About Me

2012/06/12

அடிக்கடி நீ !

இப்பொழுதெல்லாம்
அடிக்கடி நீ 
காணாமல் போகின்றாய்!

நீ தந்த நினைவுகளும்
எனக்கான உன் கவிதைகளுமே 
என் நிழலோடு அண்டிக்கிடக்க
அடிக்கடி நீ 
காணாமல் போகின்றாய்!

நம் குறும்புச் சண்டைகளும்
அன்புப் பரிமாற்றங்களும் 
அலை அலையாய் நெஞ்சில் மோதிக் கிடக்க
அடிக்கடி நீ 
காணாமல் போகின்றாய்!

உன் வேடிக்கையின் வாடையில்
மனம் வீழ்ந்து தினம் ரசிக்க 
ஏக்கங்களும் தாக்கங்களும்
சேமிப்பாய் என்னுள் வீழ
அடிக்கடி நீ 
காணாமல் போகின்றாய்!

விழியில் உன்னன்பு மொழி பேச 
விரும்பியெடுப்பேன் உனக்கான
கைபேசியை 
வார்த்தைகளால் பாகாகி
கோர்த்திடுவாய் என்னுள் பாசமதை!
இருந்தும் 
இப்பொழுதெல்லாம் அடிக்கடி நீ
காணாமல் போகின்றாய்!

அடுத்தவர் எனை வம்பு செய்கையில்
சினந்தே கடியும் உன்னன்பில் 
வியந்தே இணையும் என்னுசுரை
தனிமைப்படுத்தியே - நீ
அடிக்கடி காணாமல் போகின்றாய்!

"சட்" டில் சட்டென கவிபேசி 
ஸ்கைப்பில் சிரிப்போடு மனம் வருடி
என் தேசத்தின் எல்லைகளில் விரிந்து நிற்கும்
நீ !
இப்பொழுதெல்லாம்
அடிக்கடி காணாமல் போகின்றாய்!

நிலவினழகை ரசித்த நம்முள்
அமாவாசையாய் சிறு ஊடல்!
உயிரறுக்கும் உன் மௌனம்
எனை தினமறுக்க 
அடிக்கடி நீ 
காணாமல் போகின்றாய்!

கனவுக்குள் எனை அமிழ்த்தி நிதம்
உன் கவிக்குள் என்னுருவம் காணும்
நீ....இப்பொழுதெல்லாம்
அடிக்கடி காணாமல் போகின்றாய்!
என்னுணர்வறுத்தே மறைகின்றாய்!

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!