நண்பனுக்கோர் மடல்
ஒக்டோபர் 01 ....... என் வாழ்வில் மறக்க முடியாத நாள்....அன்றுதான் நான் ஆசிரியர்த் தொழிலுக்குள் உள்வாங்கப்பட்ட நாள்......பல வருடங்களின் பின்னர் 2010 அதே தினத்தில் தான் முகநூல் பக்கத்துக்குள்ளும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன் .... .அந்த நுழைவு கூட எதிர்பாராமல் கிடைத்தவொன்று !

முகநூலின் ஏற்ற இறக்கங்கள், சாதக பாதகங்கள் எதுவுமே அறிந்திராத, அனுபவமில்லாத நுழைவு என்பதால் இணைக்கப்பட்ட நண்பர்கள் மானசீகமாக என்னைத் தொட்டார்கள்.........அவர்களின் பதிவுகளை ஆச்சரியத்தோடு விழி பருகினேன்.

முகநூல் புதிய அனுபவம்.............அழகான பயணம்............இலக்கிய வார்ப்புக்களுக்கு தாராளமாய் மடி தரும் களம்...........பல முகங்கள் நட்பு பட்டியலை மானசீகமாய் நிறைத்து நிற்க, ............என்..பதிவுகளுக்கான அவர்களின் எண்ணப்பரிமாற்றங்கள் உற்சாகமாக என்னுள் பரவி மனதை இதப்படுத்தியது!ரசித்தேன் என் பயணப்பாதையில் கிடந்த பசுமைகளை !

இருந்தும் மறுபுறம்................. மிக அவதானமாகவே ஒவ்வொரு நகர்வுகளையும் பதிக்க வேண்டுமென்ற எச்சரிக்கையுணர்வு என் பயணத்திற்கு வழிகாட்டியாய் நின்றது...................எல்லோரும் நண்பர்களல்லர்.....நண்பர்கள் வடிவில் வம்பர்களும் உள் நுழையலாம் என்பதற்காக நண்பர்களை மிக அவதானமாகவே தெரிவுசெய்தேன்......

அவ்வாறு நான் தெரிவு  செய்த என் ஆரம்ப கால நண்பர்களுள் மிகவும் நேசத்துடன் பழகியவர்களுள் ஒருவர்தான் றஸீன் றபியூதீன் !

பிறப்பிடம் - இலங்கை அட்டாளைச்செனை
வதிவிடம்  - அபுதாபி

றஸீன்...........!


என் பதிவுகளுக்கு விருப்புக்களையும் , பின்னூட்டங்களையும் தாராளமாக வழங்கி ஊக்குவித்த நல்ல நண்பர்....வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டுமென்ற நினைப்பில் போராடும் இளைஞர்......என்னை விட வயதில் இளையவர் ....இருந்தும் புற வேறுபாடுகளைக் களைந்தெறிந்து விட்டு தன்னகத்துள் நேசம் நிரப்பி என்னுள் நல்ல நண்பராக முகங்காட்டியவர் துன்பங்களைப் பகிர்ந்தோம்........இன்பங்களை ரசித்தோம்.பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி அலைந்தோம். மொத்தத்தில் அன்பு தவிர்ந்த வேறெந்த எதிர்பார்ப்புமில்லாத பிணைப்பு எமக்கு சொந்தமானது.

நல்ல பாடகர்........அவர் குரல் இனிமையில் மனம் நெகிழ்ந்துமிருக்கின்றேன்..... ரசித்துமிருக்கின்றேன்...............கிழக்கு மாகாணம் கலைகளுடன் விளையாடும் மாகாணம் றஸீனும் அதற்கு விதிவிலக்கல்ல .......வேடிக்கையாக அவர் என்னுள் திணித்த கனவொன்றும் எமக்குள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. அது என் கவிதைகளுக்கு அவர் பாடி அதனை இசை ஆல்பம் செய்வது...............
பல நாட்கள் அந்த கனவை வார்த்தைகளால் உயிர்ப்பித்தோம்.........இன்ஷா அல்லாஹ்..................!

என் ஆரம்ப கால நகர்வுகளில் நட்புள்ளங்கள் என் பதிவுகளுக்கு தந்த  ஊக்குவிப்புக்கள் தான் இன்றும் என்னை  சிந்தனைக்குள் குவியப்படுத்தி நிறைய எழுத வைத்துள்ளது. என்னாலும் எழுதமுடியும் எனும் நம்பிக்கையை என்னுள் வார்த்து நிற்கின்றது. ...இன்று முகநூலில் எனக்கென்றும் சிறு நட்பு வட்டங்களை உருவாக்க என் எழுத்துப் பிரவேசம் களம் தந்திருப்பதை நான் மறுப்பதற்கில்லை...........நன்றியோடு என் நண்பர்களை நினைவுகூறுகின்றேன்

சூழ்நிலைகளும், சில நிர்ப்பந்தங்களும், வேலைப்பளுவும், சில எதிர்பார்ப்புக்களும் என நீளும் காரணங்களால் அழுத்தப்பட்ட என் ஆரம்ப கால நண்பர்களில் சிலர் காணாமல் போய் விட்டார்களின்று...அவர்கள் எங்கோ ஓர் மூலையிலிருக்கலாம்............நலமாக வாழட்டும் !

