என்ன"

பாட்டியின் வேண்டுகோளை நான் ஏற்றுக்கொண்டதில் அவர் மகிழ்ச்சி இரட்டிப்பானது...

அவருக்கு பக்கத்தில இருந்த எனது பாடசாலை மாணவன் , அவர் கூறும் இடத்தை ஊகித்தவனாக,

"பாட்டி பயப்படாதிங்க...அநுராதபுரத்தில இறங்கினதும் நான் ஆட்டோ பிடிச்சு தாரேன்.............நீங்க சொல்ற இடத்துக்கு போகலாம்"

இப்பொழுது பாட்டி மனதில் நிம்மதி ............................அது சொற்ப நேரமே ...........!
மீண்டும் புறுபுறுக்கத் தொடங்கினார்.

"உது என்ன இடம் பிள்ள"

பஸ் தரிப்பையெல்லாம் காணும் போது என் உயிரை வாங்கத் தொடங்கினா.....நானும் அவர் மேல் அனுதாபப்பட்டு இடத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டே வந்தேன்.......

" ஈரப்பெரியகுளம்...............பூனாவ..........மதவாச்சி"

ஐயோ......ஏன் பஸ் இந்த றோட்டால போவுது? ஏன் இவ்வளவு நேரம் எடுக்குது...

பாட்டியின் புறுபுறுப்பு கேட்டு பலர் எரிச்சலுடன் முகம் சுளிக்க, சிலர் அனுதாபத்துக்குள் நனைத்தனர்..

மதவாச்சி.......சற்று பெரிய ஊர்..பாட்டி அத் தரிப்பிடத்தில அவசரமாக இறங்கப் போக, நாங்கள் வலுக்கட்டாயமாக அவரை பஸ் இருக்கையில் உட்கார வைத்தோம்..

வஹமல்கொல்லாவ....இக்கிரிகொல்லாவ......ரம்பாவ....சாலியபுர..அநுராதபுரம்

ஊர்கள் கடந்தன. அடுத்து அநுராதபுரம் பழைய பஸ் நிலையம்...............

பஸ் கன்ரக்டரின் கூவலைத் தொடர்ந்து பாட்டி இறங்கப் போனார்....

"இல்ல பாட்டி.....இது தூரம்........என்னோட  புதிய நகரத்தில இறங்குங்கோ"

மீண்டும் நம்பிக்கையூட்டினேன்...நான் சொன்ன பேச்சு அவர் காதில் விழவில்லை...என்னிடம் விடை பெற்றார்...நானும் பொறுமையிழந்து மௌனித்தேன்...

பாட்டியின் செயலால் பஸ்ஸிலிருந்த அனைவர் கவனமும் பாட்டியின் மீதுதான்...

"இந்த வயசான காலத்தில உது தேவையோ"

இன்னுமொருவர் முணுமுணுத்தார்...பாட்டி தன்னிருக்கையை விட்டெழுந்து சற்று முன்னே நடந்தவர் திடீரென இன்னுமொரு இருக்கையிலிருந்தவரிடம்
சிங்களத்தில் ,

'உதுல இறங்கினா எனக்குப் போகலாம் தானே"

பாட்டி.........தன் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்கி ஆளுக்காள் அபிப்பிராயம் கேட்டுக் கொண்டிருந்தா.....வயசானாலே பிடிவாதமும் சந்தேகமும் தான்................... என்  மனது அலுத்தது..

அம் மனிதர் பாட்டியை உற்றுப் பார்த்தவாறு தன் புருவங்களைச் சற்று உயர்த்தினார்.......

" அக்கா...நீங்க நொச்சியாகம யில இருந்தனீங்கள் தானே....மாணிக்கத்திட பெண்சாதியே நீங்க.......உங்கட வீட்டுக்கு ஒருக்கா நான் வந்திருக்கிறன்...நான் செல்வராசன்..........மறந்திட்டியள் போல...மாணிக்கம் அண்ணா சுகமே"

பாட்டி சற்று நேரம் யோசிக்கத் தொடங்கும் போதே பஸ் மீண்டும் தன் இலக்கு நோக்கி புறப்படத் தொடங்கியது..

"ஓமடா......செல்வா.........ஞாபகம் வருது...........பக்கத்தில இருக்கிறவ உன்ர மனிசியே........பார்த்து கனநாளாகுது உன்ன"

அவர்கள் பேச்சு தொடர்ந்தது....

"அக்கா.......கணேசன்ர வீட்டுக்கே போறியள்..........அவன் திசாவையில இருக்கிறான்...அவன்ர பக்கத்து வீட்டிலதான் நாங்க இருக்கிறோம்... எங்களோட வாங்கோ"

அவர்களின் உறுதிமொழியை பாட்டிக் ஏற்றுக் கொண்டே ஆகணும்.உரிய இறக்கம் வந்ததும் என்னிடம் விடைபெற்றுக் கொண்டு அவர்களுடன் பாட்டி இறங்கினார்....

"வயதான காலத்தில் தெரியாத இடத்திற்கு பயணிப்பது எவ்வளவு பிழையான விடயம்" எனக்கு நானே கூறிக் கொண்டேன்...!
2 comments:

  1. அழகான மொழி நடை...அருமை ஜான்சி ..:))

    ReplyDelete
  2. ம் ம் பிரபு....நன்றி...........இதை வாசிக்கும் போது எனக்கும் எங்கள் ஊர் ஞாபகம் வருகின்றது

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை