மீண்டு வந்த நாட்கள்


கவிஞர்  வதிரி சி ரவீந்திரன் அவர்களின்  முதலாவது கவிதைத் தொகுதியான "மீண்டு வந்த நாட்கள்" கவிதைத் தொகுதி தொடர்பான எனது பார்வையிது..............!

என் முகநூலில் ஏற்கனவே இடப்பட்டிருந்த இக் கட்டுரையை இன்று இணைய வலைப்பூவில் பதிவு செய்கின்றேன் மகிழ்வுடன்............

இலக்கியவுலகில் தனக்கென  தனி முத்திரை பதித்தவர்களுள், புதியவர்களை ஆர்வத்துடன் வரவேற்பவர்கள் ஒரு சிலரே...! அவர்களுள் இவரும் ஒருவர்.!

"மீண்டு வந்த நாட்கள்"

தன் தாய் மண்ணின் காலடியில் வாஞ்சையோடு வீழ்ந்து கிடக்கத் துடிக்கும் துடிப்பே முகப்பட்டையாக முகங்காட்ட, 80  பக்கங்களுடன் கனமான கவிதைகளை ஏந்திக்கொண்டிருக்கும் காத்திரமான கவிதைத் தொகுதியான இதனை அவர் தன் பெற்றோருக்குச் சமர்ப்பணம் செய்கின்றார்.

தெனியான் அவர்கள் தன் அணிந்துரையில் குறிப்பிட்டவாறு இக் கவிதைத்தொகுதி ஈழத்துக் கவிதை இலக்கியத்தில் இவர் பெயர் பொதித்து , அவரைத் தொடர்ந்தெழுத ஊக்குவிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தலைப்பைக் கண்ணுற்றதும் அனைத்துக் கவிதைகளிலும் யுத்த வாடை வீசும் எனும் எண்ண வார்ப்புடனேயே இதழ்களைப் புரட்டத் தொடங்கினேன்...
 ஆனால் பல கருப்பொருட்களும் அவற்றினை அடையாளப்படுத்தும் தலைப்புக்களுமாக கவிதைகள் சிதறிக் கிடக்கின்றன. இப் பரிமாண விசாலிப்பு கவிதைத் தொகுதியின் சிறப்பாகி எம் மனதையும் நிறைத்து நிற்கின்றது........

ஏழ்மை, சாதியொழிப்பு, பொய்மை, உறவுகள், ஏக்கங்கள் , எதிர்பார்ப்புக்கள், யுத்தம் என நீளும் உணர்ச்சிச் சிதறல்கள் அழகான தமிழ்க் கட்டுக்குள் அடுக்கப்பட்டு, யாவரும் புரிந்து கொள்ளும் விதமாக பகிரப்பட்டுள்ளன. அவ்வவ்போது வார்த்தைகளில் யாழ் மண்ணின் வாசமும் கலந்து வருவது கூட சிறப்பே!

தினபதி, யாதும், வீரகேசரி, மல்லிகை, தினக்குரல்,ஞானம்,ஐீவநதி, நீங்களும் எழுதலாம், பொறிகள், தினகரன், அக்னி என்பவற்றில் வெளிவந்த இவரது கவிதைகள் "மீண்டு வந்த நாட்கள்" கவித்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அவரது முப்பத்தெட்டு வருட புதுக்கவியாக்கத்தின் ஆளுமைச் செழுமையை பறைசாற்றும் விதமாக முப்பத்தொன்பது கவிதைகளும், பத்தொன்பது துளிக்கவிதைகளும், ஐந்து மெல்லிசைப்பாடல்களும் இக் கவித்தொகுப்பில் உட்பதிக்கப்பட்டு நம்முள் அழகாய், அர்த்தத்தோடு சிரிக்கின்றன...

யுத்தமானது நிமிடங்களை யுகங்களாக மாற்றக்கூடியது. ஒவ்வொருவரினதும் வாழ்வியல் அனுபவங்களை , கவிஞர்களும் தம் பேனா முனைக்குள் ஏந்தும் போது முரண்பாடு காணாத கருத்தியல்கள் ஒத்துப்போய் இலக்கியத்தில் உயிர்ப்புத்தன்மையை தக்க வைக்கின்றது.

தேசம் தொலைத்து நேசம் துறந்து செல்லும் ஆயிரமாயிரம் இதயங்களைச் சுமந்தவாறே மனப்புகையைக் கக்கிச் செல்லும் "அந்த ரயில் போகிறது" எனும் தொடக்க கவிதையே என் நெஞ்சை நிறைத்து நிற்கின்றது..

ஒவ்வொருவரும் தன் பிறப்பிடம் விரட்டப்படும் போது அவிழ்க்கப்படாத சோகங்களும், நிறைவேற்றப்பட முடியாத எதிர்பார்ப்புக்களும் ஆட்கொள்ள ஆரம்பிக்கின்றன..அவ்வாறான மனத்திரைக்குள் மௌனித்துக் கிடக்கும் ஊமைக்காயங்களை "மனத்திரைக்குள்" உணர்த்துகின்றது..