ஆனால் அன்றிணைந்த நட்புப் பயணத்தை இன்றும் பசுமையாக வழிநடத்திச் செல்பவர்களுள் றஸீனும் ஒருவர்....அவர் தொடர்பான ஞாபகங்களை என் வலைப்பூ இன்றேந்துவதன் மூலம் எங்கள் நட்பின் கண்ணியத்தை மெல்ல வாசித்துச் சொல்கின்றது ஏனைய நண்பர்களுக்கும்!

நிறைய, அடிக்கடி வரிகளால் , வார்த்தைகளால் பேசிய நண்பன் திடீரென ஒருநாள் காணாமல் போய் விட்டார்........ஒரு நாள் இரு நாள்.....................ம்ஹூம் .மாதமொன்றும் தொட்டும் அந்த மௌனத்திரை உடைக்கப்படவில்லை...அவர் நிழல் தேடும் என் நிஜம் சோகத்தில் வீழ்ந்து கிடந்தது பிடிவாதமாய் !

என் முகநூல் நண்பருக்காக நான் துக்கப்பட்ட முதல் சம்பவமிது........
முகம் தெரியாத ஓர் நண்பருக்காய் நெஞ்சம் அதிகம் வலித்திடுமோ.......வலித்தது ........அந்த வலியும் உணர்ந்தேன் தாராளமாய்!

நம் வாழ்வில் நடைபெறும் எந்த முதல் சம்பவங்களும் மறக்கப்பட முடியாதவை. அவை நெஞ்சக்கல்வெட்டில் பதிக்கப்பட்டு நம் ஆயுள் முழுதும் நடமாடக்கூடியவை . அதனை அன்றுணர்ந்ததால் இன்றிந்தப் பதிவும் எனக்குச் சொந்தமாகிக் கிடக்கின்றது.........................

இதனை நான் ஏற்கனவே என் முகநூலில் பதிவிட்டாலும் கூட , இன்றேனோ என் வலைப்பூவிலும் அந்த நட்புக்கு ஞாபக சாமரசம் வீசுபவளாய் நான்.........

அந்த நண்பனின் குரலொலி, வார்த்தை நெருடல் காணாத ஓர் பொழுதில் , அவன் என்றொ ஓர் நாள் திரும்பி வருவான் எனும் எதிர்பார்ப்பில் நான் வரைந்த மடலிது !
வருடங்கள் 2 தொடும் நிலையிலும் எல்லாம் நேற்றைய நிகழ்வுகளாய் மனவெளியில் சிந்திக்கிடக்கின்றன!

எல்லாம் நேற்று நடந்தது போல...........நாட்கள் எவ்வளவு விரைவாக நகர்கின்றன........இந்த நகர்வில் எத்தனை அனுபவங்களை உள்வாங்கி எம் நிதர்சன வாழ்வில் பதிக்கின்றோம்.....பல புதிய நண்பர்களின் சேர்க்கை...பழைய நட்புக்களின் பிரிதல்..  முரண்பாடுகள்..சீண்டல்கள்............. நேசப்பகிர்வுகள்....முகநூல் ராஜ்ஜியத்திலும் இவை தாராளமாக இருக்கின்றன...ஏனெனில் நாம் நடமாடிக் கொண்டிருப்பது உயிர்ப்புள்ள உலகம் ....

இந் நகர்வுகள் விதிச்சில்லுகளில் நசுங்க...அவ் விதியின் விளையாட்டோடு நடந்தேறிய சில பொழுதுகளின் அசைவை மனம் பிரமிப்புடன் நோக்குகின்றது, அதன் தாக்கமாய்  , என் விரல்களோ விசைப்பலகையின் எழுத்துக்களுடன் ஸ்பரிக்கத் தொடங்கி விட்டன இதோ....

என் நண்பனுக்கு அன்று நான் முகநூலில் வரைந்த கடிதம்.....
முதல் அனுபவம்.............

நண்பா............!

 எங்கோ ஓர் திசையில் நீ நலமாய் இருப்பாய் எனும் நம்பிக்கையில் உனைத் தேடியவளாய் என் உள்ளத்துணர்வுகளை உன்னிடம் கொட்டித்தீர்க்கப் போகின்றேன்....

நட்புக்கூட வலிக்குமா...........ம் ம் எனக்கது வலிக்குதடா இன்றதிகமாய் !

இந்தக் கனத்த இரவில் என்னிதயத்தின் வலியை நான் பரிமாறிக் கொள்ள அந்த வட்ட நிலா கூட அருகிலில்லையே........நட்புக்கு இத்தனை வலிமையா....
புரியவேயில்லையே நண்பா!

உன் பிரிவின் நெருடல்கள் என் நெஞ்சக்கூட்டைப் பிய்த்தெறியும் ஒவ்வொரு தருணங்களிலும் சதைப்பிண்டங்களினூடே கலக்கும் என் கண்ணீரில்  உன் நினைவுகளல்லவா உயிரைப்பிசைந்து உதிர்கின்றன..!

