About Me

2012/06/13

ஒளி நாயகன் !

இந்தப் பிரபஞ்சத்து மேடையின்
ஒளி நாயகன் நீ! - இருந்தும்
உன் பார்வையின் செழுமையில்
வெட்கித்துக் கிடக்கிறது என்னிளமை!

மேகங்களுள் லொள்ளு விடும் - உன்
மோகன லீலைகளிற்காக
பலயுகங்கள் தவமிருக்கின்றேன் - நீ
இன்னும் எட்டா தொலைவினில்
என் தொல்லையின்றி இருக்கின்றாய்!

பஞ்சணைக்குவியலுக்குள்
பரிதாபம் காட்டும் உன் முகமெனக்குள்
பதிவானதே பசுமரத்தாணி போல!

உன் சந்தனமேனியின்
கதிர்க்கிறக்கத்தின் மயக்கத்தில் - நான்
எப்பொழுதும் சயனிப்பதால்
அடுத்தவர் பார்வையில் நம் சந்திப்புக்கள்
இன்னும் இணையா சமாந்திரங்கள்!

உனை நினைந்து நினைந்து புகையும்
ஏக்க வெம்மைத் திரட்சி
கன்னத்திரட்டில் பருக்களாய் முறைக்கிறது
கறைப்படிவுகளாய் பிறர் பார்வையில்!

உன் தனிமைச் சந்திப்பிற்காய் நான்
காரிருளில் காத்துக்கிடக்கின்றேன் - நீயோ
என் விழிக்கனவுகளையல்லவா
கிள்ளியெறிந்துவிட்டு உலா வருகின்றாய்
பகலில்!

நம் தேசமொன்றாகும் போது - மன
இருப்புக்களில் மட்டுமென்ன பேதமை!
ஆதவனே நிலாவென் மனம்
உன் வசமே
உந்தன் காதல் வேண்டுமென்னாளும்!

ஒளியாதே - நான்
உலா வரும் இரவினில்!


- Jancy Caffoor-

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!