சேரியின் சகதி வாழ்வை "பாதை" யும், "முற்றத்து மல்லிகை" யின் அழகில் கிறங்கிக் கிடக்கும் உவமைச் செழுமையும், அடிமைத்தனத்தை அறுத்தெறியும் முனைப்புடன் களமிறங்கிய நயினாரை "புதிய கதை பிறக்கிறது" கவிதையிலும் , "போலிகளை இங்கு தேடுது பார்" கவிதையில் வேஷமிடும் மனிதர்களின் முகமூடிகளையும் கவிஞர் நமக்கு அழகாகத் தொட்டுக் காட்டுகின்றார்.

ஒவ்வொரு ஜீவனின் உற்பத்தியில் தாய்மைப் பற்றோடு மடி தரும் பூமியே பிறப்பிடமாகும். ஷெல்லடி உறிஞ்சிய ஊர் வனப்பையும், சிதைவையும் "சாவு வந்ததே " கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது."எலும்புக்கூடாய் செத்துக்கிடக்கும் சந்தை" எனும் வரிகள் முழுச் சிதைவின் மொத்தவுருவாய் நம்முன் வீழ்ந்து கிடக்கின்றது..

அவ்வவ்போது மனதுக்குள் ஒத்திகை பார்க்கப்படும் உள்ளத்தாசைகளை நிறைவு செய்ய காத்திருக்கும் எதிர்பார்ப்பு  "வள்ளம் வர வேண்டும் " , எனும் கவிதையிலும் , "முளையிலே கிள்ளல் " மூலம் நாளைய வரலாறு நசுக்கப்பட்ட துயரத்தையும் கவிஞர் நம் முன்னால் யதார்த்தம் சிதையாமல் நிலைநிறுத்துகின்றார்.

"இயல்பு நிலை", "கையடக்க தொலைபேசி" , "உள்ளக்குமுறல்" , "புரியாமையும் புரியும்" , "நயந்துரை", எனது ஆல்பம் " இக் கவிதைகள் ஒவ்வொன்றும் புலப்படுத்தும் உணர்வுகள் மனதை இறுக்கிக் கௌவிப்பிடித்து, கவிஞரின் சொல்லாடல், வரி வார்ப்பின் அழகு என்பவற்றை நமக்குள் உணர்த்தி நிற்கின்றது.

புலப்பெயர்வென்பது மறுக்கமுடியாத தேவையாகி விட்ட இன்றைய காலப் பொழுதில், ஒவ்வொருவரினதும் அந்தரிப்புக்களை "புலம் பெயர்ந்தவனின் கடிதம்" வாசித்துச் சொல்கின்றது..

இவ்வாறு இங்கு பதிவாகியுள்ள ஒவ்வொரு கவிதைகளும்  கவிஞரின் கவித்துவ செழுமையைப் பறை சாட்டிக் கொண்டிருக்கின்றதென்றால் மிகையில்லை.

மெல்லிசைப்பாடல்களின் வரிகளோ சங்கீத சந்தத்துடன் இசையேதுமின்றி நம் செவிக்குள் இனிய பாடலை நுழைத்துத் தரும் பிரமிப்போடு நம்முள் கரைந்து கிடக்கின்றன.

இக் கவிதைத் தொகுப்பின் ஈற்றுப்பக்கங்களில் "வதிரி ரவி நேச நினைவுகள்" எனும் தலைப்பில் அவரின் கலையுலகோடு சங்கமித்திருந்த கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் நாற்பது வருட கால இலக்கிய சில நினைவுகளை மீட்டுகின்றார்....வதிரி சேர் அவர்கள் கவிஞராக , எழுத்தாளராக மட்டுமல்ல நல்ல நடிகராக, விளையாட்டு வீரராக , நகைச்சுவையாளராக  வகித்த வகிபாகங்களையும் நாமறியச் செய்கின்றார்.........

விவாக பதிவாளராக தொழிலாற்றும் அவரின் மறுபுறத்தில் கலைகளின் விளைநிலம் பெரிஞ்செல்வாகி அவர் பெயர், புகழை நாற்றிசையிலும் பரப்பிக்கொண்டிருக்கின்றது.

வதிரி சேரின் எண்ண வார்ப்புக்கள் எக்காலமும் பொருந்திக் கிடப்பதே அவரது இந்தக் கவித்துவத்தின் வெற்றியாக நான் கருதுகின்றேன்.

"மீண்டு வந்த நாட்கள்" ........!
நாம் மெச்சுகின்ற நாட்கள் !!

அவரது முதல் தொகுப்பே நம் மனதில் மானசிக நிறைவைத் தந்து நிற்கின்றது வாசிப்பின் இறுதியில்..!

இன்னும் அவர் பல தொகுதிகள் வெளியிட வாழ்த்துகின்றேன்....

அவரின் கையெழுத்துடன் கூடிய (06.08.2011 ) அவரது கவித்தொகுப்பை எனக்கும் அனுப்பி வைத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்...................


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை