About Me

2012/06/14

முதுமையினில்!

நம் வசந்த வாழ்வின்
கடைசி வரிகள் 
மறுமைத் தேடலுக்கு
மனுப்போடும் விண்ணப்பம்!

நம் வாலிபப் பாறையைக்
பெயர்த்தெடுத்து - காலம்
வரையும்
கடைசிச் சிற்பம்!

விழிச் சுருக்கத்தின் கிறக்கத்தில்
இறுகிக் கிடக்கும் சோகம் 
நம் தளர் நடையிலோ
பாதச்சுவடு
உலர்ந்து வெடிக்கும்!

வாழ்க்கை தேசம்
தாழ்போட்டமிழும்  
ஆன்மீகக் குளியலுக்காய்!
சுவாச நீரோட்டமோ 
சுகம் காட்டும் நோய்களுக்கு!

மனப்புலத்தின் நிழலிலே
மங்கிப் போகும் ஞாபகம் !
ஐம்புலன் ஒலிபரப்பில்
இயலாமை உலாவாகும்!

வாலிப மிடுக்கெல்லாம்
தொலை நோக்கி வழிந்தோடும் 
அநுபவங்களின் வீரியங்கள்
வந்தமரும் வாழ்வினிலே!

வேரறுந்த கனாக்கள்
வேவு பார்க்கும் உறக்கத்தை 
விரக்திக் களைப்போ
உயிரை அறுத்துப்போகும்!

இரங்காத உறவுகளின் இம்சையில்
இதயம் இளைப்பாறும் 
உறக்கத்தின் அருமை
ஏக்கத்தில் வீழ்ந்து கிடக்கும்!

காலத் தேய்வில் வயசோ
நழுவிப் போக 
வீணாய்ப் போன விழுதாய்
நீண்ட தனிமை
கதறித் துடிக்கும்!

நரை வடுக்களுடன்
நாடியும் தளர்ந்து 
மூப்புத் திரையோட்டத்தில்
மூச்சும் அந்நியமாகிப் போகும் !

விறைத்த மனசுக்குள்
சிறைப்பிடிக்கும் ஆசையொன்று!
மறை கழற முன் - என்
ஆவி பிரியாதே இப் புவிதனை நீங்கி !


ஜன்ஸி கபூர் 




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!