நண்பா..............வேடிக்கையான உன் பேச்சுக்களை வாடிக்கையாக தினம் தினம் என்னுள் பதிக்கும் நீ.........இன்றேனோ  மௌனத்தின் ஆதிக்கத்துக்குள் நம் நட்பை விசிறிக் கொண்டிருக்கின்றாய்..உன் நினைவுகள் தரும் என் கதறலின் ஓசை கேட்டு இந்தப் பிரபஞ்சமே வான் முகிலைக் கருக்கொட்டச் செய்து என் சோகங்களின் வெம்மையைத் தணிக்க முயலுகையில், நீ மட்டும் அந்த அரபிக் கடலோர அலைகளைக் கூட கால் நனைக்க விரும்பாதவனாய் எங்கோ தொலைபுள்ளியை வெறித்து பார்க்கின்றாய் என்னைப் புறக்கணித்தவனாய் ................யாரடா உனக்கு கற்றுத் தந்தது இந்த மௌனத்தை.........அறுத்தெறி உடனே !  அனல் கொட்டும் உன் பிரிவால் என்னுயிரல்லவா உருக்குலைந்து சிதைகின்றது..........பிரிவின் கண்ணாமூச்சியாட்டத்தில் நம் பெயர்களை இணைத்துவிட்டு நீயோ சிறு கிள்ளையாகி அந்த ஆட்டத்தை ரசிக்கின்றாயே !

நீ பிரிந்தாலும் கூட உன் குரல், உன் அமைதியான முகம் இன்னும் என் மனக் கண்ணை விட்டு அகலாத நிலையில் கண்ணீரில் நனைந்து கிடக்கின்றது...உன் நட்பின் பிரிவின் ஒவ்வொரு கணங்களும் உன்னையல்லவா ஞாபகப்படுத்துகின்றன..

உனக்கான என் வேதனையை நுகர்ந்திட நீயிப்போ இல்லை என்பதைப் புரிந்தும் கூட என்றோ ஓர் என் மனக் கஷ்டத்தை பாசத்துடன் பகிரும் பதிவாக இது இருக்குமென்பதால் இதனை உனக்கு சமர்ப்பிக்கின்றேன்............

அன்பை அடித்தளமாக்கி வரையப்படும் நட்பின் ஆழம், வலிமை ரொம்ப அதிகம்தான்......என்னால் உணரமுடிகிறது..அந்த அழகிய நட்பை இலேசில் உடைக்கும் போதுதான் மனசு வழுக்கி தீக்குளியலுக்குள் விழுகின்றது.......

ஓர் கணம்.........ஓர் நொடி.............நீயென்னைப் பிரிவதையுணர்ந்த போது என் வாழ்வே மூச்சற்றுப் போன உணர்வு..........துடித்தேன் ......... நண்பா!
அந்த துடிப்பு என்னை மரணத்தின் விளிம்பு வரை இழுத்து சித்திரவதை செய்ததே !

உன் முகம் நான் நேரில் காணவில்லை. இருந்தும் உனது நட்பு கலந்த வெளிப்படையான உண்மைத்தன்மையான பேச்சே எனக்கு உன்னைப் பிடிக்கக் காரணமானது........நான் விரும்பியதை இணைத்தும், விரும்பாததை தவிர்த்தும் நீயுன் நட்பை என்னுள் வெளிப்படுத்திய விதம் தான் இன்னும் என் மனசைப் பிராண்டி உனக்காக என் கண்ணீரைத் தாரையாக்கி தரையைக் கூட ஈரப்படுத்துகின்றது....

நண்பா.............!
உனக்குள்ளே உறைந்து கிடக்கும் அந்த மன அழுத்தங்கள் என் மனவிழிக்குள் தெரியாமலே போய் விட்டனவே எனும் கவலையின் ஆக்கிரமிப்பில் சிதைகின்றேன்........

புரிந்துணர்வுதானே நட்பு ! அந்த அன்பு தான் என்னை உனக்காக பாசத்துடன் அழவைக்கின்றது..உனக்காக நிறைய அழுதுவிட்டேன்.........விரைந்து வா.....தோழமையில் பூத்த உன் முகம் காண காத்துக்கிடக்கின்றேன் !

நண்பா..............உயிரோடு உறைந்து விட்ட நட்பை, அன்பை யாராலும் மறைக்கவும் முடியாது ...மறுக்கவும் முடியாது..வெறுப்பேற்றவும் முடியாது !
உன் வாழ்வுக்காகக் கரையும் ஒவ்வொரு விநாடிக்காகவும் நான் பிரார்த்திப்பேன் !

நண்பா.....
தொலைவோடு நீயின்று - என்
நிழலோ உன் நிஜங்களுடன்  !


2 comments:

  1. Thanks for honoring me Janzy always its nice to read you writings

    ReplyDelete
    Replies
    1. உங்க நட்பு தந்த உணர்வோட்டமிது றஸீன்......நன்றி !

      Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை