About Me

2012/06/11

எப்போதும் நீ !


இப்பொழுதெல்லாம் 
என் சரித்திரங்களில்
உன் சர்வாதிகாரமே பேசப்படுகின்றது !
அடிக்கடி 
என் தனிமைப் பொழுதுகளில் - நீ
மட்டும் நிரம்பிக் கொள்வதால்!

இப்பொழுதெல்லாம் 
நம் சந்திப்புக்களின் பதிவுகளில் 
ரம்மியங்களின் கணக்கெடுப்புக்களே
ரகஸியமாய் முகங்காட்டுகின்றன!

இப்பொழுதெல்லாம் 
நம் நரம்பு மண்டலங்களில்
அவஸ்தைகளின் அஸ்திவாரங்கள்
முகப்புத் தூணாய் முறைக்கின்றது
நாளைய தாங்கலுக்காய்!

தொலைவுகளின் அலைவுகளில்
தொங்கிக் கொண்டிருக்கும் - நம்
இருப்பில் கூட 
அன்பின் நிழல்
நளினமாய் அழகு காட்டுகின்றது
நாளைய நம் வரலாற்றுக்காய்!

எம் மூச்சுக்குழலின்
வளிப்படலங்களில் 
உன் பேச்சின் அதிர்வுகள்
நேச முத்தங்களாய்- என்
நெஞ்சைத் தட்டிச் செல்கின்றது!

நம்  
ஞாபக விழுதூன்றலில்
விழித்திரைக் காட்சிகள் 
அடிக்கடி உயிர்ப்பிக்கப்படுகின்றன
அழகான வேள்விக்காய்!

உன் விரலிடுக்குப் பேனாவாய்
எனை நீயேந்தி - நம்
உணர்வுகளை கவியாக்கும் போதெல்லாம் 
உருகும் மெழுகாய்
உறைந்து கிடக்கின்றேன் உனக்குள்
உன் கவியை ரசிக்க!

இப்பொழுதெல்லாம்
பாய் விரித்த புல்வெளியில்
படுத்துறங்கும் பனித்துளியாய்
சிறைப்பட்டுக் கிடக்கின்றேன்- நம்
ஸ்நேகப் பரப்பின் 
வெளியோரங்களில்!

நம் மனநீதிமன்றலில்- என்
வாழ்க்கை நீயென்று

என்னுயிர் கொடுத்த மனுக்களுக்காய்
மானசீகத் தீர்ப்புத் தந்தாய் - என்றும்
நீ என் வரமென்று!

ஜன்ஸி கபூர் 




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!